Tuesday, December 1, 2009

வாதங்கள் எப்படி?

உங்களின் வாதங்களை பல திரிகளில் பார்த்து ரசித்திருக்கிறேன். எதிர் கருத்து கூறுபவர்கள் பதில் சொல்ல முடியாதபடி அருமையாக கருத்து கூறுவதில் தேர்ந்தவர் நீங்கள். உங்கள் வாதங்கள் நூறு சதவிகிதம் சரி என்று நீங்கள் எப்பொழுதும் நம்புவீர்களா? உங்கள் கருத்துக்களுக்காக வாதம் செய்வீர்களா அல்லது வாதத்திற்காக கருத்து கூறுவீர்களா?

ஒரே வரியை மீண்டும் மீண்டும் சொல்வதற்கு மன்னிக்கவும்

--------------------------------------------------------------------------------

நான் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது!
ஆனால் என் இதயத்திற்கும் கடவுளுக்கும் விசுவாசமாக, நான் எனக்கு உண்மை எனத் தெரிந்ததைச் சொல்கிறேன்..

---------------------------------------------------------------------------------


அதாவது நான் எனக்குச் சரி என்று தோன்றுவதை மட்டுமே சொல்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம் என்பதை என் மனம் அறியும். அது தவறு என்று உணரும் அதே நொடியில் நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

சில இடங்களில் தெளிவாகவே சொல்லி விடுவேன். இது நடைமுறையில் பெரிதாய் நடக்கச் சாத்தியமில்லை. ஆனால் இயன்ற வரை கடைபிடித்தால் இன்னின்ன நன்மைகள் உண்டு எனச் சொல்லி இருப்பேன்

தொழிலும் சமுதாய நோக்கும்
போனஸ் அல்லது ஊக்கத்தொகை

இப்படி சிலதிரிகள் அதற்கு உதாரணமாய் உண்டு.

விவாதமோ கதையோ விமர்சனமோ, என் மனதில் அந்தக் கருத்தை குறைந்த பட்சம் பத்து கோணங்களில் பார்த்த பின்னால் என் மனதில் உண்டாகும் எண்ணங்களையே எழுதுகிறேன். ஏறத்தாழ என்ன எதிர்வாதங்கள் உண்டு அதற்கு என்ன பதில் உண்டு என்பதும் மனதிற்குள் முன்பே உண்டு.

ஒரு கருத்து உண்மையென்று நம்புவதால்தான் நான் அதற்காக வெளியில் வாதிடுகிறேன், நான் மற்றவருடன் வாதிடுவதை விட என் மனதுக்குள் என்னுள் இருக்கும் பலரிடம் நான் மிக மிக அதிகமாக வாதிட்டு இருக்கிறேன். அமரனுக்கு சற்று அதிகமாக இதைப் பற்றித் தெரியும் என நினைக்கிறேன். கேட்கப்படும் கேள்விகள் வைக்கப்படும் விவாதங்கள் என் மனதில் ஏற்கனவே தோன்றி அதற்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட காரணத்தினால் உடனே என்னால் பதிலைக் கொடுத்து விட முடிகிறது.

என்னுள் வாதிக்கும் பொழுது, வாதத்திற்கு கருத்தை வைத்தல் - கருத்திற்கு வாதத்தை வைத்தல் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்டல், கருத்தின் பயன்களை ஆராய்தல், பின்விளைவுகளை பக்க விளைவுகளை யொசித்தல் வெளியிருந்து நோக்கல், உட்புகுந்தாராய்தல் என பலப்பல கோணங்களை பார்த்து வைத்திருப்பேன்..

பிறரோட கோணங்களை கருத்துக்களை ஆராயவோ மாட்டீங்களா என்று கேட்க நாக்கு துடிப்பது புரிகிறது. உடனே நடைமுறைப் படுத்தக் கூடிய விஷயங்களுக்கு பலரின் ஆலோசனைகளை நாடவே செய்கிறேன். எனக்குள் இப்படிச் செய்யலாம் என்று முடிவு செய்வதற்கு முன்பே அந்த ஆலோசனைகளைக் கேட்டு விடுகிறேன். அதனால் முடிவுவெடுப்பது எளிதாகி விடுகிறது. நான் ஒரு முடிவு எடுக்கும் முன்பு அதற்குரிய அடிப்படை ஆதாரங்கள் என்னிடம் இருக்கும். என்னிடமிருக்கும் ஆதாரங்கள் அழுத்தம் திருத்தமாய் என்னுள் நம்பிக்கை தரவில்லையென்றால் அந்த விவாதத்தில் நான் கலந்து கொள்வது இல்லை.

ஆனால் வாதம் என்று வரும்பொழுது வாதிப்பவர்கள் அதைத்தானே செய்கிறார்கள்.. அதனால் அவர்களின் வாதங்களை எதிர்கருத்துக்களாக பார்க்காமல் ஆலோசனைகளாக பார்க்கிறேன். ஆனால் அந்தக் கோணம் எனக்குப் புதியதாக இருந்தால் மட்டுமே அது புதிய ஆலோசனை. அந்தக் கோணத்தை, அந்தத் தகவலை ஏற்கனவே நான் யோசித்து இருந்தால் அதற்கு என் மனதில் எழும்பிய அந்த மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துகிறேன்.

பொதுவாக,

வாதத்திற்காக கருத்தை வைப்பது - கருத்துக்காக வாதத்தை வைப்பது..இரண்டுமே நல்லது.

என்னுடைய சில மிகச்சிறந்த வாதங்கள் இவை இரண்டும் இருந்ததால் தான் மிகத் தெளிவான கருத்துகள் வெளிவந்தன.

நான் கருத்துக்காக வாதம் வைப்பேன். ஆதவாவோ, விக்ரமோ அல்லது வேறு யாராவதோ வாதத்திற்காக கருத்தை வைப்பார்கள்.

வாதத்திற்காக கருத்தை வைப்பதன் நோக்கம் அதற்கு எதிரான கருத்தை இன்னும் தெளிவாக விவரமாக அறிந்து கொள்ளல் ஆகும்

இராவணன் நல்லவனா கெட்டவனா?
ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு
தேடிக்கொண்டிருக்காதே
சலனம்
உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பது சரியா தவறா

இப்படி பல திரிகளில் இவை இரண்டும் இருப்பதைக் காணலாம்.


கடி ஜோக் திரிகளில் அந்த கடிக்கு பதில் கடி கொடுப்பதையும் பார்த்து இருப்பீர்கள்.

உதாரணமாக..

பொங்கலுக்கு லீவு விடறாங்க.. வடைக்கு லீவு விடுவாங்களான்னு பிரதீப் கேட்டிருப்பார்.

அதுக்கு பொங்கலுக்கு லீவு விட்டா நீங்க ஏன் வேலை செய்ய மாட்டேங்கறீங்க.. நீங்க என்ன பொங்கலா? கேட்டா பொங்கிருவீங்க தானே.. அப்படின்னு கேட்டிருப்பேன். இது வாதத்திற்கு கருத்தை வைப்பது. இதை நான் விவாதத்திரிகளில் செய்வது இல்லை. கவிதைத் திரிகளில் செய்வேன், இதற்கு மிகச் சிறந்த உதாரணம்



இன்னும் பல இலாவணிக் கவிதைகள் (பதிலுக்கு பதில் கவிதைகள்) எழுதி கவிதையின் கருவை விவாதித்து இருப்பேன்.


சுருக்கமாகச் சொன்னால்

வாதிடும்போது நான் எதுசரி என்று எண்ணுகிறேனோ அதைத்தான் சொல்கிறேன். என் கருத்துக்களுக்காக வாதிடுகிறேன், வாதத் திரிகளில் என் கருத்தை மட்டும் எழுதுகிறேன்.

மற்றைய இடங்களில் வாதத்திற்காக தெளிவிற்காக பலமுறை கருத்துக்களை வைக்கிறேன், இதையும் சிந்தியுங்கள் என்பது போல..


===========================================================================================

தாமரை அண்ணாவிடம் இந்த கேள்வியை நான் கேட்கணும் என்று நினைத்து இருந்தேன். சில முறை பேசும் பொழுது கேட்டும் இருக்கேன் என்று நினைக்கிறேன். ஆனால் சரியான பதில் வந்தது கிடையாது. இந்த முறையும் அவர் பதில் எனக்கு திருப்தி தரவில்லை. தன்னுடைய கருத்தில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் ஒருவரால் மனதார விவாதிக்கவே முடியாதே, அப்புறம் எப்படி அண்ணா நம் விவாதத்தை தொடர்வது. சந்தேகங்களுடன் இருக்கும் பட்சத்தில் நாம் ஆணித்தரமான விவாதங்களை வைக்க முடியாதே, அப்படி வைத்தாலும் எதிர்வாதிடுவோர் உங்கள் கருத்தை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் தவறான கருத்து தழைத்து விடுகிறதே.

நமக்கு முற்றிலும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒரு கோணத்தில் ஆதரித்து விவாதம் செய்வதற்கு பொருள் தேடல் என்பதாகும். இதன் அடிப்படை நோக்கம் அடுத்த கோணத்தைப் பற்றி மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதாகும்.

இந்த அடிப்படையை அறிந்து கொண்டால் விவாதம். இல்லாவிட்டால் பிடிவாதம்.

விவாதத்தில் இருகோணங்கள் மட்டுமே என்பதுதான் தவறு. இது சரி என்பதால் அது தவறு என்று அர்த்தம் அல்ல. அது தவறு என்றால் இது சரி என்று அர்த்தமில்லை. என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகி விடும்.

யார் உயர்ந்தவர் தலையா - மனோ,ஜி யா என்றால்

தலை உயர்ந்தவர் என்றால் மனோ.ஜி தாழ்ந்தவர் என்று அர்த்தம் அல்ல. இருவரும் உயர்ந்தவர்கள். இருவரில் யார் மேலோங்கி நிற்கிறார்கள் என்றுதான் விவாதம்,

வாதத்திற்காக ஒருத்தரை தவறான முறையில் இழித்துக் கூறுதல் தவறு. எனக்கு மனோ.ஜியைப் பற்றி அதிகம் தெரியாது என்பதால் தலை பற்றி உயர்வாகப் பேசலாம். மனோ.ஜி யைப் பற்றி இன்னொருவர் பேசலாம், ஆனால் அவருக்கும் மனோ.ஜியைப் பற்றி கொஞ்சம் தான் தெரியும் எனக் கொள்வோம்.

முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தலையைப் பற்றியும் மனோ.ஜியைப் பற்றியும் பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள்.இருவரின் நற்குணங்களும் வெளிப்பட்டிருக்கும். மனோ.ஜி முன்பை விட சற்று உயர்ந்த இடத்தை என் மனதில் பெற்றிருப்பார். தலை இதுவரை இருந்த இடத்திலே தான் இருப்பார். ஆக

உண்மையில் பார்த்தால் தலை உயர்ந்தவர் என்று முடிவு செய்தாலும்.. தலை முன்பு என் மனதில் இருந்தாரோ அதே இடத்தில் தான் இருப்பார். ஆனால் மனோ.ஜி முன்பு இருந்த இடத்தை விட சற்று உயர்ந்த இடம் பெற்றிருப்பார்.

அப்படியானால் உண்மையான வெற்றியை அடைந்தவர் மனோ.ஜி தானே..

இதற்காகத்தான் கேள்விகள் கேட்பதை தடுக்கக் கூடாது. முடிந்த வரை விளக்க வேண்டும்.

(இப்படியே நான் எழுதிக் கொண்டிருந்தால் திருப்பதியில் இருந்தும், பழனியில் இருந்தும் தாமரை இனி எழுதக் கூடாது என தடை உத்தரவு வரலாம்.)
__________________

No comments:

Post a Comment