Wednesday, December 2, 2009

காலத்தின் கையில் அது இருக்கு..!!!

அவர் எட்டாங் கிளாஸ் வாத்தியாரு. பேரு? யாருக்குத் தெரியும்.. நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்தே அவரை சி.ஐ.டி வாத்தியாருன்னுதான் பசங்க கூப்பிட்டுக் கிட்டு இருக்காங்க. ஏனா? எதோ தெரியாத மாதிரி கேட்கறீங்களே?

பின்ன பசங்க எப்படியெல்லாமோ பிட்டை ஒளிச்சு மறைச்சு எடுத்து வந்தாலும் வெளிய எடுக்கிற நேரம் பார்த்து லபக்குன்னு பிடிச்சா..

பசங்க பெல் அடிச்சு சூபர்வைசர் உள்ளே போற வரைக்கும் வகுப்புக்கு போகாம யார் வர்ராங்கன்னு பார்த்துட்டு பிட்டை எடுத்து வீசிட்டு வருவாங்கன்னா அவர் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பார்னு பாருங்க,,,

இல்லைங்க நான் மாட்டலை.. அவரோட மகன் சவுண்டப்பன் என்னோட வகுப்புத் தோழன். பழமொழிக்கேத்த மகன். பத்தாம் வகுப்பு. இறுதித் தேர்வு..

எங்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள், நன்றி உணர்ச்சி அதிகம் இருக்கறவங்கன்னு சொன்னா நம்பணும். படிக்கிற தம்பி தங்கைகளுக்காக அவங்களை கேள்வித்தாளை அவுட் பண்ணச் சொல்லி, எல்லாவற்றிற்கும் சரியான பதில்களை பியூன் மூலமாக, சன்னல் வழியாக இப்படிப் பலவகையில் கொடுத்து பள்ளியோட பர்செண்டேஜ் குறையாமப் பார்த்துக்குவாங்க..

தமிழ் முடிஞ்சது.. இங்கிலீஷும் முடிஞ்சது. கணக்குப் பரிட்சை அப்பதான் அது நடந்தது,

திடீர்னு பள்ளியைச் சுத்தி ஃபிளையிங் ஸ்குவாட். ஒருத்தனும் வகுப்புகள் பக்கமே வரமுடியலை.. பல பசங்களோட மூஞ்சியில ஈயாடலை, சில பசங்க எல்லாம் நமுட்டுச் சிரிப்போட எழுதிகிட்டு இருந்தோம்.

சவுண்டப்பன் முகத்தைப் பாக்கவே பரிதாபமா இருந்தது. எனக்கு பக்கத்தில் தான் இருந்தான்.

சரின்னு என்னோட விடைத்தாளில் முதல் நான்கு பக்கம் மட்டும் அவனுக்கு கொடுத்தேன். 20 இரண்டு மார்க் விடைகள். 40 மதிப்பெண்கள். பாஸ் பண்ணிருவான். பரவால்லே.. பாஸ் பண்ணட்டும்,

பரீட்சை எல்லாம் முடிஞ்ச பின்னால வீட்டுக்குப் போக வரும்பொழுதுதான் கவனித்தேன். சில வாத்தியாருங்களும் பசங்களும் கூட்டமா இருந்தாங்க.. எட்டிப் பாத்தேன்.

சி.ஐ.டி வாத்தியாருதான். கண்கள் பணிக்க பேசிகிட்டு இருந்தாரு. சவுண்டப்பன் எல்லாம் சொல்லி இருப்பான் போல.,

இனிமே பொதுத்தேர்வுகளில் பசங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன்.. அவங்க வாழ்க்கையே கெட்டுப் போய்டும் அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தாரு..

எனக்கு அது நல்லதா கெட்டதா புரியலை. பசங்களுக்குக் கொஞ்சம் சந்தோசம். ஆனா .. ஆனா..

அதுவே பிளஸ் டூ படிச்சப்ப பிட் அடிச்சு 5 பேர் பிடிபட காப்பியிங் செண்டர் என முத்திரை குத்தப்பட்டு எல்லோருக்கும் மார்க் குறைஞ்சப்ப

அது தவறு மாதிரி தெரிஞ்சது..

ஆனால்.. இப்போ அதையே திரும்ப நினைச்சுப் பார்க்கிறப்ப,

சவுண்டப்பனுக்கு சுயதொழில் கடனுக்கு அவனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் தான் உதவியது..

நானும் நல்ல பள்ளி என்ற பெயர் இருந்திருந்தா எதாவது ஒரு அரசு கல்லூரியில் படிச்சு, தமிழை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன். வாழ்க்கைத் தரம் இன்னும் உயரமா இருந்திருக்கலாம்.. ஆனா... இந்த உறவுகள்? அனுபவங்கள்? கஷ்டம்தான்..

இப்படித்தான்.. காலம் மாற மாற ஒவ்வொரு விஷயமும் வர்ணம் மாறிப்போகுது.. இதில எப்படிங்க, இது நல்லதா நடந்தது.. இது தப்பா நடந்தது என்று எப்படிங்க பிரிச்சுப் பார்க்கறது.

No comments:

Post a Comment