Wednesday, December 2, 2009

சாமக் கோடங்கி!!!

1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..

நான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.

வீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக் குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண் சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.

வாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை தான்.


இதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு நேரெதிரே சுடுகாடு.

காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது, 100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப் புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு வருமாம். இந்த இடத்தில் வந்த உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால் இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.

எங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..

ஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச் சொல்ல வில்லை.

அப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள் என்னையும் என் அண்ணனையும் எழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...

கலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு உடுக்கை ஒலி..

அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி கொண்டுபோய் போட,

பஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா
பசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா
தஞ்சம் நீயம்மா

அப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..


அடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம். எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு குறிசொல்லுவாராம்.

என்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..

(இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச் சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)

பஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக் கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி வந்தது..

அது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை.. ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்டர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை வரைதான்..

அமாவாசை நாள் 11:00 மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...

முதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக் காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுகிட்டது..

இதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம் அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார் கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண் கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில் உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)

நாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்.. உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப் பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும் பார்த்திடக் கூடாதாம்..

பூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது.. என்னமோ சரியில்லை..

அரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும் சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க

வியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை அங்கியை நீட்டி வாங்கியவர்..

அகோர பிணம் விழுது ஊரில
அடங்காத ஆட்டம் ஆடப்போகுது
ஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு
ஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...

எங்களுக்கோ வயிரெல்லாம் கலங்கிருச்ச்சி.,..

அந்த மாசம்தான் காமன்பண்டிகையும் வந்தது.. இது கிராமங்களுக்கே உரிய திருவிழா. இதில மன்மதனை சிவன் எரிக்கறது தான் ஸ்பெஷல். அதுக்காக துணிப்பொம்மை செஞ்சு எரிப்பாங்க.. அப்புறம் காமன் ஜெயிச்சாரா, சிவன் ஜெயிச்சாராங்கர மாதிரி ஒரு கூத்து,.. இதை லாவணின்னு கூடச் சொல்வாங்க.. இப்ப அல்லிராணியும் நானும் சண்டைப் போட்டுக்குவமே, அட சொற்சிலம்பத்தில நானும் சாம்பவியும் போட்டுக்குவமே அது மாதிரி எதிர்பாட்டு பாடறது.. ஒண்ணும் புரியலைன்னாலும் பாட்டு கூத்து .. அப்புறம் ரெகார்டு டேன்ஸ் நடந்தது. அதையெல்லாம் பாக்க எங்களை விடலை

அப்படி ஊரே ஒரு எடத்தில குந்தி ஜாலியா இருக்கறப்பத்தான் ஊரின் அடுத்தப்பக்கதில் இருந்த் குடிசை குபுக்குன்னு பத்திகிட்டு எரிஞ்சது...

ஆமாம்.. அந்த வீட்டில இருந்த பொண்ணு மண்ணெண்ணை ஊத்தி தீ வச்சுகிச்சு.. கரிக்கட்டயா தோலெல்லாம் உரிஞ்சு வாழை எலையில மூட்டைகட்டி எடுத்து வந்து எரிந்தும் எரியாம இருந்த ஒடம்பை முழுசா எரிச்சாங்க.. நாங்க நாலு நாளைக்கு பக்கத்து ஊரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம்.. (பயம்தான்)

வீட்டுக்கு திரும்ப வந்த பின்னாலயும் பயங்கரமான பயம்தான். அதுவேற நம்மகிட்டதான் கற்பனைக்குப் பஞ்சம் கிடையாதே! பையன் செத்தா பேய். பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி, யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே! பயங்கர கிலிதான்..

ஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு, வேப்பிலை, கதவில நாமம், விபூதி பூச்சு இப்படி எத்தனை எத்தனியோ பரிகாரங்கள்.. நாய் குளிரில் ஊளையிட்டாலும் சரி, வேற எதுக்கோ ஊளையிட்டாலும் சரி, கொள்ளிவாய்ப் பிசாசு அப்படிப் போகுது, கொள்ளி வாய்ப் பிசாசு இப்படிப் போகுதுன்னு கிசுகிசுப்பு பேச்சுகள்.. இப்பல்லாம் நாங்க உச்சா போகக் கூட ராத்திரியில் வெளிய வரமாட்டோம்..

சுடுகாட்டுக்கு எதிர் வீடு வேற, ராத்திரியில் எப்பவாவது சலங்கைச் சத்தம் கேட்கும். கோடங்கியா, மோகினியா.. புரியாது.. எப்பவாவது உடுக்கை சத்தம் கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்..

ஊரே கிலி பிடித்து அடுத்த அமாவாசை பூசைக்கு காத்திருந்தது.. அப்பதான் கோடங்கி பூசை போட்டு பிசாசைக் கட்டுவாராம்..

அமாவாசை வந்தது பூசையும் நடந்தது ஆனால் இந்த முறை கோடங்கி
தோற்றுப் போனார்..

இந்த அமாவசை பூஜை உக்ர பூஜையாம்.. கோழி பலிகொடுத்து பலகாரங்கள், பழங்கள், கிழங்குகள் ஏதேதோ வச்சு செய்யற பூசை,, இதில தான் கோடங்கி அந்தப் பிசாசுக்கு என்ன வேணுமோ அதைக் கொடுத்து அடக்கிச் சாந்தப் படுத்துவார்.. அதுக்கு ஒரு சின்ன துணிப்பொம்மையில பேயை அடக்கி பாடை மாத்தி முச்சந்தியில இருக்கற புளிய மரத்தில அறைஞ்சிருவாரு.

இந்த முறை இரண்டு மணி நேரத்திற்குப் பூசை நடந்தது.. கோடாங்கி குதிச்சு ஆடினார்.. உடுக்கை அடித்தார்.. மந்திரம் போட்டார்.. எலுமிச்சை நறுக்கி வீசி, பூசனி வெட்டி, கோழி வெட்டி என்னென்னவோ செய்தார்..

ஆனால் ஆவி அடங்கலையாம்.. மனித உயிர் இல்லாமல் போகமாட்டேன் எனச் சொல்லிடுச்சாம். கோடங்கி என்னென்னவோ செய்தும் பொம்மைக்குள் அடக்க முடியலை...

இம்முறை கோடங்கி சொல்லிட்டுப் போயிட்டாரு.. அடுத்து ஒரு ஆண் உசிரு போகும். அதன் பின்னால்தான் ஆவி அடங்கும்... ஆம்பிள்ளைகள் ஜாக்கிரதையா இருங்க..

ஊர் ஜாக்கிரதையாய் தான் இருந்தது.. ஒரு 10 நாட்கள் கழிந்தது.. அந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாடை மாத்திப் புளிய மரத்தில் ஊஞ்சலாடிய உடலைப் பார்க்கும் வரை...

தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது முதல்ல செத்துப் போனாளே அந்தப் பெண்ணின் எதிர் வீட்டுக்காரப் பையன்.. ரெண்டு வீட்டுக்கும் கடும் சண்டை இருந்து வந்தது..

அந்தப் பையனும் அந்தப் பொண்ணும் காதலிச்சதாகவும் அதனால்தான் அவள் வந்து அவனைக் கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டாள் என்றும் சொன்னார்கள்.

இரண்டு பேருக்கும் மத்தியில் காதல் இருந்ததா தெரியாது.. ஆனால் கோடங்கி அடுத்த அமாவாசைப் பூஜையில் இருவரையும் பொம்மைகளில் பிடித்து புளியமரத்தில் அறைந்தார்.. ஜோடியாக..

இன்னும் அந்தப் புளிய மரம் இருக்கிறது.. என் மூத்த அண்ணன் வீட்டருகே! அதைப் பார்க்கும்பொழுது அந்த பிசாசுகள் நினைவுக்கு வருதோ இல்லியோ கோடங்கியும், உடுக்கைச் சத்தமும், சலங்கைச் சத்தமும் மனசில் எழும்.

யாரிடமும் எதையும் அந்தக் கோடங்கி கேட்டதில்லை.. அரிசி வாங்கிச் சென்றாலும் எங்கே சமைத்து எப்படிச் சாப்பிட்டு, ஒருவேளை மளிகைக் கடையில் கொடுத்து காசு வாங்கிக் கொள்வாரோ?

மயில் பீலிகள் கொண்டு நள்ளிரவில் பாடம் போடுவது வேறு ஏதாவது ஊரில் இருக்கிறதா?

அதெல்லாம் விட

கோடங்கிகள் இன்னும் இருக்கிறார்களா? எதென்றாலும் ஊருக்காகச் செய்யும் கோடங்கிகளை உங்கள் கிராமங்களில் பார்த்து இருக்கிறீர்களா?

முற்றும்

No comments:

Post a Comment