Wednesday, December 2, 2009

பாழடைந்த மண்டபம்!!!

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது..

இரண்டாம் ஆண்டு இறுதிப் பகுதி..

எங்கள் மூகாம்பிகைக் கல்லூரியின் வளாகத்தில் ஒரு மண்டபம் உண்டு.. நான்கு பக்கமும் திறந்த அந்த மண்டபத்தின் முன் ஒரு கல்வெட்டும் உண்டு.

மண்டபத்தின் எதிரே சிறிது தூரம் சென்றால் ஒரு குளம் உண்டு. கரைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சதுரக் குளம். அதில் நீர் நின்று பார்த்ததில்லை. ஆனால் கரைகளிம் கற்களின் மத்தியில் காலியிடங்கள் உண்டு.. நீர் வரும்பாதை போல.

நான், கோபி, செல்வராஜ் சுந்தர் ஆகிய நான்கு பேர். காலையில் வயல்வெளிகளுக்கு மத்தியில் உள்ள பெரிய கிணற்றில் குளித்து விட்டு ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்போம்.

ஒருநாள் மாலை மண்டபத்தின் அருகே உள்ள ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தோம். அங்கே ஒரு தாத்தா ஆடு மாடுகளைப் மேய்த்துக் கொண்டிருந்தார்.

சும்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மண்டபத்தைப் பற்றியும் விசாரித்தோம். இந்தப் பகுதியில் தங்கப் புதையல் இருப்பதாகவும், அதன் ரகசியம் கல்வெட்டில் இருப்பதாகவும் சொன்னார். அந்தப் புதையலை எடுக்க வேண்டுமானால் சூல் கொண்ட ஏழு எருமைகளையும் ஏழு பெண்களையும் பலிதந்தால் புதையல் ரகசியம் தெரியும் என்றும் கதை சொன்னார். சரி கல்வெட்டைப் படித்துப் பார்ப்படு என்று முடிவு செய்தோம்.

அப்போது மாலை ஆறு மணி இருக்கும். மண்டபத்திற்கு சகல் பந்தோபஸ்துகளுடன் சென்றோம்.கால்களில் கட்டையான பெரிய ஷூ, நல்ல திக்கான பேண்ட், கைகளில் உருட்டுக் கட்டைகள், கத்தி என தடபுடல்தான்,

மெல்ல இருட்டிக் கொண்டிருந்தது. மெல்ல கல்வெட்டின் அருகில் செல்ல புதரில் இருந்து சீறி வந்தது பாம்பு.

பாம்பை அடித்துக் கொன்று விட்டு, கல்வெட்டை தடவித் தடவி படிக்க முயற்சி செய்தோம். ஒன்றும் புரியவில்லை.

கடைசி வரிக்கு முத வரியில் பள்ளத்துப்பட்டி என்ற ஒரு வார்த்தை மட்டும் புரிய நிமிர்ந்தோம்

சரசர வென ஒரு மின்னல் வெட்டியது. அது மண்டபத்தின் உச்சிக்கும் குளக்கரையின் அருகே இருந்த ஒரு மரத்துக்கும் இணைப்பு தந்தாற் போலத் தெரிய

மரத்தடியில் ஒரு பெரிய சமாதி பளீரெனத் தெரிந்தது...


இதுவரை இந்தச் சமாதியைக் கவனித்ததில்லையே.. மெதுவாய் சமாதியை பார்த்து நடந்தோம். சமாதியை நெருங்கும் போது மண்டபத்தின் பக்கம் யாரோ சிரிக்கும் சத்தம்.

திரும்ப பயம். இருந்தும் நாலுபேர் உள்ள தைரியத்தில் திரும்பிப் பார்த்தோம்.. ஒன்றும் தெரியவில்லை. மழை பெய்ய ஆரம்பித்தது..
விடுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.

மறுநாள் மாலை, மீண்டும் புறப்பட்டோம். இம்முறை பள்ளத்துப்பட்டியை நோக்கி,

பள்ளத்துப்பட்டி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். கோபி ஒரு முறை அங்கே சென்றிருப்பதாகச் சொன்னான்.. (எல்லாம் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கும் சித்தாள் கூட்டத்தில் இருந்த ஒரு அழகியைத் தொடர்ந்துதான்)

பள்ளத்துப்பட்டி எல்லை வரை உருட்டுக் கட்டைகள் சகிதம் சென்றவர்கள் அங்கு ஒரு மரத்தின் மேல் கட்டைகளைப் பதுக்கினோம். (எனக்கு பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்திற்கு முன்னால ஆயுதங்களைப் பதுக்கியது நெனப்புக்கு வந்துச்சு போங்க). ஊருக்குள் மெல்லச் சுற்றி வந்தோம்.. ஊர் கோடியில அந்த அற்புதம் இருந்தது.

ஒரு பெரிய கல். பாறை. 30 அடி உயரம் இருக்கும். அந்தப் பாறையை சுற்றி, குளம் மாதிரி தண்ணி தேங்கி இருந்திச்சி. பச்சை குளத்திற்கு மத்தியில பிரௌன் கல். அதனோட உச்சியில கிரீடம் வச்ச மாதிரி ஒரு சின்னக் கோயில்.

கோயிலுக்குப் போக அரையடிப் பாதை மாதிரி குளத்துக்கு மத்தியில எடம் இருந்துச்சு. (ஒத்தையடிப் பாதைதான், பாதி தண்ணிக்குள்ள இருந்திச்சு)

மலை மேல (!) மெல்ல ஏறினோம். குளுகுளுன்னு நல்லா காத்து வீசுச்சு. சுத்தி முத்தி பாத்தா, பள்ளத்துப் பட்டி முழுசா கண்ணுக்குத் தெரிஞ்சது ஒண்ணும் வித்தியாசமா இல்லை. கோயில்ல பார்த்தா...

அட நம்ம ராகவருக்குப் பிடிச்ச முருகர் கோவில். இந்த மாதிரி ரம்மியமான சூழல்ல ஒரு கோவில் இருக்கறத எதிபார்க்கவே இல்லை. காலையில பூசை நடந்திருக்கும் போல. எல்லோரும் கும்பிட்டுகிட்டு வந்தோம்

மெல்ல இருட்ட ஆரம்பிச்சது. கோயிலை விட்டு திரும்ப மனமில்லாம திரும்பினோம்.

எங்க ஆயுதக் குவியில் இருந்த மரத்துக்கு வந்தா, சர சரன்னு சருகுகளில் ஒரு சத்தம். பாத்தா இரண்டடி நீளத்துக்கு ஒரு பச்சைப்பாம்பு, ஊறுதா இல்லை பறக்குதான்னே புரியலை. அப்புடி ஒரு வேகம். அதன் தலை எலை மாதிரி இருக்க உடல் பச்சையாய். பச்சைப்பாம்பை பார்ப்பது இதுதான் மொத தடவை.

ஆயுதங்களை எடுத்துகிட்டு ஆஸ்டல் வந்தோம். இன்னிக்கும் சமாதியை ஆராய முடியலை.

மூணாவது நாள் காலை.

வழக்கம் போல குளிக்கறதுக்கு பெரிய கிணத்துக்குப் போனோம். (இது 52 அடி விட்டமுள்ள ஒரு பெரிய வட்டக் கிணறு. இதிலதான் நான் நீச்சல் கத்துகிட்டது, தினம் 25, 30 ரவுண்ட் நீச்சல் அடிப்போம்.)

நாங்க மூணு பேரும் குளிச்சு முடிச்சு படியில உக்காந்துகிட்டு கதை பேசிகிட்டு இருக்கோம், கோபி இன்னும் குளிச்சிகிட்டு இருக்கான். திடீர்னு பொத்துன்னு ஒரு சத்தம்.

பாத்தா ஒரு பாம்பு கிணத்தில விழுந்திருக்கு, அது அப்படியே சுவரை ஒட்டின மாதிரியே மேலேற முயற்சி செய்ய, கோபி கோபி.. பாம்பு ஜாக்கிரதைன்னு கத்தினோம்.

கோபியை பாம்பு கவனித்ததோ என்னவோ, அதன் ஆயுசு கோபியின் கையால் முடிய வேண்டுமென விதி இருக்கும் போல அவன் படியேறிய நேரம் அதுவும் படி அருகில் வந்துடுச்சி.

எங்கள் ஆயுதங்களுக்கு வேலை வந்துடுச்சி. பாம்பு அடிக்கப்பட்ட போதுதான் அது தண்ணிப் பாம்பு இல்லை, நல்லப் பாம்புன்னுத் தெரிஞ்சது.

அன்னிக்குச் சாயங்காலம் மறுபடியும் பள்ளத்துப்பட்டிக்குப் போனோம்.

முருகன் இம்முறை இன்னும் கொஞ்சம் ஃபிரெஷ்ஸா இருந்தார், அப்பதான் பூசாரி பூசையை முடிச்சுகிட்டு கிளம்பிகிட்டு இருந்தார்.

எங்களைப் பார்த்ததும் பூசாரிக்கு என்ன தோணிச்சோ தெரியலை, கோயிலுக்குள்ள போயி தீபாரதனக் காட்டி விபூதி கொடுத்தார். அப்போ முருகனின் பரம பக்தனா இருந்த எனக்கு சந்தோஷம்.. அப்புறம் பூசாரிகிட்ட கீரனூர் போக வேற ஷார்ட் கட் இருக்கான்னு கேட்க, அதோ அந்தக் கண்மாயோரம் இருக்கிற ஒத்தையடிப் பாதை வழியாப் போனா கொஞ்ச தூரத்தில மெயின் ரோடு வந்துரும். அங்கிருந்து கீரனூர் 1 கிலோமீட்டர்னு சொன்னாரு.. முருகனேதான் சொன்னாருன்னு நெனைக்கிறேன்.. பதுக்கிய ஆயுதங்களை எடுத்துகிட்டு அந்த கண்மாயோரம் நடந்தோம்.அப்பதான் அதைப் பார்த்தோம்..

ஒரு பாழடைஞ்ச வீடு. கட்டி 300 நானூறு வருஷமாவது ஆகியிருக்கனும். சுத்தமா புதர்களுக்கு மத்தியில் மறைஞ்சிருந்த குட்டிச் சுவர்கள்.. மனித வாசனையே இல்லாம..

செல்வராஜ் வேர்க்கத் தொடங்கியிருந்தான்.. ஏதோ ஒரு அமானுஷயம் படக்கென கண்விழித்து எங்களை முறைப்பது போல முகெலும்பில் ஒரு ஜிளீர்.

அந்த வீட்டுக்கு கூரை இல்லை. எல்லாமே குட்டிச் சுவர்கள்தான். கீழ கருங்கல் சுவர் ஒரு மூணு அடிக்கு அது மேல சின்னச் சின்ன செங்கல் வச்சு கட்டினது. கண்மாய் மேட்டுலிருந்து பாக்க நீளமான நிழல்கள் பயங்கரமாய் இருக்க, குட்டி குட்டிப் புதர்களின் மத்தியில் நிறைய கரையான் புற்றுகள். எந்தப் புத்தில எந்த பாம்பிருக்குமோ, யாருக்குத் தெரியும்.?

இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சுகிட்டு மெல்ல இறங்கி வீட்டுக்குப் பக்கதில வந்தோம். எது வாசல் எது வழி ஒண்ணும் தெரியாத குட்டிச் சுவத்தை சுத்தி சுத்தி வந்தோம்.

குட்டிச் சுவத்தைச் சுற்றி
குட்டிச் சுவர்கள்

அப்படீன்னு கவிதை எழுதிரலாமான்னு தோணுச்சின்னா பாத்துக்கங்களேன்.. அப்போ சுந்தர் சொன்னான், டேய் இங்க பாரு என்னமோ எழுதி இருக்கு....

ஒரு இரண்டரை உயர வாக்கில் இருந்த கருங்கற்கள்ல தான் எழுத்துக்கள் இருந்திச்சு. அது வீட்டோட வெளி சுவரு முச்சூடும் இருந்துச்சி... என்ன என்னவோ வார்த்தைகள் ஒரு மண்ணும் புரியலை,

ஆனா களமாவூர் அப்படீங்கற ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சோம். எங்க காலேஜ் இருக்கிற இடம் களமாவூர்.. இந்தக் குட்டிச் செவருக்கும் அந்த மண்டபத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு.

அது என்ன?

இடிந்த பங்களா.. பாழடைந்த மண்டபம்.. மனசில படபடன்னு சத்தம்.. வவ்வால் ஏதாச்சும் சிறகடிச்சிருக்கும்னு நெனக்கிறேன்.. இருட்ட ஆரம்பிச்சிருச்சு.. அதனால நாளைக்கு சாயங்காலமோ இல்லை சனிக்கிழமையோ வந்தாச் சரியா இருக்கும்னு நென்ச்சுகிட்டு நாலுபேரும் திரும்பி கண்மாய்க் கரை மேல ஏறி ஹாஸ்டலுக்கு வந்தோம்.

மறுநாள் காலையில முதல் அதிர்ச்சி.. செல்வராஜோட அம்மா இறந்திட்டதா தந்தி வந்திருந்தது.. அவனை இன்னொரு ரூம்மேட்டை துணைக்கு போட்டு மேட்டூர் பஸ் ஏத்திவிட்டுட்டு வந்தோம்.

அன்னிக்கு முழுசும் பொழுது ஒரு மாதிரியாவேப் போச்சு.. ஒண்ணும் ஓடலை. சரின்னு ஏதோ சினிமாவுக்கு போயிட்டு வந்து தூங்க முயற்சி செஞ்சோம்.. தூக்கம் வரல...

கனவுல செத்துப் போன பாட்டி வந்து கூப்பிட்டாங்க.. பாத்துகிட்டிருக்கறப்பவே வானத்துக்கும் பூமிக்குமா விசுவரூபம் எடுத்து இடிச் சிரிப்பு சிரிக்கறாங்க.. செத்துப் போன தாத்தா எங்கயோ கல்லிலயும் முள்ளுலயும் எங்கையப் புடிச்சுகிட்டு ஓடறாரு.. ஒடம்பெல்லாம் கீறல்.. ரத்தம் பீய்ச்சி அடிக்குது.. தாத்தா எதையோ உருவி பாட்டி மேல எறியராரு.. பாட்டி வீல்னு கத்திகிட்டே குட்டியாப் போயிடறாங்க.. இப்படி ஏதோ கனவு.. அன்னைக்கு முழுசும் தூக்கமே இல்லை.

அடுத்த நாள் சனிக்கிழமை.. ஹாஸ்டல்ல ஒரே களேபரம்.. சீனியர்ஸ் சிலபேர் புக்ஸைக் காணோமாம். யாரெடுத்தாங்கன்னு தெரியலை.. நாங்க மூணுபேரும் குளத்தங்கரைச் சமாதியை இன்னிக்கு போயிப் பார்த்திர்ரதுன்னு முடிவு பண்ணினோம்..


சனிக்கிழமை.. சனியனின் நாளாம்.. அதுதான் என் விஷயத்திலும் நடந்தது..

காலை டிஃபனுக்குப் பிறகு சமாதியை அடைந்தோம். சின்ன திட்டு அதன் மீது செங்கற்களால் விளக்கு ஏற்றி வைக்க சிறிய மாடம்.. அவ்வளவுதான். அந்த மண்ணில் புல்கூட முளைக்கவில்லை. மரத்தின் நிழலில்...

சமாதியை நீண்ட நேரம் சுத்தி சுத்தி வந்தோம்.. ஒண்ணும் கிடைக்கல.. அப்படியே குளத்தில் இறங்கினோம்.

வரிசைக்கு வெளியவோ இல்ல உள்ளவோ போயி கொஞ்சம் வித்தியாசமாத் தெரியற கல்வரிசைகளை குச்சி போட்டுக் குத்தி பார்த்தோம்.. இந்தக் குளத்திலிருந்து அந்த மண்டபத்துக்கு ஒரு சுரங்கப்பாதை இருக்கலாம்னு கதை பேசிகிட்டே குத்திகிட்டு வர...

ஒரு கல்சந்துல குச்சி சர்க்குன்னு உள்ளே போயிருச்சு.. குச்சியை எடுத்தப்ப உஸ்-ஸூன்னு சீறிகிட்டு கூடவே பாம்பு..

கட்டைக்கும் கல்லுக்கும் மறுபடி வேலை... பாம்பு கந்தலாக் கெடந்தது..

இப்போ குளத்தைப் பாக்கவே பயமா இருந்தது.. எந்தக்கல்லு சந்தில என்ன இருக்கோ? எத்தனை பாம்பத்தான் அடிக்கிறது?

குளத்து மதியில இருந்த பெரிய கல்லை தள்ளிப் பார்த்தோம்.. அங்கயும் ஒண்ணுமில்லை..

மதியம் சாப்பிட்ட பின்னால் தான் அவனைப் பார்த்தோம், எங்க ஜூனியர்ல ஒருத்தன் அவன்...

அவன் வயித்தில எதையொ மறைச்சுகிட்டு அவனோட ரூமுக்குப் போனான்.. அப்புறம் வெளிய வந்து ரூமைப் பூட்டிகிட்டு போயிட்டான்...

புத்தகம் காணாமல் போனது ஞாபகம் வந்தது.. ஒருவேளை திருடன் இவந்தானோ!.. துப்பறியும் மூளைக்கு வேலை வந்துருச்சே!

நான், சஃபி, ஜெயக்குமார், சுந்தர், கோபி இன்னும் சிலபேர் பிளான் பண்ணினோம்.. பிசாத்து பூட்டு.. இதைத் திறந்துட்டு போய் பாத்திர வேண்டியத்துதான்...

நான் அவனோட ரூம்மேட்டை அமுக்குவமா, சாவி போட்டே தொறந்து பாத்திரலாமே அப்படீன்னு சொல்ல...

அப்படியே திரும்பிய என்காலில் எதோ தடுக்கியது.. காலில் எதோ ஜில்லென்று பரவ..

அய்யோன்னு ஜெயக்குமார் கத்தினான்...

குனிஞ்சு பார்த்தா கனவில பார்த்தமாதிரியே என் காலில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடிச்சிகிட்டிருந்திச்சி.. கோபி ஓடி கேண்டீனில் இருந்து காஃபி பொடியையும் துண்டையும் எடுத்துக் கொண்டு வந்து காலில் வெச்சி அமுக்கினான்.. எனக்கு மயக்கமாய் வந்தது..

அங்கே ஹாஸ்டல் கட்டுவதற்காக சாரம் கட்ட நட்டு வைத்த கம்பில எங்கால் பட்டிருக்கிரது.. லேசான காயம்தான்.. ஆனா கால் நரம்பு மேலே பட்டதால் நரம்பிலிருந்து ரத்தம் ஊத்து மாதிரி பீய்ச்சி அடிச்சிருக்கு.

பஸ்ஸில் கீரனூர் மருத்துவமனைக்கு தூக்கிட்டுப்போனாங்க..நாலு தையல்கள் போட்டாங்க.. படுத்த படுக்கை அடுத்த எட்டு நாளைக்கு..

சீத்தலைச் சாத்தனாக 10 வகுப்பு லீவில இருந்த நான் தலையிலொரு வடுவும் காலிலொரு வடுவுமாய்

பாஸ்போர்ட் அப்ளிகேசன்ல இது ரண்டும் தான் ஐடெண்டிஃபிகேஷன் மார்க்..

அப்புறம்... அந்த மண்டபம்..

நாங்க சரியாகி வர்ரதுக்குள்ள இடுச்சுபுட்டாங்க. அங்கன டாய்லெட் கட்டி எங்க ஆராய்ச்சியை நாறடிச்சுட்டாங்க..

முற்றும்.

No comments:

Post a Comment