Tuesday, December 1, 2009

சிந்தனை முறை - ஆறாவது அறிவு,

அனைத்து திரிகளிலும் தங்களின் அலசல் பதிவுகளை பார்த்து வியந்து இருக்கிறேன் இது எப்படி சாத்தியமாகிறது ?


ரொம்ப எளிதான விஷயம் அருண், முதலில் மனிதனோட சிந்தனை முறையை பார்ப்போம்












இதில் சிவப்பு வண்ணமிட்ட பாதைகளை அதிகமாக உபயோகிப்பதால்தான்.

என்னுடைய மிகப்பெரிய பலம் என்பது எனது நினைவு அடுக்குகளில் இருக்கிறது. காரணம், தகவல்கள் அடுக்கி வைக்கப்படும் முறை.

எந்த ஒரு சின்ன தகவல் என்றாலும், மனதில் உள்வாங்கிப் பதியும் பொழுதே பல கோணங்களில் அதை பார்த்து காட்சியாய் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு தகவலுக்கும் முப்பரிமாண வடிவம் தந்துதான் பதிகிறேன்.

எனவே அது சம்பந்தமான இன்னொரு தகவல் தட்டுப்படும் பொழுது முப்பரிமாணத்தில் முதல் தகவல் உள்ளதால் எப்படிச் சரியாகப் பொருந்துகிறது என எளிதில் புரிந்து விடுகிறது.. ஒரு தகவலைக் கொண்டு, அது சம்பந்தமான பல தகவல்களை மூளை நினைவடுக்குகளில் இருந்து எடுப்பது எளிதாக இருக்கிறது.

மனச் சிந்தனைச் செயலியின் - வெளிப்பாட்டை செயலாக்காமல் மனதிற்கு மீண்டும் அதை ஒரு உணர்வாக ஃபீட்பேக் (பின்னூட்டம்) செய்து சற்று முன்னே போகிறேன் - இது நடந்தால் இது, இது நடந்தால் இது ஒரு திரைப்படத்தையே கற்பனைக் காட்சிகளாக மூளையில் பதிகிறேன்

ஆழம் செல்லுதல். அதாவது மேலோட்டமாக பார்க்காமல் ஒரு மூன்று நான்கு அடுக்குகள் உள்ளே சென்று பார்க்கிறேன்.. என் மனதில் தோன்றும் இந்த கற்பனைத் திரைக்காட்சிகள் எண்ணத்தை எழுத்துகளாக்க உதவுகின்றன.

நான் எண்ணுவதில் எழுதுவது ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. இது எல்லோருக்கும் சாத்தியம்.. குழந்தைகளுக்கு கூட.. புரிந்து சாதகம் செய்தால்.

குழந்தைகளுக்கு இதை பழக்குதல் மிக எளிது. பெரியவர்களுக்கு இப்பாதைகள் உபயோகிக்கப்படாமல் இருந்தால் சிந்தனைத் தடைகள் இருக்கும். வழக்கமாக உபயோகிக்கும் மன - மூளை இணைப்புகளையே அதிகம் உபயோகிக்க விழைகிறோம். அதனால் மனத்தடைகள் உண்டு..

இதை அறியாமலேயே நான் பயின்றிருந்தாலும் அறிய வைத்தது குழந்தைகள்தான்.

இந்த சர்க்யூட் ஒவ்வொரு மனிதனிலும் உண்டு, உணர்ந்து உபயோகித்தால் போதும்.

கண்மணியின் எண்ணங்களும் மின்சாரமும் கட்டுரையை இந்த வரைபடத்தில் மனம்-செயலியில் பொருத்திப் பார்க்கவும்.


இது புரிந்தால் பகுத்தறிவு என்னன்னு புரிந்துவிடும். புரியலைன்னா ஹி ஹி....

இந்த முறையை நான் உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்..


ஒரு முறை ஜி-சாட்டில் ஓவியன் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கா விலங்குக்கும் உண்டா என்று கேட்டார்.

பகுத்தறிவு என்றால் என்ன அப்படின்னு கேட்டேன்.

ஒரு விஷயத்தை ஆராய்ந்து எது நல்லது எது கெட்டது என்று அறியும் அறிவுன்னு சொன்னார்.

அப்போ அப்படியே விலங்குகளோட இயல்புகளை ஆராய்ந்தேன்.. மனசுக்குள்ள தான்

இப்போ அந்த சிந்தனைச் சங்கிலியைப் பாருங்க...

பகுத்தறிவுன்னா உண்மையில் என்ன?

அது ஒரு அறிவு கிடையாது...ஆராய்ட்சி மனப்பான்மை .. இதைப் பகுத்தறிவு என்கிறோம்


பகுத்தறிவு விலங்குகளுக்கு இல்லைனு பலர் சொல்வாங்க. ஆனால் விலங்குகளுக்கும் பகுத்தறிவு உண்டு.


முதல்ல பகுத்தறிவுன்னா என்னன்னு பார்ப்போம்.


ஒரு மேஸ்ல எலியை விட்டா.. அது முதன் முறை தடுமாறும். அதையே திரும்ப விட்டா அதுவா ஒரு வழி அமைச்சுக்கும். அது ஒரு பகுத்தறிவு.

சிம்பன்ஸி, ஒரு குச்சியை விட்டு கரையானைப் பிடிச்சு திங்கும் அது பகுத்தறிவு..

ஏன் குரங்கு மாலையைப் பிய்த்துப் போடுவது கூட பகுத்தறிவு தான். அது ஆராய்ச்சி மனப்பான்மையோட பிய்க்கும்

அதே மாதிரி கண்ணாடியை வச்சா மிருகங்களுக்கு கொஞ்ச நாளில் கண்ணடியில் தெரிவது தான்தான் என்று தெரிந்து விடும். அதுவும் பகுத்தறிவுதானே


புத்தகங்கள் சொல்லுறது பிழையா என்று கேட்கத் தோணுதா?

புத்தகங்கள் மனிதனால் எழுதப்பட்டவை. பகுத்தறிவு என்பதை புத்தகத்தில் படிப்பதற்கும் நிஜமாவே பகுத்தறிவு உள்ளதற்கும் இது தான் வித்தியாசம்


கீரிகள் பாம்புடன் போராடிய பின்னால் போய் பச்சிலைகளில் புரண்டு காயத்தை ஆத்திக்கும்.

நாய்கள், புல்லைத் தின்று ஜீரணமாகத உணவை கக்கும்
முதலை தன் வாயில் பறவைகளை அனுமதிக்கும் பற்களை துப்புரவு பண்ண

இவையெல்லாம் பகுத்தறிவு இல்லாம அதுங்களுக்கு எப்படித் தெரியும்?

எறும்புகள், எலிகள் தானியங்களை ஏன் சேமிக்குது?

காக்கை ஏன் உணவு கிடைச்சா உறவை அழைக்குது?

நில நடுக்கம் வருவது பறவைகளுக்கு எப்படிப் புரியுது?

யாரோ எழுதியதை நம்பாம, நாம கண்ணால பாத்து காதால கேட்டு அறிந்த விஷயங்களியும் ஒப்பிட்டு பார்த்து உண்மயை அறிவதுதான் பகுத்தறிவு...

ஒரு மனுஷனுக்கு குழந்தையை எப்படித் தூக்கறது அப்படின்னு சொல்லித் தரணும். ஆனா ஆட்டுக்கோ மாட்டுக்கோ யார் சொல்லித்தர்ரா? பூனைகள் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்த்திருக்கேன். அத்தனை லாவகம்

பகுத்தறிவில்லாமல் எப்படி வந்தது இந்த அறிவு?

தமிழர்கள் தான் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்று சொல்றாங்க. ஆனா ஆங்கிலேயரைப் பொறுத்த வரை ஆறாவது அறிவு ஈ.எஸ்.பி .. எக்ஸ்ட்ரா சென்சரி பர்சப்ஷன், அதாவது கற்பனையான ஒரு உணர்வு. மனதில் தோன்றும் ஒரு சின்ன ஜோசியம். இது நடக்கப் போகுது ஒரு எண்ணம் வருதே அதுதான்

சிக்ஸ்த் சென்ஸ் அப்படின்னு நம்ம மனோஜ் நைட் சியாமளன் படத்தில அதைத்தான் சொல்லி இருப்பார்.

மற்ற எல்லா பாஷைகளிலும் சென்ஸ் என்பது ஐந்துதான். ஆறாவது அறிவு என்பது எக்ஸ்ட்ரா சென்ஸ். அது மனிதர்களில் சில பேருக்கு மட்டுமே இருக்கும்.

ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவுன்னு யாரு வரையறை செஞாங்கன்னு பார்த்தா..

அது தொல்காப்பியர்.

தாவரங்களுக்கு ஓரறிவு, புழுவுக்கு ரெண்டறிவு, எறும்புக்கு மூன்றறிவு இப்படிச் சொல்லி, விலங்குகளுக்கு ஐந்தறிவு - மனிதன் மற்றும் அவரைப் போன்றோருக்கு ஆறாம் அறிவு பகுத்தறிவு உண்டு என சொல்லப்பட்டு இருக்கும்

ஐம்பொறிவழி அமைந்த புலன் அறிவுகள்

உலகின் எல்லாவகை உயிர்களும் புலனறிவு கொண்டவையே. புலனறிவு என்பது ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ளது. இது அறிவின் பொறிபுலன் வழியான இயங்குநிலைப் பகுப்பு.

ஓரறிவு

இது மெய்யாகிய பொறிவழி அறிய வரும் ஊறு-தொடுதலறிவு எனும் அறிவு. தொடுதலறிவு உள்ளவை புல், மரம், செடி, கொடி முதலியவை.

ஈரறிவு

வாய் எனும் பொறிவழி அறிவதாகிய சுவை என்னும் புலன். மெய், வாய் ஆகியவற்றின்வழி ஊரு,சுவை என்ற இரண்டுவகை அறிவுள்ள புழு, நத்தை, சங்கு, சிப்பி முதலியவை.

மூவறிவு

மூக்கு என்னும் பொறிவழி புலப்படும் மணம் அல்லது நாற்றம் எனும் அறிவு அல்லது புலன். எறும்பு, கறையான், பூச்சிகள் முதலியவை மெய்,வாய்,மூக்கு எனும் பொறிகள் வழி ஊறு,சுவை, மணம் என்னும் மூவகை அறிவுள்ள உயிர்களிற் சிலவாகும்.

நாலறிவு

கண் எனும் பொறிவழி புலப்படும் காணுதல்- ஒளி என்னும் அறிவு. நண்டு,தும்பி, பாம்பு முதலியவை மெய்,வாய்,மூக்கு, கண் எனும் பொறிகள்வழி ஊறு, சுவை, நாற்றம், ஒளி எனும் நால்வகை அறிவும் பெற்ற உயிர்களிற் சிலவாகும்.

ஐயறிவு

செவி அதாவது காது எனும் பொறிவழி புலப்படும் ஓசை என்னும் அறிவு. பறவை, விலங்குகள் முதலியவை மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வழி ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனும் ஐந்தறிவும் பெற்ற உயிர்களாகும்.

ஆறறிவு

மனம் எனும் அகக்கருவி வழியாக நல்லதுகெட்டது பிரித்தறியும் பகுத்தறிவு உடைமையே ஆறாவது அறிவு. இதுதான் ஆறாவது புலன். இதைப் பெற்றிருந்தும் பயன்படுத்தாதவர்கள் மக்கள் உருவில் இருக்கும் விலங்குநிலையினரே ஆவர். இந்த ஆறாம் புலனைப் பயன்படுத்தி அல்லவை நீக்கி நல்லவை ஆக்கி வாழ்பவரே மக்கள் எனப்படுவர். அல்லாத பிறர் அனைவரும் மாக்கள் (விலங்குகள்) எனப்படுவர்.


ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.


ஆறறிவு உள்ளது மனிதன் மட்டுமல்ல.. பிறவும் உண்டு என்றுதான் அவர் சொல்லி இருக்கார்.

அப்படின்னா மனுஷனுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கறீங்களா?

நாம் நம்மை ரொம்ப உயர்வா நினைச்சுக்கறோம்.. அதுதான் வித்தியாசம். ஏன் அப்படி நினைச்சுக்கிறோம் டார்வின் சொன்ன கூர்ர்ப்பின் பிரகாரமா? அல்லது நம்ம மட்டும் புதுசு புதுசாக் கத்துக்கிறோம்... பழசிலிருந்து புதுசா உருவாக்குறோம் என்கிற மமதையா?

மற்றவை உருவாக்கவே இல்லைன்னு சொல்ல முடியாது.. மற்றவை கோடிக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே முயன்று தெளிந்து கூட இருக்கலாம்.. முயற்சியை கைவிட்டு இயற்கையோடு இருப்போம்னு முடிவு கூட செய்திருக்கலாம். இல்லாட்டி இல்லாமலே போய்விடுவோம் என்பதுவும் அவை புரிந்து கொண்டிருக்கலாம்

கனவுகள் மிருகங்களுக்கு வருமா.. என்று இன்னொரு கேள்வி பிறக்குது மனசில

மனம் என்ற ஒன்று இருந்தால் கனவு என்ற ஒன்று இருந்தே இருக்கும். மனம் என்ற ஒன்று தான் நினைவுகளை அலசுகிறது.. நாய் வாலாட்டிக் குழைகிறது இல்லை குரைக்கிறது என்பதே அதற்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டு

அப்போ சிரிக்கத் சிரிக்கத் தெரிந்த மிருகம்னு மனுஷனை சொன்னது சரியான்னு யோசிக்கணும்.

ஏன் குரங்கு கூட சிரிக்குமே. நாய் கூடத்தான் சிரிக்கும்...

நாய் குட்டிகளோடு அம்மா நாய் விளையாடுவதைப் பார்த்து இருக்கீங்களா? அப்போ ஒரு ஃபோட்டோ எடுத்துக்கோங்க..

ஒரு நாய்க்குட்டியை மட்டும் தனியா இருக்கும் போது ஒரு அறையில் பூட்டிட்டு..அப்ப ஒரு ஃபோட்டோ எடுங்க..

நாயின் முகத்தில் சந்தோஷம் எப்படித் தெரியும் என்பது புரியும்... மகிழ்ச்சியின் வெளிப்பாடு சிரிப்பு

ஏக்கம், சந்தோஷம், மோகம், கோபம், பயம் இப்படி பல உணர்வுகளை நாய்கள் காட்டுவதை நாம் பார்க்கிறோம். இத்தனை உணர்வுகளுமே மனம் சம்பந்தப் பட்டவை..

பயந்தவனைத் துரத்தும் நாய் எதிர்ப்பவனை துரத்துவதில்லை. அப்ப அது யோசிச்சுச் செய்யுதா யோசிக்காம செய்யுதா?

ஆக மொத்தம் பார்த்தா நாம நம்மை ரொம்ப உயர்வா நினைச்சிட்டிருக்கோம். பகுத்தறிவுப் பகலவன் அப்படின்னு கற்பனை உலகத்தில் மிதக்கறோம்.


அந்தக் கற்பனையை மறந்திட்டு நிஜத்திற்கு வருவதுதான்..

பகுத்தறிவு

இதையே கொஞ்சம் மாத்தி எழுதலாமான்னு யோசிக்கிறேன்..

தொல்காப்பியர் சொன்னது சரியாக் கூட இருக்கலாம். அதை அர்த்தப்படுத்திக்கிறதில மனுஷங்க தப்பு செய்யலாம்.

பகுத்தறிவுன்னா நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சிக்கறது இல்லை..

மனம் என்னும் ஒரு புலன் மூலம் உணர்ந்த உணர்வுகளைக் கொண்டு சேகரிக்கும் அறிவுன்னு சொல்லலாம்.

பகுத்தறிவு எப்படிக் கிடைக்குது என்று சொல்கிறார் தொல்காப்பியர்?

மனம் என்னும் புலன் வழியாக.

அதாவது மனம் என்பது புலனாக செயல்படணும்

ஒரு பிராஸஸிங் சர்க்யூட் எடுத்தம்னா

இன்புட் பிராஸஸ் யூனிட்டுக்குப் போகும்

பிராஸஸ் யூனிட் மெமரி யூனிட்டோட துணையுடன் பிராஸஸ் பண்ணி அவுட்புட் தரும்.

புலன்கள் இன்புட் - மனம் பிராஸஸ் யூனிட்(மூளையின் ஒருபகுதி) - மெமரி (மூளையின் இன்னொரு பகுதி) - அவுட்புட் - பொறிகள்(கை, கால், நாக்கு இப்படி)

இது எல்லா உயிரினங்களுக்கும் உண்டு...

ஆனால் மனம் ஒரு புலனா செயல்படுவது மனிதனுக்கு மட்டும்தான்.. அதே மாதிரி மனம் ஒரு பொறியாகவும் செயல்படுவது மனிதனுக்கு மட்டும்தான்..


நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா என்னதான் புத்திசாலித்தனமா செயல்படறதா தோன்றினாலும்.. நான் சொல்லி இருக்கிற சிம்பிள் பிராஸஸ்தான் அனைத்து விலங்குகளிடமும் காணப்படும்..

ஆனால் மனம் ஒரு புலனா, இன்புட்டை தரக்கூடியதாகவும்.. பொறியா சிந்தனைச் செயலாக்கக் கூடியதாகவும்.. சிந்தனை மீண்டும் ஒரு சென்ஸாக அதாவது உணர்வாக ஃபீட் பேக் லூப்பாகவும் உள்ள அமைப்பு மனிதனின் மூளையில் அமைந்திருப்பதுதான் விஷேசம்..


ஆனால் இந்த ஃபீட் பேக் லூப் இருக்கே அது விலங்குகளிடம் கிடையாது. அதனால்தான் வாழ்க்கைக்கு நேரடியாக சம்பந்தப் படுத்தாத எதைப் பற்றியும் அவை சிந்திப்பது இல்லை. முழுவதும் புற உணர்வுகளைச் சார்ந்தே அவற்றின் அறிவு அமைந்து விடுகிறது..அதாவது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது என்பது விலங்குகளிடம் இருக்காது. விலங்குகளின் செயல்களுக்கு நேரடி லாஜிக் இருக்கும்.

இப்ப யோசிச்சுப் பாருங்க..

பகுத்தறிவு என்பது நல்லது கெட்டது என பிரித்து அறிவது அல்ல.

மனம் ஒரு புலனாக செயல்பட்டு...

அதன் மூலம் பெறும் அறிவு...

பகுத்தறிவு...

மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு உணர்வும் செயலாக நேரிடையாக வெளிப்பட வேண்டிய அவசியம் இல்லை..

அது ஒரு கற்பனையான உணர்வாக ஃபீட் பேக்கா போய் மறுபடியும் மறுபடியும் பிராஸஸ் ஆவது மனிதன் மனதிலே..

அப்போ கற்பனைத் திறன் தான் பகுத்தறிவா என்றால் --உதை விழும்...

அறிவு என்பது உணர்வுகளின் வழியாக நாம் சேகரிக்கும் டேட்டா...

கற்பனை என்பது மனப்புலனின் உணர்வு.. இன்புட்..

இதன் வழியாக சேகரிக்கும் டேட்டா தான் பகுத்தறிவு...

இப்ப சொல்லுங்க

பகுத்தறிவு என்பது புரிஞ்சதா?

மிருகங்களுக்கு பகுத்தறிவு உண்டா?

இப்போ ரொம்பத் தெளிவா இருக்குமே..

இனிமே விளக்கம் கேப்பீங்களா? கேப்பீங்களா? கேப்பீங்களா?

No comments:

Post a Comment