Sunday, December 6, 2009

சித்தகிரி!!!

கொடைக்கானல், இந்த பெயரை கேட்டாலே உடம்பு குளிரும், சுவாசக் குழாயில் யூக்கலிப்டர்ஸ் மர வாசனை நிரம்பும், கண்கள் ஜீல்லிடும், மனது அமைதியாக ஒரு நிலைப்படும். இந்த எல்லா உணர்ச்சியும் கொடைக்கானலை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு மட்டும் தான். இதுவரை அதை பார்த்திராதவர்களுக்கு அது வேறு மலைப் பிரதேசம் அவ்வளவே. வாசு முதல் முறையாக அங்கு செல்கிறான் அதுவும் தனியாக டிசம்பர் மாசத்தில், நண்பர்களின் யோசனைப் படி தான் இங்கு வந்தான். அவன் கொடைக்கானலை சுற்றி பார்க்க ஒரு பிரைவேட் வேனில் பல பயணிகளுடன் இவனும் சென்றான், அவன் கூட வேனில் பெரும்பாலும் வயதானவர்கள்,வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், வேன் புறப்பட்டது. லேசாக மழைத் தூரல் போட்டுக் கொண்டே இருந்தது. வாசுவுக்கு ஜன்னல் ஓர இடம் கிடைத்தது. வாசு அங்குள்ள காட்சிகளை வெகுவாக ரசித்த படி வந்தான். கையிடு ஒவ்வொரு தளமாக விளக்கிக் கொண்டே வந்தான். இருநூறு வருடமாக இருக்கும் சர்ச்சு, ஐநூறு வருடம் வயதான மரம் என்று பல. வேன் ரோட்டின் ஓரமாக நின்றது, முன்னாடி உக்கார்ந்து இருந்த கையிடு எழுந்து பயணிகளிடம் திரும்பினான்,

"சார் அதோ தெரியுது பாருங்க அந்த மலைப் பேரு மதிக்கெட்டாஞ்சோலை, அந்த மலை ஒரு ரிசர்வ்டு ஏரியா, அங்க நிறைய விதமான அதிசயங்கள் இருக்கு. மூலிகைகள், அதிசய விலங்குகள், பறவைகள்ன்னு நிறைய இருக்கு. அங்கே இதுவரைப் போன மனிதர்கள் திரும்ப வந்ததே கிடையாது, காரணம் என்னனு ஒழுங்கா தெரியல, சிலப்பேர் விலங்குகள் கொன்று விடும் சொல்றாங்க. மீதிப் பேர் அங்கே போன மனம் கெட்டு அங்கேயே இருக்க தோணும்னு சொல்றாங்க, அதனால தான் இந்த இடத்துக்கு மதி+கெட்டான்+சோலையினு பேர் வச்சி இருக்காங்க, இப்போ இது ரிசர்வ்டு ஏரியா" என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் அந்த கையிடு.

பயணிங்கள் அனைவரும் அந்த வேனைவிட்டு கீழே இறங்கிச் சென்று கொஞ்ச தூரத்தில் இருந்த மலையை பார்த்தனர். வாசுவும் இறங்கி பார்த்தான், அந்த மலை ஒய்யாரமாக நின்று இருந்தது, அதில் இருந்து வினோதமான சத்தங்களும், மூலிகையின் வாசனையும் வந்தது. அனைவருக்கும் அந்த மலையை பார்க்க கொஞ்சம் திகிலாக தான் இருந்தது. வாசுவுக்கு மட்டும் அந்த திகில் ஆர்வமாக மாறியது. அந்த மலைக்கு போக வேண்டும் என்று தான் இவன் வெளிநாட்டில் இருந்து வந்தான். கையிடிடம் காசைக் கொடுத்து விட்டு பாதியிலே இறங்கிக் கொண்டான். வேன் புறப்பட்டது. யாருமே அங்கு இல்லை. இவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கு இருந்த வேலியை தாண்டி உள்ளே சென்றான். வாசு ஒரு ஓர்னித்தாலஜீஸ்ட் (பறவைகளை ஆராய்பவன்) வயது 30, இவன் ஒரு வித்தியாசமானவன், விதிவிலக்கானவன் எல்லாரையும் ஒப்பிடும் பொழுது இவன் சில விஷயங்களின் தனியாக தெரிவான். அப்படி எடுக்கப்பட்டது தான் இந்த படிப்பும், இப்போ டீஸ்கவரி சானலில் வேலையில் இருக்கான், இந்த மதிக்கெட்டாஞ்சோலையைப் பற்றி ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்து, அங்குள்ள பறவைகளை பற்றி ஒரு டாக்குமேண்டரி எடுக்க விரும்பி, தமிழன் என்பதனால் இவனை அனுப்பி இருக்கிறார் இவனுடைய பாஸ். காலை 10.00, வாசு அந்த மலைகாட்டுக்குள் சென்றான். அங்கு பல விதமான சத்தங்கள் பூச்சியில் இருந்து புலி வரை அனைத்து சத்தமும் கேட்டது. வாசுவுக்கு இது சத்தம் எல்லாம் பழக்கம் தான் ஏனென்றால் இவன் பத்து வருடமாக காட்டிலே தான் அலைந்துக் கொண்டு இருக்கிறான். தன்னுடைய பையில் இருந்த சவுண்டு ரெக்கார்டர் எடுத்து காட்டில் கேக்கும் சத்தங்களை பதிவு செய்துக் கொண்டே நடந்தான். பல நூறு வருஷம் வயதுள்ள மரங்கள், பல விதமான பறவைகள், தேங்காய் அளவு பெரிய பூச்சிகள் என்று பல விதமான உயிரினங்களை பார்த்தான். மலையின் நடுவே வந்து விட்டான். அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தில் இருந்து வயதான மனிதன் கீழே வாசுவை நோக்கி குதித்தான். வாசு தடுமாறிய படி கீழே விழுந்தான். பயத்துடன் அந்த முதியவரை பார்த்தான், முகத்தில் கண்கள் மட்டும் தான் தெரிந்தது மீதி அனைத்தும் முடிகளால் மறைந்து இருந்தது, அதுவும் வெள்ளை நிறத்தில். முழு நிர்வாணமாக இருந்தார், எதாவது காட்டுவாசியாக இருக்குமோ என்று வாசு நினைத்த சமயத்தில், அந்த முதியவர் சுத்த தமிழில்

"யாரைக் கேட்டு என் சித்தகிரிக்குள் வந்தாய்" என்றார் கண்களை உருட்டியபடியே......


-----------------x---------------------------x-------------------------x

சித்தகிரியா? சித்தம் கொஞ்சம் கிறுகிறுத்துதான் போனது வாசுவுக்கு..!

தமிழ். அதுவும் சுத்தத் தமிழ். வெள்ளை பரட்டை முடி, நிர்வாண உடல், வாசுவுக்கு உதறலிலும் தன் முன்னே அரிய வாய்ப்பு நிற்பது புரிந்தது. தன்னிடம் இருந்த கையடக்க வீடியோ காமிராவை ஆன் செய்து அவர் பக்கம் திருப்பியபடியே

"ஐயா, இது உங்களுடைய காடு என எனக்குத் தெரியாது, நான் ஒரு இயற்கை ஆர்வலன். உலக இயற்கையை ஆராய்ந்து இயற்கையை மக்களுக்கு புரியுபடியும் சொல்வதுதான் என் வேலை.." வாசு சொல்ல எத்தனிக்க

கட கடவென அந்த இடமே அதிரும்படியானச் சிரிப்பு..வெடித்தது முதியவரிடத்தில் "உண்மையா? உண்மையா?" வெடிச்சிரிப்பில் விதிர்விதிர்த்துப் போனான் வாசு.

என்ன என்ன... நடுக்கமாகக் கேட்டான் வாசு..

இயற்கையை நேசிப்பவனே, நீ ஏன் இயற்கையாக இல்லை பெரியவரின் கேள்வி புரிந்தது மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும் இருந்தது வாசுவுக்கு.

அது வந்து மனிதர்கள் புரியாமல் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இயற்கையின் எழில்களைக் காட்டி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது என் வேலை...

அவர்களுக்குச் சொல்வது அப்புறம்.. நீ இயற்கையோடு கலக்க விரும்புகிறாயா?

சிலீரென்று குளிர்ந்தது வாசுவின் முதுகுத் தண்டு, இயற்கையோடு கலப்பது என்றால்... என்னைக் கொல்லப் போகிறாரா இல்லை இவரை மாதிரியே நிர்வாணமாய் திரியும் சித்தனாக்கப் போகிறாரா? என்னதான் சொல்கிறார் குழம்பத் தொடங்கியிருந்தான்..

இயற்கையோடு கலப்பது என்றால்..

வாசுவின் தயக்கமான கேள்விக்கு திடமான பதில் வந்தது,,

இயற்கையோடு கலப்பது என்றால், அதோ அந்தக் காற்றாய் இருப்பது..இதோ இந்த இலையாய் இருப்பது.. அந்த மரமாய் இந்த வண்டாய் அந்த மேகமாய் இந்தப் பாறையாய் எதையெல்லாம் நாம் பார்ர்க்கிறோமோ அதாக ஆகிப் பார்ப்பது,,

கூடு வி...ட்டுக் கூ....டு பா...ய்வதா -- தயக்கத்துடன் வார்த்தைகளை சிரமத்துடன் உதிர்த்தான் வாசு.

இல்லை மானிடா அணுவாய் பிரிந்து அணுவாய்ச் சேர்வது. உன்னுடலைத் தனித்தனி அணுக்களாக்கி அனைத்திலும் உன்னைப் பரவச் செய்வது,,

நான் இன்னும் அதற்குத் தயாராகவில்லை என நினைக்கிறேன்.. எனக்கு பக்குவம் போதாது... வாசு படமெடுத்து நிற்கும் நாகத்தின் முன் நிராயுதபாணியாக நிற்பது போல உணர்ந்தான். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

உன்னை ஏற்கும் பக்குவம் இங்குள்ள அனைத்திற்கும் இருக்கிறது - முதியவரின் மறுமொழி அவனை நடுங்கச் செய்தது..

அது வந்து நான் என்னைத் தயார்படுத்திக் கொள்ள...

மானிடா, உன்னை இழந்த பின் தான் உன்னில் இருப்பது அண்டவெளியில் இருக்கும் இருள்தான் என்பதை அறிவாய்,, உன் அணுக்கள் கொள்ளையிட்ட அத்தனைச் சக்திகளும் அதனதன் இடம் சேர்ந்தால் அந்த அணுச்சேர்க்கையின் ஒளியில் உன் அறியாமை அகலும். தெளிவாவாய்.. உன்னுள் என்ன இருந்த்து என்பதை உணர்வாய் இயற்கையாவாய்...

வாசுவின்நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது பேச்செழவில்லை, தொப்பென முதியவரின் கால்களில் விழுந்தான்,,

என்னை விட்டு விடுங்கள்.. என்னை விட்டு விடுங்கள்.. பிதற்றிக் கொண்டே மயங்கினான்.. பொழுதும் மயங்கியது..

-----------x-----------------------x-------------------------x--------

மறுநாள் பொழுது புலர்ந்தது. சூரியன் தன் கிரணக் கைகளால் இலைகளை விலக்கி எட்டிப் பார்த்தான்..

அங்கே தரையில்.. புதிதாய் ஒரு மரம் முளைவிட்டிருந்ததது.. சின்னச் சின்னச் சுவடுகள் மாத்திரம் நேற்று அங்கே எதோ நடந்ததிற்கு அடையாளமாய் மிச்சமிருந்தன,

சலசலத்த ஓடையில் ஒலிப்பதிவுக் கருவி மூச்சுத் திணறி இறந்து கிடந்தது.. எதோ ஒரு கருங்குரங்கு வாசுவின் சட்டையை கிழித்து எதையோ தீவிரமாய்த் தேடிக் கொண்டிருந்தது. ஒளிப்பதிவுக் கருவி ஏதோ ஒரு கரடிக் குகையில் நசுங்கிக் கிடந்தது..

மெல்ல மெல்ல சூரியன் உச்சிக்கு வந்து எட்டிப் பார்த்தான். யாரோ இருவர் நடந்து சென்ற பாதை அந்த ஓடையோர மணற் பரப்பில் தெரிய, சூரியன் தலைதூக்கி மலை உச்சியைப் பார்த்தான்..

அங்கே கைடு உல்லாசப் பயணிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்..

"சார் அதோ தெரியுது பாருங்க அந்த மலைப் பேரு மதிக்கெட்டாஞ்சோலை, அந்த மலை ஒரு ரிசர்வ்டு ஏரியா, அங்க நிறைய விதமான அதிசயங்கள் இருக்கு. மூலிகைகள், அதிசய விலங்குகள், பறவைகள்ன்னு நிறைய இருக்கு. அங்கே இதுவரைப் போன மனிதர்கள் திரும்ப வந்ததே கிடையாது, காரணம் என்னனு ஒழுங்கா தெரியல, சிலப்பேர் விலங்குகள் கொன்று விடும் சொல்றாங்க. மீதிப் பேர் அங்கே போன மனம் கெட்டு அங்கேயே இருக்க தோணும்னு சொல்றாங்க, அதனால தான் இந்த இடத்துக்கு மதி+கெட்டான்+சோலையினு பேர் வச்சி இருக்காங்க, இப்போ இது ரிசர்வ்டு ஏரியா"

வாசுவுக்கு எல்லாம் தெரிந்து கொண்டிருந்தது.

உங்களுக்குத் தெரிகிறதா?

முற்றும்.

4 comments:

  1. இது புனைவா இல்லை நிஜமா??

    ReplyDelete
  2. இதில் உள்ள தத்துவம் எனது சொந்தத் தத்துவம். கதை புனைவுதான்.


    ஒரு உயிர், அல்லது ஒரு மனிதன் உருவாவது எப்படி? ஒரு அண்டமும் விந்தும் கூடிக் கலந்து ஒரு செல்லாகி..

    அதன் பின் வளரும்பொழுது அதில் அணுக்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே வருகிறது. ஆமாம் இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன?ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது போல ஒரு எலெக்ட்ரானோ, புரோட்டானோ நியூட்ரானோ புதிதாய் முளைப்பதில்லையே. அன்னை சுவாசிக்கும் காற்று, அன்னை உண்ணும் உணவு அன்னை பெறும் சூரிய ஒளி இப்படிப் பலப்பல வகையில் புறத்தே இருக்கும் அணுக்களை ஈர்த்து இந்தச் செல்கள் வளர்ந்து குழந்தையாகிறது..

    அதாவது நாம் நம்முடையது என்று என்னும் நம் உடல் பகுதிகள் எல்லாமே நாம் இயற்கையில் இருந்து ஈர்த்துக் கொண்ட அணுக்கள்தான். அப்படி இயற்கையில் இருந்து வெளிப்பட்டு இணைந்த அணுக்கள் நாம் என்ற உருவம் கொடுத்து நம்மை ஒரு திடப் பொருளாக கருதிக் கொள்கிறது.

    இதில் எதில் இருந்து எது வந்தது என்று தெரியாது.. ஆனால் நம்மோடு இணைந்த அத்தனை துகள்களையும் நாம் எனச் சொல்லிக் கொள்கிறோம்.
    இப்படி ஈர்க்கப் பட்டு நம்முள் இணைந்த அணுக்கள் நம்மை விட்டுப் பிரியவும் செய்கின்றன. உதிர்கின்ற ரோமமாக, தோலாக, நகமாக நம்மை விட்டுப் போகவும் செய்கின்றன. அவை பிரிந்த பின் அவற்றை நாம் நம்மின் பகுதியாகக் கருதுவதில்லை.

    ஒரு கை போனால் கூட இது 90 சதவிகித நான் இது 10 சதவிகித நான் எனக் நம்மை அந்த அணுக்களுக்கு பங்கு பிரிப்பதில்லை. சில காலம் வேண்டுமானால் அது என் கை எனச் சொல்லலாம். அந்த என் என்றச் சுவடுகள் அழியும் வரை.

    ReplyDelete
  3. இப்படி அணுக்களாகக் கூடிச் சேர்ந்த உடல் அணுக்களாகவே பிரிகிறது. மண்ணாகிறது.. சாம்பலாகிறது. அது இன்னொரு உயிரின் உடலாகிறது.. இப்படி நம் அணுக்கள் எனக் கருதிய அணுக்கள் மறுபடி பிரிந்து வேறு யாருடையதோ ஆகி விடுகிறது..

    அதனால் நான் என்பது வெறுமையாகி இருக்கிறது அல்லவா.. அது அண்ட இருள்.. நாம் பெற்றதெல்லாம் இங்கிருந்து .. நம்மிடம் சேர்ந்த அணுக்கள் நம்மைப் பிரிந்து ஒளியிலும் காற்றிலும் மண்ணிலும் நெருப்பிலும் இன்னொரு நானிலும் இப்படிப் பிர்ந்து கலந்த பின்னர் எஞ்சி இருப்பது எதுவோ அதுதானே நான்.

    இருளாய் என்னை அறியாமல் இருந்த நான் ஒளியாய் என்னை அறிகிறேன்.. இருந்த அடையாளம் மறைய காலமாகும்.. எச்சங்கள் சற்று மிச்சமாய் மீதம் இருக்கும். நான் என்பது மாறி இயற்கையின் இயல்பாகிவிடுகிறோம்.

    அணுக்கள் எப்படி இப்படி மாறிக்கொண்டே இருக்கின்றனவோ அப்படி மாறிக்கொண்டிருப்பதுதான் இயற்கை. இந்தத் தொடர் மாற்றங்கள்தான் உயிர்.. நான் இறப்பதுமில்லை பிறப்பதுமில்லை.. மாறிக்கொண்டே இருக்கிறேன். . நானிருந்த சுவடுகள் சில காலம் இருக்கிறது, அச்சுவடுகள் மறையும்பொழுது நான் என்பதே மறந்துவிடுகிறது..

    ReplyDelete
  4. அப்படித்தான் எதோ நடந்தது. அவன் அந்தச் செடியில், குரங்கில் ஓடையில், கரடியில், காற்றில், ஒளியில், சூரியனில் அணு அணுவாகக் கரைந்திருக்கலாம்..

    எங்கோ போனவன் எங்கும் இருக்கிறான்.


    இப்படி சித்தர் மாதிரி கொஞ்சம் சிந்திச்சி எழுத முயற்சி செஞ்சேன், சில சித்தர்கள் காற்றோடு கரைந்து விடுவார்கள் என்று படித்திருக்கிறேன். வள்ளலார் கூட அப்படித்தானாம். அப்படி அவனும் அங்கிருக்கும் எல்லாவற்றிலும் கரைந்திருக்கிறான் எனச் சொல்ல வந்தேன்.

    உன்னுள் இழுக்கும் மூச்சுக் காற்றில் அவன் அணுக்கள் உன்னிலும் பரவி இருக்கலாம்.

    ஏனோ சித்தர் அன்றுச் சொல்லிட்டாலே இப்படி மனசு எதையெதையோ யோசிக்குது...

    ReplyDelete