Tuesday, December 1, 2009

பூட்டிய கதவு.

1991, ஆகஸ்டு மாதம். மும்பை.

நான் நெல்கோ கம்பெனியில் சேர்ந்த புதுசு. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் தானே ஈஸ்டில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தோம். நான் தான் முன்னால நின்னு வாடகை பேசி முடிச்சேன்..

இராமகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ். அப்பதான் கட்டி முடிக்கப்பட்ட புது கட்டிடம். மாசம் 1000 ரூபா வாடகை, 3000 ரூபா அட்வான்ஸ்.

7 வது மாடியில் எங்க அபார்ட்மெண்ட். அது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வீடு (உங்க கற்பனைக் குதிரையைக் கடிவாளத்தை இறுக்கிப் பிடிச்சு நிறுத்துங்க. அது இல்லைப் பிரச்சனை).

கதவைத் திறந்தால் ஹால். முதல் மூணடி தாண்டினால், கீழ் வீடு தெரியும். கண்ணாடி மாதிரி தளம் இல்லிங்க. தளமே கிடையாது. 6 வது மாடி அபார்ட்மெண்டும் 7 வது மாடி அபார்ட்மெண்டுக்கும் அப்படி ஒரு கனெக்ஷன், 4 மாடிக்கு அப்ரூவல் வாங்கிட்டு ஏழு மாடி கட்டி இருக்காங்க. முனிசிபாலிட்டியை ஏமாத்தி அப்ரூவல் வாங்கறதுக்காக அப்படி ஹாலுக்கு கான்கிரீட் போடாம 7 மாடியை நான்கு மாடியா காட்டி இருந்தாங்க. அந்த மூணடி ஹாலிலே உள்ள போனா ஒரு ரூம், கிச்சன் அப்புறம் பாத்ரூம் இவ்வளவுதான் வீடே!..

முதலில் நான் தான் குடியேறினேன். ஒரு வாரம் தனிக்காட்டு ராஜா. எங்களுக்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறை. அந்த வியாழக் கிழமை மாலை கார்த்தி எங்கிட்ட வெள்ளிக்கிழமை நைட் லக்கேஜ் எடுத்துகிட்டு நானும் வந்திடறேன் என்று சொன்னான். அதுவரை அவன் தங்கி இருந்தது மும்பை வீ.டி. அருகில் மஸ்ஜித் பந்தரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கட்டிடத்தில் இருந்த இண்டஸ்டிரியல் டைமண்ட்ஸ் இண்டியா லிமிட்டெடுடைய கெஸ்ட் ஹவுஸில், அதன் கேட்டை இரவூ 10 மணிக்கு மூடி விடுவார்கள். அப்புறம் அடுத்த நாள் காலையில் தான் திறப்பார்கள்.

வெள்ளிக்கிழமை எனக்கு கார்த்தி வருவது சுத்தமா மறந்து போயிடுச்சி. நான் ஒன்பது மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டு தூங்கி விட்டேன்..

அந்த வீட்டுக் கதவுக்கு உள்பூட்டு, அதாவது கதவிலேயே பொருத்தப் பட்ட பூட்டு உண்டு. ஆனால் அதற்கு சாவிதான் இல்லை, அதனால் வீட்டுக்குள் இருக்கும் போது உள்பூட்டையும் வீட்டிற்கு வெளியே செல்வதானால் தனிப்பூட்டையும் உபயோகித்தோம்.

சனிக்கிழமை காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு ஆஃபீஸ் பஸ் பிடிக்க போனேன். என்ன ஆச்சர்யம் கார்த்தி பஸ் ஸ்டாண்டில் பெட்டி படுக்கையுடன். அடடே கார்த்தி நீ தாதர் பஸ்ல தானே வருவ, தாணா எப்படி வந்தே என ஆச்சர்யமாய் கேட்டேன்.

கார்த்தி என்னை எரித்து விடுவது போலப் பார்த்தான். .ஏண்டா ராத்திரி 10:30 ல இருந்து 11:30 வரைக்கும் கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டறேன் திறக்காம இப்ப கேள்வி கேட்கறயா? நான் தான் வர்ரேன்னு சொல்லி இருந்தன்ல.. ஏன் பூட்டு போட்டே? கடைசியில இந்தப் பாடாவதி லாட்ஜில இடங் கெடச்சது பிழைச்சேன். இல்லாட்டி ரெயில்வே பிளாட்ஃபார்ம்தான் என்று தாளிச்சுட்டான்..

ஸாரி எனக்கு மறந்துருச்சி.. சத்தியமா வேணும்னு செய்யலை.. எனக்குத் தூக்கம் வந்தா ஒண்ணும் தெரியாது அப்படி இப்படின்னு கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டுகிட்டேன்..

இதோட கதை முடிஞ்சது அப்படின்னு நினைச்சிங்களா? இல்லை. இன்னும் இருக்கு.

================================================================================================

ஆறு மாசம் கழிந்தது.. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதுமாதிரி ஒத்த மனசிருக்கறவங்க கெடைக்கிறது ரொம்ப கஷ்டம். தினம் காலை ஆஃபீஸ் போவோம். மாலை ஆஃபீஸ் முடிஞ்சதும் தாதர் போவோம். அங்கிருந்து வி.டி, யோ, மஸ்ஜித் பந்தரில் இருக்கும் மெடல் பவுடர் கம்பெனி (மெப்கோ, அட ஆமாங்க பாம்பே ப்ராஞ்ச் ஆஃபீஸ் எங்களுக்கு சொந்த வீடு மாதிரி, அத்தனை ஸ்டாஃபும் எங்க ஃப்ரண்டஸ்), இண்டஸ்டிரியல் டைமண்ட் கம்பெனி எல்லாம் போவோம். எக்கச்சக்கமா சினிமா பார்ப்போம். நைட் மாதுங்காவில் சாப்டுட்டு தானே வர ராத்திரி பத்துப் பதினோரு மணி ஆயிடும். அப்புறம் தூக்கம், மறுநாள் ஆஃபீஸ்.. வெள்ளிக்கிழமையான பாம்பேயில் எங்கேயாச்சும் போவோம். சுத்துவோம்...

சரி கதைக்கு வருவோம்.. அன்னிக்கும் அப்படித்தான், மாதுங்காவில் சாப்டுட்டு தானே வந்து உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம். கார்த்தி ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டான். நானும் சந்துருவோம் ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம் அப்புறம் கதவைப் பூட்டிகிட்டு தூங்கிட்டோம்.

அடுத்த நாள் காலையில நான் குளிச்சுட்டு வெளிய வந்தா கதவு தட்டற சத்தம் வந்தது. அட யாருடா அது இந்த நேரத்தில அப்படின்னு கதவைத் திறந்து பார்த்தா கார்த்தி நின்னுகிட்டு இருந்தான். கண்ணு செக்கச் செவேர்னு இருந்தது. பெர்முடாஸ் டவுசரும் டீசர்ட்டுமாய் முகமெல்லாம் ஜிவுஜிவுன்னு எக்கச்சக்கமாய் கோபம்.

என்னடா காலன்காத்தால எங்க போயிட்டு வர்ர என்று கேட்டதும் தான் தாமதம் என்னடா, இதோ ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுதானே போனேன்.. அரை மணி நேரத்துக்குள்ள அப்படி என்ன தூக்கம், கதவை உடைச்சா கூட எந்திரிக்க மாட்டீங்களா? நீ தான் கும்பகர்ணன்னா சந்துரு அதுக்கு மேல இருக்கானே,

போனதடவையாவது கைல காசு இருந்துச்சி. லாட்ஜில போய் தூங்கினேன்.. ஃபோன் பண்ணி எம்ப்டி பாக்கெட்டோட இருந்தண்டா, மொட்டை மாடியில போய் தூங்கி எந்திரிச்சி வர்ரேன்னு சொன்னான். அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆயிரக்கணக்கான ஸாரி சொன்னாலும் பாவமில்லையா அவன்..

கதை முடிஞ்சிருச்சின்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. மிகப் பெரிய ஆண்டி கிளைமேக்ஸ் இருக்கு.. கொஞ்சம் பொறுங்க சொல்றேன்.

================================================================================================

ஒருசமயம் இளங்கோ வீட்டிற்கு வந்திருந்தான். இளங்கோ கார்த்திக்கு நண்பனின் நண்பன், பூனாவில் வேலை செஞ்சிகிட்டு இருந்தான். வெள்ளிக்கிழமை எல்லாம் ஊர் சுத்தி பொழுதைக் கழிச்சுட்டோம். . சனிக்கிழமை மதியம அவனுக்கு ட்ரெய்ன். மிக விளக்கமாக அவனிடம் பூட்டைக் கொடுத்து வீட்டைப் பூட்டி சாவியை கதவுக்கடியில் போட்டுவிட்டு போய்விடச் சொன்னோம். (இல்லை இல்லை அவன் சாவியைக் கொண்டு போகலை. கொண்டு போனாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆளுக்கொரு சாவி வச்சிருக்கோம். அது நண்பர்களுக்குன்னு வச்சிருந்த எக்ஸ்ட்ரா சாவி)

சாயங்காலம் திரும்ப வந்தோம். இன்னிக்கு என்னன்னா மூணு பேரும் தனித்தனிய பிரிஞ்சுட்டோம். எதோ வேலை இருக்குன்னு கார்த்தி டைரக்டா தாணே போயாச்சு (ஆஹா மாட்டினீங்களான்னு நீங்க ஆர்வத்தோட கேட்கறது புரியுது) சந்திரு அவங்க அத்தை வீட்டுக்குப் போயிட்டான், நான் தாதர் போய் அங்கிருந்து மெடல் பவுடர் கம்பெனிக்குப் போயிட்டேன்.

இராத்திரி 8 மணி, மாதுங்காவில சாப்பிட்டு விட்டு தாணே வந்தேன், மனசில ஏதோ தப்பு நடந்திட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வீட்டுக்கு போனேன். கதவு நீங்க நினைக்கிற மாதிரியே தான் உள் பூட்டு பூட்டி இருந்தது. தட்டினேன்த் தட்டினேன் கதவு உடையற மாதிரி தட்டினேன். யாருமே திறக்கல. என்ன செய்யறதுன்னு தெரியலை. மொட்டை மாடிதான் கதின்னு உறுதி ஆயாச்சு.. சரின்னு போய் ஒரு டீ சாப்டுட்டு வரலாம்னு வெளிய வந்தேன்.. கேட் பக்கத்தில வரும் போது சந்துரு எதிரில் வந்தான். அவனுக்கு கதை முழுசும் சொன்னேன். அவனும் நானும் மறுபடியும் போய் ஒரு அரைமணி நேரம் தட்டு தட்டுன்னு தட்டினோம். கதவு திறக்கலை. சரி 10:00 மணிக்குள்ள மஸ்ஜித் போயிடுவோம்னு சொல்லி நானும் சந்துருவும் கிளம்பி தாணே ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து கார்த்தி வெளியே வந்து கொண்டிருந்தான்,,,


================================================================================================

அப்ப நீ இல்லையா உள்ள? மூணு பேரும் ஒரே குரலில் அதிர்ச்சியா கேட்டுகிட்டோம். ஒரு வேளை உடம்பு சரியாயில்லாத இளங்கோ உள்ளயே மயங்கிட்டானோ. அவனுக்கு எதாச்சும் ஆகிட்டா என்ன செய்ய? இன்னொரு முறை போய் முயற்சி செய்வோமேன்னு திரும்பி வந்தோம். இளங்கோ உள்ள மயங்கிக் கிடப்பான்ங்கிற நினைப்பே எங்களுக்கு பயமா இருந்திச்சி. போய் இன்னும் ஒரு மணி நேரம் முயற்சி செய்யலாம்.. எதாவது செய்தே ஆகணும் என்கிற நிலைமைக்குப் போயாச்சு. இன்னிக்கு கதவை உடைச்சாவது உள்ளே போய்த்தான் ஆகணும் என்கிற முடிவெடுத்தாச்சு. சூடா டீ குடிச்சிட்டு மூணு பேரும் விறுவிறுன்னு வேகமா அபார்ட்மெண்ட் வந்தோம்.

கீழ் வீட்டில யாராவது இருந்தாலாவது அவங்க ஹால்ல இருந்து எங்க ஹாலுக்கு அப்படி இப்படி ஏறித்தாவிப் போகலாம். ஆனால் எங்களுக்கு கீழ ரெண்டு ஃப்ளோரும் காலி. யாருமே இல்லை. போய் படபடன்னு கதவைத் தட்டினோம். டொம் டொம்னு முட்டி மோதினோம் பில்டிங்க்ல இருந்த எல்லாரும் முழிச்சிருப்பாங்க.. நிறைய பேர் மேல வந்துட்டாங்க. எங்களைச் சுத்தி ஒரே கூட்டம். க்யா ஹூவா? வாட் ஹேப்பண்டு என்று ஒரே இரைச்சல்.. நாங்களோ பயங்கர டென்ஷனில் இருந்தோம். ஒரு பக்கம் அவமானமாய் இருந்தது. மறுபக்கம் பயமாய் இருந்தது. அப்போது....



================================================================================================

கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த அவர் க்யா ஹுவா எனக் கேட்க,
"ஹமார தோஸ்த் அந்தர் பஸ்கயா, தபியத் கராப் ஹை! சாபி நஹிஹே" என சொன்னோம்

ஜரா ஹட்டோ என முன்னால் வந்தவர் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தார். கதவு என்னவோ மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி டக்குன்னு திறந்திருச்சி.. உள்ளே போய் பார்த்தா இளங்கோ இல்லை, பூட்டு நாங்க வச்ச இடத்திலேயே இருந்தது. அவன் உள்பூட்டை ரிலீஸ் செய்து கதவைப் பூட்டிட்டு போயிட்டான் படுபாவி..

சரி சரி.. உங்க கேள்வி புரியுது உங்க வீட்டுச் சாவி உங்க கிட்டயே கிடையாது அப்புறம் எப்படி கீழ் வீட்டுக்காரங்க கிட்டன்னு கேட்கறீங்க. அது எங்க வீட்டுக் கீ. இல்ல. V.I.P சூட்கேஸ்ல சைட் லாக் போட தருவாங்களே ஒத்தைப் பல் சாவி.. அதே சாவிதான்.

அவ்வளவு மட்டமான பூட்டு அது, இது தெரியாம நாங்க அதை ஒரு திண்டுக்கல் பூட்டாட்டம் நெனச்சி, அதுவும் பாவம் கார்த்தியை படாத பாடு படுத்தி...

அடுத்த நாள் இளங்கோ ஃபோன் பண்ணினான். அவனைத் திட்டனும்னு தோணலை..

மூணு மணி நேரப் போராட்டத்திற்கு அவனைத் திட்டறதா., இல்லை ரொம்ப நாளா எங்களை வில்லனாக்கிய அந்தப் பூட்டுப் பிரச்சனையை தீர்த்ததற்காக பாராட்டுவதா?

சூட்கேஸ் சாவிகள் எங்க பிரச்சனையைத் தீர்த்து கார்த்தியை காப்பாற்றின.

ஆமாம் இளங்கோ நல்லவரா - கெட்டவரா?

================================================================================================

No comments:

Post a Comment