Wednesday, December 2, 2009

பழைய நினைவுகள் - 1

1990 ஆம் வருடம்.. மார்ச் மாதம்...

ராணுவத்துக்கு ஷார்ட் சர்வீஸ் கமிஷன் செலக்ஷனுக்கு போபால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.. நான் செலக்ட் ஆகப்போவதில்லை என்று நன்கு தெரியும்..

இருந்தும் ரயில் ஏறினேன். இது எனது நான்காவது ரயில் பயணம். பெங்களூரிலிருந்து ரயில் கிளம்பியது. அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்.. கூட சில பல ராணுவ வீரர்கள். பயணம் முக்கியமில்லை..

போபால் சென்று சேர்ந்த பின் முதலில் இரு எழுத்துத் தேர்வுகள்..இரண்டிலும் தேறிய பிறகு 5 நாட்கள் லீவு...அரசாங்க விருந்தாளிகளாக்கப்பட்டோம்..

வேலைக்கே சேரவில்லை அதற்குள் லீவா என்று அதிசயப் படாதீர்கள்.. இது அரசு வேலைதான்... இருந்தாலும்... எங்களுக்கு தேர்வுகளை நடத்துபவர் லீவு அதனால் 5 நாட்கள் எங்களை தங்க வைத்து அடுத்த பேட்ஜுடன் தேர்வு...

தினம் காலை எழுந்து டிஃபன் சாப்பிட்டு விட்டு ஊர் சுற்றி வந்து மதியம் நன்கு சாப்பிட்டுவிட்டு மறுபடி ஊர் சுற்றி இரவு நன்கு வயிறு புடைக்க சாப்பிட்டு தூங்குவதுதான் வேலை.. மேனே பியார் கியா படம் பார்த்தோம்.. ஒரு பிர்லா மந்திர் சென்று வந்தோம்.. பழமையான ஒரு ஜூம்மா மசூதி இருந்தது அதிலும் சென்று தொழுகை செய்து விட்டு வந்தோம்..

அங்கே ஆட்டோ வை டாக்ஸி என்றார்கள். எனக்கு ஹிந்தி சுத்தமாக தெரியாது.. ஷோலே, குர்பானிக்குப் பிறகு நான் பார்த்த மூன்றாவது ஹிந்திப்படம் மேனே பியார் கியா!.

அங்கே நான் கற்ற மலையாளப் பாட்டு..

சமயமாம் ரதத்தில் ஞான் ஸ்வர்க்க யாத்ர போகுன்னு
என்சுதேசம் கான்பதின்னாய் ஞான் தனியே போகுன்னு (சமய)

ஆகயல்ப தூரமாத்ரம் ஈ யாத்ர போகுண்ணு
ஆகயல்ப நேரமாத்ரம் சக்ரம் மும்போட்டோடுண்ணு (சமய)

ஈ ப்ரப்ஞ்ச சுகம் தேடான் இது வல்ல சமயம்
என்சுதேசத்தின் சன்னிதானம் யேசுவிண்டே நாமம் (சமய)

இதையும் விடுங்கள்.. முக்கியமான விஷயம் இப்போதுதான் வருகிறது..

ஜூம்மா மசூதியில் இருந்து வரும்போழுது திடீர் நண்பர்களான நாங்கள் ஐவரும் தமிழில் பேசிக்கொண்டே வந்தோம்.. அதிகாரிகளின் பங்களாக்கள், குட்டி பொமரேனியன் நாய்.. பெரிய அல்சேஷன், வாயில் காக்கும் பணியில் இருந்த சிப்பாய் எவரும் எங்கள் கிண்டலில் இருந்து தப்பவில்லை.. பள்ளிப் படிப்பிற்கு பின் என்.டி.ஏ முறையில் வரும் கடைநிலைச் சிப்பாய்கள் பலர் இப்படி மேஜர்களின் வீட்டுப்பணிகளை செய்வதைப் பற்றி எக்கச் சக்க கிண்டல் .. அப்போதுதான் எதிரே வந்தான் அவன்..

ராணுவத்தின் அடையாளமாய் மண்டை தோல் பச்சையாய் தெரியும் கிராப். ஒல்லியாய் ஆனால் உறுதியாய் உடல் வாகு.. 20 வயது இருக்கலாம்.. கையில் இருந்த சங்கிலியின் மறுமுனையில் பளீர் வெள்ளையில் ஒரு பொமரேனியன் நாய்..

'இவனப் பார்ரா இங்க வந்து நாய் மேய்க்கிறான்" சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மேலும் சிரிப்பு,,,

"என்ன பண்றது எல்லாம் தலைவிதி" பதில் வந்து விழுந்ததும் சிர்ப்புகள் சட்டென பவர் கட்டாகி அனைவரும் முகமும் இருண்டன...

அப்புறம் அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பேச அவர் பெயர் முருகன் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதும் எங்களுக்குத் தெரிய வந்தது (நல்ல வேளை கைல அருவா இல்லை )

அப்ப தெரிஞ்சுகிட்டோம்... வாயைக் கட்டணும் னு...

மிச்சம் என்ன டெஸ்ட் முடிஞ்சு முதல் வகுப்பு ரயில் கட்டணம் பெற்றுக் கொண்டு திரும்ப வந்தோம்...

No comments:

Post a Comment