Wednesday, December 2, 2009

உயிருக்கு மரியாதை!!!

தலைவரே இன்னிக்கு உங்க பேச்சு ஆளும் கட்சியை ஒரு கலக்கு கலக்கி இருக்கும்..

முன் சீட்டில் அமார்ந்திருந்த செம்மல் சுந்தரம் வாய்நிறையச் சிரிப்புடன் இருந்தார்..

பின்ன இருக்காதா, அதுமட்டுமா ஆளுங்கட்சியை முந்திகிட்டு இரயில் விபத்தில இறந்தவர்களுக்கு கட்சி சார்பா ஒரு இலட்சம் கொடுத்ததும் இல்லாம, இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரயிவே டிபார்ட்மெண்ட்லயே வேலை தரணும்.. அப்படி அவர்கள் தராவிட்டாலும் அடுத்தது எங்கள் ஆட்சிதான்.. அதில் இப்படிப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை தரப்படும். இந்த அரசு உயிர்களை துச்சமாக மதிக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மரியாதை அளிக்கும் மனிதாபிமானம்தான் எங்கள் கொள்கையின் உயிர் என்று ஒரு அடி அடிச்சீங்களே.. சூப்பர்.. அடுத்த முதல்வர் தலைவர்தான்

அமைச்சர் பதவிக்கு அச்சாரமாய் ஐஸ் வைத்தார் உடுமலை உத்தமன்,

தலைமை அலுவலகத்தை அடைந்ததும் அனைவரும் அவரவர் காரில் ஏறி, தங்கள் வீட்டிற்கும் லாட்ஜிற்கும் போக...

தலைவரின் பென்ஸ் கார் மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைந்தது. தலைவர் உற்சாகமாய்ச் சாய்ந்திருந்தார், அந்த தேக்கு மரக் காடுகளுக்கு மத்தியில் இருந்த அவரது இரகசிய பக்களாவில் இன்று அவருக்காக புதிய விருந்து காத்துக் கொண்டிருந்தது(தாள்).. அதைப் பற்றியக் கற்பனையில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருந்தார். அப்போது..

தட் என்ற தடித்த சத்தம் வர வண்டி கிரீச்சிட்டு நின்றது..

டிரைவர் என்னாச்சு? அவசர அவசரமாய் டிரைவர் இறங்க முயற்சிக்க.. போ .. வேகமாகப் போ.. அதெல்லாம் கவ்னிக்க நேரமில்லை. கெஸ்ட் ஹவுஸூக்குப் போ.. விரட்டினார்.

..

...

மறுநாள் காலை.. கெஸ்ட் ஹவுஸ் வேலைக்காரிக கொண்டு வந்து கொடுத்த காஃபியைப் பருகியபடி செய்தித் தாளை எடுத்து தலைப்புச் செய்தியாய் வந்திருந்த அவரது நேற்றைய உரையைப் பார்த்து புன்னகைத்தார்.

உயிருக்கு மரியாதை. எதிர்கட்சித் தலைவர் சிங்காரம் உருக்கமானப் பேச்சு

சென்னை ஜூன் 4. சென்னையில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ...................................................
................................................................................
................................................................................

கடைசிப் பக்கத்தின் மூலையில் சிறியதாக அந்தச் செய்தி இருந்தது..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு..

சென்னை ஜூன் 4. கோவலம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இப்பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவிற்கு இவர் வேலை முடிந்து கிழக்குக் கடற்கரைக் கரைச் சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றும்.

.

No comments:

Post a Comment

கூலி!