Tuesday, December 1, 2009

என்னுடைய பதில்கள்

நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தால் அந்தப்பதில் படிக்கும்போது புரிவது போலவும் பின் படித்ததை நினைவு படுத்திப் பார்த்தல் புரியாத மாதிரி (சூப்பர் ஸ்டார் மாதிரி) இருக்கே அதன் ரகசியம் என்ன? மேலும் நீங்கள் குவாண்டிட்டி ஈட்டர் இல்லை குவாலிட்டி ஈட்டர் என்று சிவா.ஜி அண்ணா சொல்லி இருக்கிறார். அதனால் விளைந்தது இந்தக்கேள்வி. ஒருவரிடம் இல்லாத விசயத்தைதான் அவர்களால் அதிகம் பேசப்படுகிறதா?
.

சூப்பர் ஸ்டார் பதிலுக்கும் என்னோட பதிலுக்கும் ஒப்பிட முடியாது..

நான் எழுதுவது என் எண்ணங்கள் அவ்வளவுதான் அதைப் படிக்கும் போது ஒரு ரோலர் கோஸ்ட் ரைட் போற மாதிரி இன்பமா இருக்கும். ரைட் போயிட்டு வந்த பின்னால எத்தனை டர்ன், எவ்வளவு உயரம், எவ்வளவு வேகம், எவ்வளவு நேரம்னு யோசிச்சுப் பார்த்தா ஒண்ணும் புரியாது,

ரோலர் கோஸ்டர் மாதிரி நான் ஒரே திசையில சீரான வேகத்தில போறது கிடையாது. சில விஷயங்களை ரொம்ப விலாவரியா பேசறேன்.. சில விஷயங்களை பயங்கர வேகத்தில் கடந்து போயிடறேன்..

தப்பு என் பேரில்தான். இதை மற்றவர்கள் புரிஞ்சிக்க முடியுமா என்று நான் யோசிப்பதில்லை. இருப்பதை கொட்டி விடுகிறேன்..

போன பதிலுக்கு கூட பாருங்க, பெரிசா எழுத வேணாம்னு படம் போட்டு காட்டினேன்.. அதில இருக்கிற ஒவ்வொரு அம்புக்குறியிட்ட பாதையிலும் நாம பயணம் போயி உள்ள சுத்திப் பார்த்தாதான் புரியும். ஆனால் யாருக்கு டயம் இருக்கு?

அதில்லாம இன்னொரு அடிப்படைக் காரணமும் இருக்கு, காரணம் நாம பள்ளியில் படித்து வளர்ந்த வகை.

பள்ளியில் எத்தனை பாடங்களை புரிஞ்சு படிச்சிருப்போம்?

எங்க கணக்கு வாத்தியார் கொஞ்சம் என்னை வித்தியாசமாத்தான் டீல் பண்ணுவாரு.. எதாவது ஒரு தியரத்தை கொடுத்து இது தப்புன்னு புரூஃப் பண்ணு என்பாரு..

சில சமயங்களில் அந்த தியரங்களின் லிமிட்டேஷனைக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருக்கேன். சில சமயம் ஏன் தப்பாகாது அப்படின்னு விலாவாரியா சொல்லி இருக்கேன்... இப்படிக் கோக்கு மாக்கா சிந்திச்சே பழகின மனசு.. மனசில எத்தனை பாதைகள் இருக்கோ அத்தனையிலும் நடந்து பழகிய மனசு.. சின்ன சின்ன விஷயத்திலும் ஆழம் பார்க்க துடிக்குது..

உதாரணமா,

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இதைப் படிச்சா, உடனே பொதுவா, படிப்பதை தெளிவா பிழையில்லாம படிக்கணும். கற்று முடித்த பின்னால் அதில் அறிந்த அறிவின் படி வாழவேண்டும் அப்படின்னு சொல்லிட்டு அடுத்த குறளுக்கு ஓடிப்போவங்க..

நான் கசடற என்றால் பிழையில்லாமல் என்று ஒரு அர்த்தம்.. அழுக்கு நீங்க என்று ஒரு அர்த்தம். நம் அறியாமை, மூட நம்பிக்கைகள், தவறான கருத்துக்கள் போன்ற கசடுகள் அற.. நமது மனம் தெளிவு பெற தெளிவா படிப்பது முக்கியமா இல்லை தெளியப் படிக்கிறது முக்கியமா? நாம படிப்பதால் மனம் தெளிவடைய வேண்டும் . குழம்பக் கூடாது.

இப்படி பல அர்த்தங்களைப் பார்த்து அதில் எனக்குப் பொருத்தமா படறதை எடுத்துப் போடறேன்.

கேள்விப்படாத விஷயங்கள். புது விஷயங்கள், நம்முடைய மேல் நினைவடுக்குல இருக்கும். பழகின விஷயங்கள் மெல்ல அடித்தட்டுக்குப் போகும்.

இதைப் பற்றி விளக்கம், இருக்கும் லிங்கைப் இப்போது இணைத்து விட்டேன்..நான் எழுதுவது புதுமையாக இருப்பதால் அப்போதைக்கு புரிகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மறந்து போகிறது. என்னுடைய எழுத்துக்களை நிறையப் படிச்சவங்களுக்கு பசு மரத்தாணி போல பதியும். வேணும்னா அமரன், பென்ஸ், மதி போன்றவர்களை கேட்டுப்பாருங்க..

எல்லாவற்றையும் மறந்திட்டு இதை மட்டும் ஞாபகம் வச்சிக்குங்க..சந்து பொந்துகளில் ஒரு பயணம் போனால் வந்த வழி மறந்து போவது போல நான் எழுதியதை மறந்து விடுகிறீர்கள்

நான் எழுதும் ஸ்டைல் பொதுவாக படிக்கக் கிடைக்காதது. சிந்தனைகளின் கோணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால் படிக்கும் போது புரிந்தது அப்புறம் குழப்புகிறது.

ஒரு கருத்தை மட்டும் ஒரே கோணத்தில் மட்டும் எழுதினால் மனதில் நிற்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் போற மாதிரி.

நான் அப்படி எழுதுவதில்லை. இதுதான் காரணம்,

இரண்டாம் கேள்வி.. சாப்பாட்டு விஷயம்..

அதை சிவாஜி சொல்லலை. நான்தான் சொன்னேன்.

தன்னிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப் படுவது பொதுவான மனித குணம். ஆனால் அந்த மனித குணத்திற்கும் நான் சாப்பாட்டைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை..

100 பேர் வரவேண்டிய பார்ட்டிக்கு 99 பேர் வந்தா வராத ஒருத்தரைப் பற்றிப் பேசி பாதிப் பொழுது ஓடிப்போயிரும்.

இல்லாத ஒன்றைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறவர்கள் அதை அடைய ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் அதைப் பற்றி பேசுகிறார்கள். நமக்கு கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டதைப் பற்றி நாம் பேச விரும்புவதில்லை

ஆனால் இதற்கும் சமையல் சாப்பாடு பற்றி நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை.

நான் சாப்பாட்டை பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுவதற்கு காரணம் ..

சற்று யோசிச்சுப் பாருங்க,,, மனுஷன் எதை எதை எப்படி எப்படி சமைச்சு சாப்பிடலாம் என ருசி ருசியா எவ்வளவு ஆராய்ட்சி செய்து கண்டு பிடிச்சிருக்கான் பாருங்க.

சமையலில் உள்ள நுட்பங்கள். மருத்துவமும் ருசியும் கலந்த அறிவியல் சமையல்.

ஆறு வருஷம் சமயலை ஒரு கடமையாப் பார்க்காம, ஒரு பொழுது போக்கா பார்க்காம இரசிச்சு, அனுபவிச்சு கற்றுக் கொண்ட நுட்பங்கள் அதனால் ஏற்படும் வியப்புகள் இப்படி கடவுளை எப்படி வியக்கிறோமோ, நமக்குப் பிடிச்ச தலைவர்களை எப்படி வியக்கிறோமோ இன்னும் சரியாச் சொல்லப்போனா, காதலி ஐஸ்கிரீம் சாப்பிட்டா அதிகம் சிலிர்ப்பது ஐஸ்கிரீமா அவல் உதடுகளா என சிலிர்க்கும் காதலனைப் போல () அப்படி நான் வியப்பதால் அதிகம் அதைப் பற்றிப் பேசறேன். கிடைக்காததால் இல்லை..

பொழிப்புரை: ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் பேசணறம்னா

1. அந்த விஷயம் ரொம்பப் பிடிச்சு இருக்கணும்.
2. கண்ணுக்கெட்டின தூரத்தில ஆனா கைக்கெட்டாத தூரத்தில இருக்கணும்

நான் சாப்பாடு விஷயத்தில் காட்டும் இரசனைக்கு இந்தப் பதில் பொருந்தாது, அது ஒரு மாதிரி பக்திப் பரவசம். இறைவா உன் கருணையே கருணை அப்படின்னு கண்ணீர் விட்டு பரவசம் ஆவாங்க இல்லையா? அந்த உணர்ச்சி

No comments:

Post a Comment

கூலி!