Thursday, December 3, 2009

ஓ பார்வதி!

அஞ்சுதலையில் எது
ஆறுதலை
அஞ்சுகையை நீ ஆக்க
அவனோ
ஆறவனை
அக்னியிடம் கொடுத்து
சக்களத்திக்கு
சன்மானமாய் அனுப்பிவிட்டானே
குடுமியாண்டவன்
முக்கண்ணனை
காயவைத்தாட்டி
எடுப்பீரே
எண்ணெய்!


பரமனுக்கு ஐந்துதலைகள் உண்டு.. அந்த ஐந்து தலைகளுக்கும் மேலே கண்ணுக்குத் தெரியாத ஆறாவது முகம் அதோமுகம். அதோ கதி என்றால் யாருக்கும் தெரியாத கதி அல்லவா..

ஆறாவது தலை.. அதே சமயம் கங்கை ஆறு எந்த தலையில் அமர்ந்தது என்ற கேள்வியும் உண்டு.. சங்கரன் தலையில் எத்தலையில் அமர்ந்தது கங்கை என்ற கேள்வி..

ஐந்து கை கொண்ட விநாயகனை பார்வதி உடல் அழுக்கிலிருந்து திரட்டிப் படைக்கிறாள். ஆனால் திரிபுரமெரித்தவனோ ஆறாய் (ஆறு மக்களாய்) முருகனை நெற்றிக்கண்ணில் இருந்து பிறப்பித்து அக்னியிடம் கொடுத்து கங்கையில் விடச் சொல்கிறான். கங்கையில் இருந்து பிறந்ததால் காங்கேயன் என்ற பெயர் இருவருக்கு உண்டு. ஒன்று முருகன்.. இன்னொன்று பீஷ்மன்.,

கங்கையின் கணவன் சங்கரன் என்கிறோம். கங்கை சங்கரனின் மகள் என்கிறது வட இந்தியப் புராணங்கள் சில. சந்தனு கங்கையை மணந்து அஷ்ட திக் வசுக்களை பிள்ளையாய் பெற்றான்.. அவற்றில் பீஷ்மனைத் தவிர மற்றோர் பிறந்த உடனேயே கங்கையால் கொள்ளப்பட்டனர் என்பது மகாபாரதக்கதை. எனில் கங்கையை எப்படி ஈசனுக்கு மனைவியாக்குவது.. ஒரு ஆண் தன் தலையில் வைத்தாடுவது இருவரைத்தான்.. மனைவி, மகள்..

அதே போல் முருகன் தம்பியல்ல அண்ணன். புராணத்தை சற்றே உற்று நோக்கினால் புரியும். பரமன் பார்வதியை மணக்கும் முன்னரே காம தகனம் நடந்த உடனே நெற்றிக்கண் திறந்து முருகனைப் படைத்து விடுகிறான். ஆனால் பார்வதியோ மணத்திற்குப் பின்னால் கைலாயத்தில் வாழும் காலத்தில் ஆனைமுகனை படைக்கிறாள்.. அப்படியானால் யார் அண்ணன், இது வடவிந்தியாவில் உண்டு. தென்னிந்தியாவில் விநாயகன் அண்ணனாகச் சொல்லப்படுகிறான்.

காய வைப்பது என்றால் நீரில்லாமல் ஆக்குவது.. கங்கையை நீக்குவது தானே பரமனை நீரில்லாமல் ஆக்க வழி.. சடைமுடிகளுடன் கூடிய தேங்காய் எப்பொழுதுமே சிவனுடன் ஒப்பிடப்படுகிறது..

அவனிற்கும் கொண்டை.. அதற்கும் கொண்டை.. அவனுக்கும் வெள்ளைமணம் அதிலும் வெள்ளைப் பருப்பு. அவனிலும் கங்கை எனும் நீர்.. அதிலும் தெங்கிளநீர், அவனுக்கும் முக்கண், தேங்காய்க்கும் முக்கண்.. தென்னையும் உயரமாய் வளரும் அவனும் அடிமுடி காணாமல் வளருவான். அவன் தலையில் தாழை.. தென்னைமரம் தலையில் ஓலை..

எண்ணதான் காயவைத்தாலும் தேங்காயில் ஈரப்பசை போவதில்லை.. எண்ணெயாய் அதற்குள் இரண்டறக் கலந்தது அது. அது போல என்னதான் நிந்தித்தாலும் பரமனின் மனதில் கருணை ஒட்டிக் கொண்டே இருக்கும்.. அவன் உள்ளமே வரண்டு போயிருந்தால் விடா முயற்சியுடன் அடிமுடி தெரியா அவனை பிடித்தாட்டிக் கருணை பெறு என்பது தான் கரு.

No comments:

Post a Comment