Wednesday, December 2, 2009

சமையல் சாகசங்கள்!!!

அவங்க ஒரு ஸ்பின்ஸ்டர்.. சமைக்கத் தெரியாது...

இலண்டனுக்கு வேலைக்குப் போனாங்க,,,

சமைக்கணுமே ! சாதம் ரசம் மட்டும் செய்யலாம்னு ஃபோன்ல அம்மா கிட்ட ஆலோசனை கேட்டாங்க...

அம்மா சொன்னாங்க.. அரிசிக்கு 1 க்கு ஒண்ணரை விகிதத்தில தண்ணியை ஊத்தி, குக்கர்ல வை.. குக்கர்ல கொஞ்சம் தண்ணி ஊத்தி நல்லா மூடி, குக்கர் வெயிட்டை போட்டு அடுப்பில வை. இர்ரண்டு விசில் வந்த பின்னால இறக்கி வெச்சிடு கேஸ் முழுக்க இறங்க அரை மணி நேரம் விட்டு குக்கரை திற்றந்து எடுன்னு சொன்னாங்களாம்.

அரைகிலோ அரிசியை வாங்கி வந்து அம்மா சொன்ன எல்லாத்தையும் செஞ்சி... பசியோட குக்கரை திறந்தா சாதம் வேகவே இல்லை...

உடனே அவங்க அம்மாவுக்கு ஃபோன் செய்து...

அம்மா, பாலிதீன் பேக்கட்டோட அப்படியே போட்டா அரிசி வேகாதான்னு சமர்த்தா கேட்டாங்களாம்...

================================================================================================


ரெடிமேட் இட்லி...

ஆஹா இது என்ன என்று வியப்பவர்களுக்கு...

அமெரிக்காவில் உறைய வைக்கப்பட்ட இட்லி கிடைக்கிறது.. இதை சூடு செஞ்சு சாப்பிடறதைப் பற்றிதான் இந்தக் கதை...

முதன் முதலில் இந்த உறை-இட்லியை நான் தான் நியூ இண்டியன் பஜார்ல பார்த்தேன்..

ஆஹா இது நல்லா இருக்கேன் என்று சில பொட்டலங்கள் வாங்கி வந்தேன்..

குக்கரில் தண்ணீர் விட்டு அதில் அடுக்கு பானைகள் வைத்து மேலே உறை-இட்லி வைத்து முதல் நாள் சூடாக்கிச் சாப்பிட்டோம்.. மிகவும் நன்றாகவே இருந்தது..

எப்பவுமே புது முயற்சியில் இறங்குகிற என் அறை நண்பன் ஜெகன் அன்னிக்கு மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்தார்..

ஒரு உறை-இட்லி பாக்கெட்டை பிரித்து மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடாக்கி இருக்கிறார்..

அவர் வெந்து விட்டது என்று நினைத்து ஓவனைத் திறந்த போது அங்கே கருப்புநிலா இருந்ததுங்க.. பாவம் இத்தணூண்டு இட்லிக்கு 20 நிமிஷம் செட் பண்ணிட்டார். 30-45 வினாடியில் வேக வேண்டிய இட்லி 20 நிமிஷம் வெந்தா? நல்லா கரு கருன்னு நம்ம இடி அமீன் போல இருந்தது..

எனக்குத் தெரிஞ்சு உலகத்திலயே கருகின இட்லியைப் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை.. அன்றிரவு அதை ஷோகேஸில் வைத்து ஜகனை வெறுபேற்றி அடிச்ச லூட்டி இன்னும் நினைச்சா சிரிப்பு வருந்துங்கோய்.

அந்தப் பிராஸஸூக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் நுணுக்கமான முயற்சியில் இறங்கினேன்.

அது பிரெட் டோஸ்டரில் இந்த உறை இட்லியை அவிப்பது... முதல் முயற்சியே வெற்றி... உறை இட்லி பிரெட் டோஸ்டரில் பக்குவமாக வெந்தது..

அதன் பிறகு, அந்தக் கண்டுபிடிப்பு என் சைவ நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.. உறை இட்லியை போகுமிடமெல்லாம் கொண்டுசென்று டோஸ்டரில் சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்..

இன்னும் நிறைய கதைகள் இருக்கு... ஒவ்வொண்ணா சொல்றேன்.

==========================================================================================

நானும் ஜெகனும் அறைத் தோழர்களாக இருந்த காலத்தில் ரொம்பவே ஜாலியக இருந்தோம். இருவரின் ஸ்டைலும் வேறு,, நான் சமைத்தால் குறைந்த பட்சம் மூணு அடுப்பில் எதாவது ஒவ்வொண்ணு வெந்துகிட்டு இருக்கும். ஜெகன் ரொம்பவே கலை நுணுக்கம் கொண்டவர்.. வெங்காயம் அரியும் போது கூட ஸ்கேல் வச்சு அளந்துதான் வெட்டுவார்னா பாத்துக்கோங்களேன்...

ஒரு நாள் எங்க வீட்ல பார்ட்டி வச்சோம். மொத்தம் 25 பேரை கூப்பிட்டு இருந்தோம்...

ஸ்வீட், அப்பளம், மற்றும் பொரியல் செய்வது மட்டும் ஜெகனோட வேலை.. என்னோட வேலை, சாதம், சப்பாத்தி, பனீர் மட்டர் மசாலா, எண்ணைக் கத்திரிக்காய் பிரட்டல், சாம்பார், ரசம், சாதம், தக்காளி சாப்ஸ் என இருந்தது,

ஸ்வீட்டுக்கு குலோப் ஜாமுன் செய்யலாம் என்று முதல் நாள் இரவே.. ஜெகன் ஜாமூன் மிக்ஸ் பொடிகளை கலக்கி குலோப் ஜாமூன் செய்ய ஆரம்பித்தான்...

இல்லை இல்லை இப்போ அதைக் கருக்கலை. அதெல்லாம் நல்ல கருஞ்சிவப்புக் கலரில் அழகா வந்தது..

அடுத்து சர்க்கரைப் பாகு தயாரித்தார் ஜெகன்... நல்ல கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, எல்லா ஜாமூன் உருண்டைகளையும் ஊற வச்சிட்டு வந்து தூங்கினான்.

காலையில் எழுந்து ஜாமூன் டேஸ்ட் பாக்கலாம் என்று திறந்தால்...

(சமைக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்ன நடந்திருக்கும் எனப் புரியும்...)

ஜாமூன் எல்லாம் யாரோ ஒரு முனிவர் கோபத்தில நீங்களெல்லாம் கல்லாய்ப் போகக் கடவதுன்னு சாபம் குடுத்த மாதிரி கற்களாய் மாறி விட்டிருந்தன,,,

என்னடா செஞ்ச.. பாகுவை எப்படிடா காய்ச்சின என்று கேட்க.. கம்பிப் பதத்திற்குத்தான் என்றான்.. அடப்பாவி, கம்பிப்பதம் என்பது பூந்திக்கு காய்ச்சறதுடா.. அப்ப பாகு உலர்ந்து சர்க்கரை தூள் மாதிரி ஒட்டிக்கும், இங்க அவ்வளவெல்லாம் காய்ச்சக் கூடாது என்று பதறி.. மறுபடியும் 100 ஜாமூன் போட்டு எடுக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சி.

இரவு விரூந்தை எல்லோரும் பாராட்டினப்ப, அந்த கல்கண்டு ஜாமூனைக் காட்டி ஜெகனை ஓட்டினது தனிக்கதை...

No comments:

Post a Comment