Wednesday, December 2, 2009

என்னுடைய முதல் ராஜினாமா!!!

பெங்களூரில் தான் என் தொழில்பயணம் ஆரம்பித்தது. முதன் முதலாக ஒரு தொலைகாட்சி பழுதுநீக்கும் ஒரு சின்னக் கடையில் மூன்று மாதம் வேலை செய்தேன், ஆனால் அங்கே ராஜினாமாவுக்கெல்லாம் வேலை இல்லை..

அடுத்த நான் இணைந்த அலுவலகம் இரட்டை நிறுவனம். ஒரு புறம் நுண்செயலிகள் (மைக்ரோபிராஸஸர்) கொண்ட தொழிற்சாலைக் கட்டுப்பாடுக் கருவிகள் செய்தல், விற்றல், பராமரித்தல்.

இன்னொரு புறம் கணிணிகளைப் பூட்டி விற்று, பராமரிக்கும் நிறுவனம். நான், விவேக், ஜேகே, ராம்கி, சந்திரமௌலி, வெங்கடேஸ் என ஆறு ஊழியர்கள், ஷில்பா மற்றும் பிரதீப் என்ற இரு பயிற்சியாளர்கள் கொண்ட நிறுவனம். உரிமையாளர் கண்ணன் மிக மிக நல்லவர். புரியாமலேயே படித்துப் பட்டம் பெற்ற என்னை புடம் போட்டதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. சரியாக ஒருவருடம் ஒரு மாதம் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்தேன். 26 சிறு சிறு புராஜக்டுகளை வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறேன்..

மே 1991.. அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்பொழுது பொதுப் படிப்பகத்தில் டெக்கான் க்ரானிக்கல் நாளேட்டைப் புரட்டினேன். வாக்கின் இண்டர்வியூ - என அந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தின் விளம்பரம் சனிக்கிழமை பெங்களூரில் நடக்க இருப்பதாக விளம்பரம்.

சரி போய்த்தான் பார்ப்போமே என வீட்டிற்கு வந்தவுடன் என் அக்காவிடம் சனிக்கிழமை காலை பத்துமணிக்கு இண்டர்வியூ போகணும் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் என்னுடைய சுய விவரக் கோர்வையும் தயார் செய்துவிட்டேன்.

ஆனால் வார இறுதி வருகையில் சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன். காலை எட்டு மணிக்கு என்னைப் பார்த்த எதிர் வீட்டுக்கார மாமி, என்ன தாமரை இண்டர்வியூ இருக்குன்னு உங்க அக்கா சொன்னாங்க. கிளம்பலையா என்று கேட்க, சடாரென உறைத்தது. குளித்துக் கிளம்பிய போதுதான் பஸ்ஸூக்கு காசில்லை என்பது தெரிந்தது. அந்த மாமியிடமே 10 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு பேருந்து பிடித்து 10 மணிக்கு அலுவலகம் போனேன். இண்டர்வியூ திருப்திகரமாய் முடிந்தது. ஆமாம் அந்த மேலாளர் தான் இண்டர்வியூ செய்தது..

புதன்கிழமை எனது பிறந்தநாளும் அதுவுமாக காலையில் தந்தி வந்தது. அடுத்தச் சனிக்கிழமை மற்படி வருமாறு. சனிக்கிழமை சென்றால், வேலைக்கான உத்தரவுக் கடிதம் கொடுத்து எப்ப வந்துச் சேருவீர்கள் எனக் கேட்டனர். 1 மாத தவணைக் கேட்டேன்.

எப்படிச் சொல்வது, ஒரு சொந்தத் தமையனுக்கும் மேலாக என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய அவரிடம் விட்டுச் செல்வேனென்று? யோசித்த போது வெறுமைதான் மிஞ்சியது..

திங்கள் கிழமை கடிதத்துடன் அலுவலகம் சென்றேன். காலை பத்து மணிக்கு கண்ணன் வர, அவரை அவர் அறையில் சென்று சந்தித்தேன்.

என்னப்பா என்று கேட்டவரிடம் என்னுடைய வேலைஉத்திரவாதக் கடிதத்தை எடுத்துக் காட்டினேன். தீர்க்கமாய் படித்து விட்டு நிமிர்ந்தார்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு என்ன செய்வது என்று யோசனையாய் இருக்கிறது. உங்களது அறிவுரை என்ன?

அவர் தீர்க்கமாய் ஒரு முறை மூச்சு விட்டுக் கொண்டார்.

நல்ல கம்பெனிதான் பெரிய கம்பெனி.. இவ்வளவு சம்பளம் நல்லவிஷயம் தான் என்றார்.

ஆனாலும் தொலைதொடர்புத் துறையில் என் அறிவு பூஜ்யம்.
தொலைபேசியைக் கூட இங்க வந்துதான் முதல் முதல் உபயோகிக்கக் கத்துகிட்டேன்.. ஒண்ணுமே தெரியாம எப்படி வேலை செய்யறதுதான்னு புரியலை..

தாமரை, இதுவரை என்னோட பலபேர் வேலை செய்திருக்காங்க, இதுவரை ரெண்டு பேரைப் பார்த்து நான் அசந்து போயிருக்கேன். முதலாமவர் இப்போ துபாய்ல கைநிறையச் சம்பாதிக்கிறார். இரண்டாவது நீ.. ஒரே வருஷத்தில இவ்வளவு விஷயம் கத்துகிட்டு யார் இருக்கிறாங்களோ இல்லையோ கம்பெனி நடக்கும் என்கிற மாதிரி வேலை செய்யற. உன்னால எதையுமே கத்துக்க முடியும். அப்புறம் மின்னணுவியலைப் பொருத்தவரை அடிப்படை விதிகள் ஒண்ணுதான். அதை உப்யோகிக்கும் முறைகள் தான் கொஞ்சம் மாறுபடும். நம்ம துறையைப் பொருத்த்வரை எல்லா விஷயமும் மூளைக்குள்ளயே இருக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. எந்தத் தகவல் எங்கே கிடைக்கும் என்பது தெரிந்தாலே போதும். (1991 -ல் தகவல் தொடர்புத் துறை பற்றிய அவருடைய அணுகுமுறையைக் கவனிக்கவும்). உன்னால முடியும். இந்த நம்பிக்கை எனக்கிருக்கு. உனக்கும் இருக்கணும்.

மிகவும் ஆதரவாகவும் ஊக்கமூட்டும் விதமாகவும் பேசினார். பிறகு புராஜக்டுகளை முடிப்பது பற்றிப் பேசினோம்.

1991 ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரியாவிடை பெற்றேன். பலப்பல பரிசுகளும், புத்தகங்களும், சிலபல மென்பொருட்களையும், எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் சிறிது பயத்தையும் சுமந்து கொண்டு..

முற்றும்.

---------------------x-------------------------x----------------------x---

டெல்லில் கவனித்த விஷயம்..

ஒரு விஷயத்தை நாம் பரிந்துரை செய்தால்...

அதற்கு எதிராகவே மேலதிகாரிகள் பேசுவார்கள். துருவித் துருவிச் சந்தேகங்கள் கேட்பார்கள்.. அவர்கள் உள்ளுக்குள்ளே நம்முடைய பரிந்துரையை ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதன் பின்னால் உள்ள காரணங்கள், என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன, அவற்றை பூரணமாக உணர்ந்து அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறோமா இப்படி முழுமையான வேலை நடைபெற்றதா எனச் சோதிக்கும் எண்ணத்திலேயே இந்தக் கேள்விகளை வீசுவார்கள். சாதரணாமாகப் பார்த்தால் அவர் என்னவோ எதிர்ப்பதாகத் தோன்றும். (நம்ம ஆதவாவைப் போல. )


அதே போல கவலையை அவங்க மடியில தூக்கிப் போட்டுட்டீங்கன்னா உங்களை மாலை மரியாதையோட வழி அனுப்பி வைப்பாங்க.. (இல்லாட்டி கெட்டவங்க அப்படின்னு சொல்லிவிடுவீங்களே!! )

No comments:

Post a Comment