Wednesday, December 2, 2009

தில் -- திரில் !!

1973

இளம்பிள்ளை. கை ஓட்டு வீட்டின் முன்னால் நிழல் தரும் பந்தல். 8 அடி உயரம் வரை இருக்கலாம்.

சின்னஞ் சிறுவனாகிய எனக்கு விளையாடச் சிறிய பொழுது போக்கு, பந்தலின் தூணைப் பிடித்து மேலே ஏறி, கீழே குதிப்பது.. உயரத்தில் இருந்து குனிந்து பார்க்கும் பொழுது சுரக்கும் அட்ரினலும், சுறுசுறுவென்று கால்களிலிருந்து தலைவரை ஏறும் சின்ன நடுக்க உணர்வும், குதிக்கும் போது இருக்கும் பறக்கும் பரவசமும் சரியாய் குதித்த பின்னால் ஏற்படும் சந்தோஷமும்..

அண்ணன் தறியோட்டப் போயிருப்பார். அப்பா ஊரிலேயே இருக்க மாட்டார். அக்காக்களோ கூட்டுறவுச் சாலையில் நூல் நூற்க, அம்மா வீட்டிற்குள் வேலையாக இருக்க, சின்ன அண்ணா நண்பர்கள் வீட்டிற்கு ஓடிவிட, நான் மட்டும் தனியாக இருக்கக் கூடிய நேரங்கள் இந்த விளையாட்டுதான்..


யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ஜாலியாகத்தான் இருந்தது.. பக்கத்து வீட்டு நாகராஜ் ஒருநாள் இதைப் பார்க்கும் வரை..

நாகராஜ் என்னை விட இரண்டு வயது மூத்தவன். ஒரு முறை நான் குதிப்பதைப் பார்த்தவன் எங்கள் வீட்டிற்கு வந்தான்..

வீட்டின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து ஏறியவன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தக் கட்டிலைத் தாண்டிக் குதிக்க

கயிற்றுக் கட்டில் சட்டெனக் காலைத் தட்டி விட்டது..

கீழே விழுந்தவன் ஐய்யோ அம்மா என அலற பெரிய கூட்டம் கூடி விட்டது,

நாகராஜின் முன்கை எலும்பு முறிந்து விட்டிருந்தது..

"இந்தப் பையன் தினமும் இப்படித்தான் பந்தல் மேலிருந்து குதிப்பான்.. அவனைப் பார்த்துதான் இவன் குதிச்சான்.. "

பலருடைய விரல்கள் என்னைப் பார்த்து நீண்டன. சிகரெட் பிடித்து நடிக்கும் சினிமா ஹீரோ போல என் நிலைமையோ பரிதாபம்..

என்னச் சொல்லி வாதாடுவது? குதிப்பது நல்லதுன்னா? யாராவது ஒத்துக்குவாங்களா? நாகராஜே அவன் என்னைக் கூப்பிடலை, நானாத்தான் குதிச்சேன் என்று சொன்னாலும் ஊர் நம்பவில்லை.

தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வெள்ளமாய் வடிய வடிய வீட்டிற்குள் ஓடிக் குப்புறப் படுத்து அழுது கொண்டே இருந்தேன்.

எல்லோருக்கும் செல்லப் பிள்ளை என்பதால் அப்பாவுக்கு செய்தி போகவில்லை. பந்தலின் மேல் அதற்குப் பின் நான் ஏறவும் இல்லை..


என்னதான் தவறு நடக்காவிட்டாலும், த்ரில்லுக்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தவறுதானே!!


த்ரில்கள் என்னை உற்சாகமூட்ட இப்பொழுதெல்லாம் முடிவதில்லை..
ஆபத்தான விளையாட்டுகள் எதற்காக இது என்ற கேள்விகள் முன் வந்து நிற்கின்றன...

சினிமா ஹீரோவை மட்டுமல்ல, அடுத்த வீட்டுக்காரர்களையும் பார்த்து தவறுகளைச் செய்பவர்கள் இருக்கிறார்கள்..


அதனால்,

ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் மாதிரி இருந்தாலும் அதில் ஏன் என்ற கேள்விக்கு தகுந்த பதிலும் இருக்கணும்.. சும்மா சும்மா ரிஸ்க் எடுக்கப் படாது.

எதுக்கு ரிஸ்கு? எனது முதல் பாடம். என் கேள்வி பிறந்த போதிமரம் .

No comments:

Post a Comment