Tuesday, December 1, 2009

எண்ணங்களும் மின்சாரமும்

எண்ணங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம்!!!

என்ன உடனே விவாதம் ஆரம்பிச்சாச்சா!! சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று..

அடங்குங்க மக்களே! இது அது அல்ல.. எண்ணங்களின் பண்பிற்கும் மின்சாரத்திற்கும் பண்பிற்குமான ஒரு ஒப்பீடு இது..

எண்ணங்களின் பண்புகள் மின்சாரத்தின் பண்புகளை ஒத்தவை! மின்சாரத்தின் பண்புகளை தனியே சொல்ல முடியாது. மின் தடை, மின் காப்பி, மின்னூக்கி, மின்னிரட்டை, ட்ரான்ஸிஸ்டர் என பல பொருட்களின் வழியே மின்சாரம் பாயும் பொழுது ஏற்படும் விந்தைகளை மட்டுமே மின்சாரத்தின் பண்புகளாய் கொள்கிறோம்..

அதே போல பலவகைப் பட்ட மனங்களின் வழியே எண்ணங்கள் பாயும் பொழுது ஏற்படுத்தும் விளைவுகளே எண்ணங்களின் விளைவுகள்..

மின்சாரம் ஏற்படுத்தும் அதே விளைவுகளை எண்ணங்களும் ஏற்படுத்துகின்றன.. அடிப்படையை புரிந்து கொண்டால்...

எந்த எண்ணங்களை எவருள் செலுத்தினால் எப்படிச் செலுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்று அறிய முடிந்தால்..

நாமும் மானுடப் பொறியாளர்தான்.. இது சிறிய ஆரம்ப கொள்கை அளவு ஆய்வு. அவ்வளவுதான்..

மனங்களை மேலோட்டமாக சில வகைகளாக பிரித்து ஒரே எண்ணம் ஏற்படுத்தும் விளைவுகளையும் மின்சாரம் பலவகைப் பொருள்களில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஒப்பிடப் போகிறேன்.

இதில் ஒவ்வொரு மனங்களும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவை.. அதே சமயம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஒரு வகை மனமாகவும், பிடிக்காத விஷயங்களில் வேறுவகை மனமாகவும் நாமிருக்கிறோம்..

இப்படி மனதை அறிந்து கொள்வதால் என்ன பயன்?

எதாவது இருக்கலாம்.. சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி, சொல்லத் தேவையில்லாத விஷயங்களை விட்டுவிட பயனுள்ள நிலையில் காலம் செலவழிக்கப்படும்.

எவ்வளவுதான் போராடினாலும் இழந்த ஒரு நொடியையும் மீட்க முடியாது. இருக்கும் நொடிகளை பயனுற செலவழிக்கலாம்..

ஓபன் சர்க்யூட் : சில விஷயங்களில் நம் மனம் இப்படித்தான் இருக்கிறது. சில விஷயங்களைக் கேட்கும் பொழுதே பார்க்கும் பொழுதோ அதானால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நம் கண் முன்னே இருக்கும் பார்க்க மாட்டோம். படிக்க மாட்டோம்.

பல வயதானவர்களுக்கு இம்மாதிரியான மனம் சில விஷயங்களுக்கு அமைவதுண்டு.. டென்னிஸ் என்றால் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இருக்காது.. மகனோ மக்ளோ உட்கார்ந்து ஆரவாரமாய் ரசிக்க, ஒரு பேப்பரில் மூழ்கி இருப்பார்.. இது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இருக்காது..

இங்கே எவ்வளவு கரண்ட் வந்தாலும் ஒரு சின்ன எண்ணவோட்டமும் ஏற்படுவடில்லை. டிஸ்கனெக்டட் அவ்வளவுதான்..

பல சமயங்களில் சில்லறை விஷயங்களில் இருந்து நாம் நம்மை டிஸ்கனெக்ட் செய்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது..

உதாரணமாக சில விஷயங்கள் நமக்கு உபயோகமே இல்லை என்று நாம் தீர்மானித்திருப்போம். அதை படிக்கும் போதோ அதைப் பற்றிப் பேசும் போதோ அந்த வெறுப்புணர்ச்சியே மேலோங்கி நிற்கும். அதே விஷயத்தைப் பற்றி எண்ணவோட்டங்களை செலுத்தாமல் இருந்தால் நமது மனதின் எதிர்ப்பினால் உண்டாகும் இரத்த அழுத்தம், கோபம் போன்ற பல பக்க விளைவுகள் இருக்காது.

அதிகப் படியான ரெஸிஸ்டரின் மேல் செலுத்தப் படும் மின்சாரம் அந்த ரெஸிஸ்டரை சூடாக்கி பாழாக்குவதைப் போல பிடிக்காத விஷயங்களின் மீது செலுத்தப்படும் எண்ணங்கள் நம்மைச் சூடாக்கி பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஒரு டங்க்ஸ்டனைப் போல அந்தச் சூட்டிலேயே ஒளிர்ந்து மக்களுக்கு வழிகாட்டும் ஞானிகள் சிலர் உண்டு. அவர்கள் எரிந்து போகாமல் இருக்கக் கூட வெற்றிடம் தேவைப்படுகிறது.. சாதாரண மக்களாகிய நாம் நம் மனதில் அதிக எதிர்ப்பு உள்ள எண்ணங்களுக்கு ஓபன் சர்க்யூட்ட்டாக இருத்தல் அமைதி தரும். சக்தியை வீணாக்க வேண்டிய அவசியமில்லை,

ஒரு விஷயத்தில் இல்லாவிட்டால் இன்னொரு விஷயத்தில் அதே நேரத்தை உபயோகிக்கப் போகிறோம், இல்லையா? இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?

எனவே நம்முள் அதிக ரெஸிஸ்டன்ஸ் இருக்கும் பகுதியில் நம் மனதை ஓபன் சர்க்யூட்டாக வைத்துக் கொள்ள, வெறுப்புணர்வு என்ற சூடேறி சக்தியிழப்பு, நேரமிழப்பு போன்ற சேதங்களைத் தடுக்கலாம்.

புதிய தகவல்கள் தரும் திரியினை யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பது என்னுடைய முதல் திரியினைப் பதித்தபோதே கண்டு கொண்டேன்.

இது நல்லதா கெட்டதா? இது நல்லதும் கூட கெட்டதும் கூட. நல்ல விஷயங்களை ஓபன் சர்க்யூட் மூலம் எண்ணவோட்டம் உண்டாகமல் தவிர்ப்பதின் மூலம் பல நல்லவைகளை இழந்து விடுகிறோம்

கெட்ட/தேவையில்லாத விஷயங்கள் ஓபன் சர்க்யூட் மூலம் நம்முள் எண்ணங்களை உருவாக்கததால் நமது சக்தி விரயமாவதில்லை.

எந்த விஷயத்திற்கு கவனம் செலுத்தக் கூடாது என அடையாளம் கண்டுகொள்வதின் மூலம் எண்ணவோட்டத்தில் சக்தி விரயமாவதைத் தவிக்கலாமே!!!

அடுத்தது ரெஸிஸ்டிவ் மைண்ட். தடை மனது.. நமக்குள் நாம் வளர்ந்த சூழ்நிலையாய் இயற்கையிலே அமைந்த ஒப்புக்கொள்ள மறுக்கும் தடை.

நாம் ஒரு நம்பிக்கை கொண்டிருப்போம் அதற்கு மாறான கருத்து வரும்பொழுது இம்மனம் விழித்துக் கொள்கிறது. மனதில் உள்ள எதிர்ப்புணர்வைப் பொறுத்து எண்ணங்கள் இம்மனதில் பாயும் பொழுது பலனளிக்கும் முன் அதிக சக்தி விரயமாகிறது.

இதனால் என்ன லாபம்? ஒரு உறுதியான முடிவை எடுக்க இப்படி ரெஸிஸ்டிவ் மனதில் பாயும் எண்ணவோட்டம் உதவுகிறது.. இது சரியா என்று ஒருவரிடம் ஆலோசனை கேட்பதாகக் கொள்வோம். நம் மனதில் உள்ள தடைகள் வலிமை குறைந்தவை.. ஆலோசனை சொல்பவரின் எண்ணம் இம்மனம் வழியே பாயும் பொழுது சிறிது சக்தி விரயம் உண்டு..
ஆனால் சரி (1), தவறு(0) என்ற முடிவை எடுக்க உதவுகிறது. இதே விவாதம் என்று வரும்பொழுது அதிக சக்தி விரயமாகிறது. ஆனாலும் விவாதத்தின் வலிமை அதிகமாக உள்ள பொழுது அதனால் ஒரு தீர்மானமான நிலைய எட்டவைக்க உதவுகிறது..

சர்க்யூட்டுகளிலும் இதைத்தானே சேய்கிறோம். வோல்டேஜ் சோர்ஸூடன் இணைக்கப் பட்ட ரெஸிஸ்டென்ஸ் புல்லப் ஆகவும், கிரௌண்டுடன் இணந்த ரெஸிஸ்டென்ஸ் புல்டௌன் ஆகவும் ஆகி விடுவதைப் போல தேவையான அளவு வலிமையான எண்ணவோட்டம் ஒரு உறுதியான முடிவை எடுக்க உதவுகிறது..

ஆக இதிலும் நன்மை தீமைகள் உண்டு.. தவறில்லை. எங்கு தெளிவு அதிகம் தேவைப்படுமோ அங்கு பயனப்டுத்தலாமே..

அடுத்தது... இந்தக் கட்டுரையை எழுதக் கரு கொடுத்த இண்டக்டன்ஸ்...

இண்டக்டன்ஸ் என்பது என்ன? காந்த புலம் தோற்றுவிக்கும் தன்மை கூடிய இரும்பு போன்ற ஒரு கோர் மீது எளிதில் கடத்தி கம்பி காயில் மாதிரி சுற்றப்பட்டிருக்கும். காயிலில் மின்சாரம் பாயும் பொழுது கோரில் காந்தப் புலம் உண்டாகிறது, இந்தக் காந்தப்புலம் மின்னோட்டம் மாறும் அளவிற்கேற்ப மாறுகிறது.. இதனால் காயிலில் மின்னழுத்தம் உயர்கிறது

இதேப் போல்தான்.. எண்ணங்கள். மற்றவரை வசீகரிக்கக் கூடிய சிந்தனைத் திறன் உள்ளவர்களைச் சுற்றி ஓடும் போது, அவர்களின் கோர் மனதில் உண்டாகும் காந்தப் புலத்தினால் அந்த எண்ணத்திலே மேலும் அதிக அழுத்தமான செய்திகள் சேருகின்றன.. நம் மன்றத்தில் சிலரின் பின்னூட்டங்கள் அந்தத் திரியின் மதிப்பைக் கூட்டுகின்றன இல்லையா? கவிதைப் பட்டறை, சில கவிதைப் பகுதிகள், விவாதப் பகுதிகளில் எண்ண மாற்றங்கள் எவ்வளவு அருமையான கருத்துக்களை கொடுத்திருக்கிறது. கடியையே கடிப்பது கூட இந்த வகைதானே!!!

மின் தேக்கி - கெபாசிடர், மனங்கள் எப்படித் தெரியுமா, நல்ல எண்ணங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப் படும் பொழுது வெளிப்படுத்துவது.. சொல்லப் போனால் நம்ம பென்ஸ் மனம் போலன்னு வச்சுக்குங்களே..

ஆக அடிப்படையில் இருக்கும் ரெஸிஸ்டர் / கெபாசிடர் / இண்டக்டர் போன்ற அமைப்புகள் நம் மனதிலும் இருக்கின்றன. இவை மனதில் எண்ணவோட்டங்கள் பாய்வதிணால் மாறுதல்களை ஏற்படித்துகின்றன..

இவை அடிப்படைகள்...

தூண்டப்பட்ட மின்சாரம் - இண்டக்டன்ஸ் மூலம் ஏற்படுவது போல எண்ணங்கள் நம்முள் சுற்றிச் சுற்றி வருவதினால், பலம் வாய்ந்த எண்ண அலைகளை நம்மால் உருவாக்க முடிகிறது..

இந்த எண்ண அலைகள் இதே போல் ஒத்த மனதுடையவரின் மனதையும் எண்ணவோட்டத்தில் தூண்டி விடுகிறது..

அதாவது இரு இண்டக்ட்டன்ஸ் மனதுடையவர்கள் மியூச்சுவல் இண்டக்ஷன் மூலமாய் டிரான்ஸ்ஃபார்மர்களாய் மாறுவது..

முகமாறுதல்களைப் பார்த்தே இவர் மனதில் இன்ன எண்ணம் ஓடுகிறது என்று ஒரு சிலரைப் பற்றி நம்மால் கணித்துவிட முடிகிறது..

உதிர்க்கப்படும் ஒற்றைவார்த்தை எண்னச் சுழலில் சிக்கி ஒரு கதையாகிவிடுகிறது.. நம்முள் ஓடும் அந்த எண்ணவோட்டம் நம் அருகில் இருக்கும் இன்னொருவரின் எண்ண ஓட்டத்தையும் தூண்டுகிறது..

இதே போலத்தான் கெபாசிடர் மனமும்.. தனக்கு பிடித்த அலைவரிசையில் எண்ணங்கள் கிடைக்கும் பொழுது சட்டெனச் சேகரித்துக் கொள்வது.. பிடிக்காத அலைவரிசையில் வந்தாலும், சற்று அலை ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் செய்திகளைச் சேர்த்துக் கொண்டு, தேவையான பொழுது தருவதாலும், இதி இண்டக்டர் மனதுக்கு ஒரு நல்ல துணைஆக அமைகிறது.. இவ்விரு மனம் கொண்டோர் இணைவதினால், எண்ணங்கள் ஃபில்டர் செய்யப்பட்டு, குறிப்பிட்ட வகை எண்ணங்கள் மட்டும் வெளிவருகின்றன.


இதே போலத்தான் ரெஸிஸ்டிவ் மனமுடையவரும், கெபாசிடர் மனமுடையவரும் சேரும் பொழுது அலைபாயும் எண்ணங்கள் குறைந்து (AC) உறுதியான எண்ணங்கள் மட்டுமே வெளிவருகின்றன. (DC)

ஒவ்வொருவரின் மனமும் இப்படி RLC நெட்வொர்க் கொண்டுள்ளது, ஒவ்வொரு விஷயத்திற்கும், இவைகளிம் இணைப்பும், மதிப்பும் வேறுபடுகின்றன,

இதை அறியாமலேயே உபயோகிக்கும் நாம் அறிந்து உபயோகிக்கலாம்..
அறிந்து உபயோகித்தால் எண்ணங்களின் சக்தியை நம் எண்ணப்படி மாற்ற முடியும்..

உதாரணத்திற்கு.. இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய மரத்துப் போன மனம் கவிதையை எடுத்துக் கொள்ளலாம்..

என் மனம் இண்டக்டன்ஸ் ஆக இருக்க ஆதி ரெஸிஸ்டிவ் க இருக்க..

என்ன நடந்தது??

ரெஸிஸ்டிவ் லோடாக ஆதி போட்ட வார்த்தைகள் "என் தங்கைகள்". இதனால் ஏற்ப்பட்டது எண்ணவோட்டம்..

எண்ணங்கள் இண்டக்டிவ் மனதில் ஓடியபொழுது அத்னால் ஒரு காந்தப் புலம் போல சின்ன சிந்தனைப் புலம் ஆரம்பித்தது.. இதில் மெதுவாய் காட்சிகள் விரிய மின்னழுத்தம் உயர்வது போல் கவிதையின் அடுத்தடுத்த வரிகளில் எண்ணங்கள் மீண்டும் மீண்டும் பாயத் தொடங்கியது..

ஒவ்வொரு இடரேஷன்களின் போதும் புதுக் கருத்துகள் உருப்பெற மெதுவாய் ஒரு கதை பிறந்து நிலைபெற்றது..

ஒரு சின்னக் கவிதை ஒரு பெருங்கதையாக மாறியது..

அதுசரி அவ்வளவுதானா தொடர்பு? இல்லை.. தனி மனிதர்களாக அல்லது ஒன்றிரண்டு பேராக -டிஸ்கிரீட்டாக இருக்கும் பொழுது அப்படித்தான்.. ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழப் போகும் முன் டையோடு அமைப்பையும் பார்த்து விடுவோம்..

அவ்வமைப்பு ஒரு அதீத நம்பிக்கையால் ஏற்படுவது.. ஒரு விஷயத்தைப் பற்றி நமக்கு அதீத நம்பிக்கை இருக்கும்.. அதைப் பற்றிய விஷயங்களை சரியா தவறா என்று கூட சரியாக எடைபோடாமல் கேட்டுக் கொள்கிறோம். அதே சமயம் அதற்கு எதிரான கருத்துக்கள் வரும் பொழுது எதிர்க்கிறோம். எதுவரை, நமது பொறுமை உள்ளவரை.. அதற்குப் பின் பிரேக்டவுன் ஆகி வரும் விஷயங்களை நேரடியாக குப்பைக்கு கிரௌண்ட் க்கு அனுப்பி விடுகிறோம்.

இதை பயாஸிங் என்று எவ்வளவு சரியாக பெயர் வைத்திருக்கிறோம் பார்த்தீர்களா?

நமக்குள் இருக்கும் இந்த பயாஸிங் வெளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் பொழுது நாம் டிரான்சிஸ்டர்களாகி விடுகிறோம். ஒரு ஆன்மீக குருவோ அரசியல்வாதியோ நம் எண்ணவோட்டத்தைக் கட்டுப் படுத்த முடிகிறது என்றால் அவரால் சரியான பயாஸிங் செய்ய முடிகிறதென்றுதானே அர்த்தம்.

ஆக, தனியாய் இருந்த பொழுது டிஸ்கிரீட்டாக இருந்த நம் மனது இப்படி மற்றவர்களிடம் சேரும் பொழுது டிரான்சிஸ்டர்களாக மாறி விடுகிறது..

டிரான்சிஸ்டர்களாக மனம் செயல் படுவது மிக இயல்பான ஒன்று.. மனதில் ஏற்கன்வே சேமிக்கப் பட்ட எண்ண மின்சாரங்கள் பயாஸ் செய்ய, நம்முள் ஒடுகின்ற எண்ண ஓட்டத்தின் திசை தீர்மானிக்கப் படுகிறது..

இந்தப் பயாஸிங்கை நம் விருப்பப்படி மாற்ற முடிந்தால்?

முடியாது என்போர் உண்டு. ஆனால் முடியும் என்பதற்கு நம் மன்றத்தில் ஆதாரமும் உண்டு.

எதுவும் தவறில்லை அதே சமயம் எதுவும் மிகச் சரியுமில்லை என்ற ட்ரைஸ்டேட் இதற்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.

அப்படி ஒரு மனப்பான்மை இருக்கும் பட்சத்தில் வெவ்வேறு பயாசிங் செய்வதின் மூலம், வேறுபட்ட பார்வைகளின் மூலம் ஒரே ஒரு எண்ணத்தின் பல்விதமான சாத்தியக் கூறுகள் பார்க்கக் கிடைக்கின்றன.

ஒரே நிகழ்வு. அதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண்ணவோட்டங்கள். அந்த எண்ணவோட்டங்களை தீர்மானிப்பது பயாஸிங் என்னும் அந்த முன்பே கொண்டிருக்கும் கருத்து..

ஆனால் ட்ரைஸ்டேட்டாய் உள்ள மனதில் வெவ்வேறு பயாஸிங்குகள் செய்து பார்ப்பதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு இந்த மனாமைப்பு இருந்தால் இவ்விதம் நம்து எண்ணவோட்டம் இருக்கும் என அறிய முடிகிறது..

இதற்குத் தேவைகள்..சில நம்பிக்கைகள்

1. யாரும் தவறாகத்தான் செய்யவேண்டும் என விரும்பிச் செய்வதில்லை. அவர்கள் செய்வதுதான் சரி என்பதற்கான ஒரு பயாஸிங் அவர்கள் மனதில் உள்ளது. அது என்ன என்பதை அறிந்தவர்களும் இருக்கலாம்.. என்ன என அறியாதவர்களும் இருக்கலாம்.

2. எந்த ஒரு நிகழ்வும் ஒருவர் மட்டுமே சம்பந்தப் பட்டதல்ல. எந்த ஒரு முடிவும் அதுபோல ஒருவர் மட்டுமே சம்பந்தப் பட்டதல்ல.

3. எண்ண ஓட்டங்கள் நிகழும்பொழுது அதன் விளைவான நாம் எடுக்கும் முடிவைப் பற்றி முன்பே கவலைப்படக் கூடாது.. பத்துப் பதினைந்து விதமான முடிவுகளை நம் எண்ண ஓட்டங்கள் கொடுக்கலாம்.. அவை நமக்குப் பிடித்தும் இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம்.. எண்ண ஓட்டங்களைச் செயலாய் மாற்றும் பொழுது விளைவுகளைச் சிந்தித்தால் போதும்..

இது இப்படி இருந்தால் என ஒரு கோணத்தில் பயாஸ் செய்து யோசிக்கும் பொழுது வரும் எண்ணங்களை அதன் போக்கில் விட்டு அதனால் வெளிப்படும் முடிவை மட்டும் தனியாக்கி ஆராய்தல் நல்லது,,

இப்படி காணப்பட்ட முடிவுகளில் இருந்து பின்னோக்கி மனதில் பயணம் செய்யப்படும் பொழுது என்ன காரணத்தினால் ஒரு எண்ணம் தவறான திசையில் ஓடியது எனத் தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒரு தவறான பயாசிங்கை மாற்றுவதால் நமது எண்ணத்திற்கு நிரந்தர நல்லோட்டம் கிடைக்கிறது. அதை விட்டு கடைசியில் கிடைத்த முடிவுகள் தவறென்று வாதிடும் பொழுது பொறி பறக்கும் விவாதங்களும் மன வருத்தங்களும் மிஞ்சுகின்றன,

இப்படி முடிவெடுக்கும் மனம் ஸ்விட்சிங் டிரான்சிஸ்டர்களாக. மனித மனம் பலகோடிக் கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஒரு அதிவேகமான பிராஸஸராய்த் தெரிகிறது,, இதற்கென இன்புட் ஐம்புலன்கள்.. அவுட்புட் ஐம்பொறிகள்.. நினைவகத்தில் இருந்து அனைத்தும் கொண்ட மிகப் பெரிய கணிப்பொறி.. இன்றைய கணிணி யை விட பலகோடி மடங்கு சிக்கலானது..

புலன்கள் மூலம் பெறப்படும் சிகனல்களினால் எண்ணவோட்டம் ஏற்பட்டு செயல்களாய் வெளிப்படுகிறது..

மனிதன் படைத்த கணிணி ஒரே மாதிரி இருக்கலாம்.. ஆனால் மனிதனாகிய கணிணி செல்ஃப் மேக்கிங் எனும் வகை. நம்மை நாம் அறிந்தால் நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடிகிறது.. மற்றவரைப் போல நம்மையும் சிமுலேட் செய்து கொண்டு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயல்கிறது..

மனதில் உள்ள இந்த அடிப்படைச் சர்க்க்யூட்டுகளின் இணைப்பு, ஆரம்பக் காலங்களில் இலகுவாக மாறும்படியாக இருக்கிறது. இதனாலேயே குழந்தைகளால் எதையுமே எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது.

நாளாக நாளாக சில இணைப்புகள் அடிக்கடி இணைக்கப்படுவதால் அவை தற்காலிக இணைப்புகளில் இருந்து நிரந்தர இணைப்புகளாக மாறுகின்றன.. இதனால் நல்லதுமுண்டு தீமையுமுண்டு..

முடிவெடுக்கும் வேகம் அதிகரித்துவிடுகிறது. பிரடிக்டபிளிட்டி, இவர் இன்னதுதான் சொல்வார், செய்வார் என்று நிர்ணயிப்பது மிக எளிது.,.. எடுக்கும் முடிவுகளில் பல சமயம் இதுதான் சரி என்ற நம்பிக்கை இருக்கிறது..

ஆனால் பல வழிகளை ஆலோசிப்பதும், ஒவ்வொன்றையும் ஒப்பு நோக்குவதும்.. படைப்புத்திறன், புதுமை (கிரியேட்டிவிடி, இன்னோவேஷன்) போன்றவையும் குறைகின்றன..

இப்படி நிரந்தர சர்க்யூட்டுகள் மனதில் அமையாமல் இருக்க வேண்டுமானால் ஒரே விஷயத்தைப் பற்றி மட்டுமே படித்தல் பேசுதல் அறிந்துகொள்ளுதல் போன்றவற்றை மாற்றிக் கொள்ளுதல் அவசியமாகிறது...

திரும்பத் திரும்ப ஒரே வேலையை செய்வதால் மனதின் அனிச்சை செயல்பகுதியின் அது ஒரு நிரந்தரச் சர்க்யூட் ஆக.. தூக்கத்திலும் கனவிலும் கூட அதன் வழியே எண்ணவோட்டங்கள் இருக்கின்றன..

ஆக ஒரு திறமையை வளர்த்துக் கொள்வது என்பது எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அதே அளவிற்குக் கெடுதலையும் தருகிறது.. அதித் தடுக்க அந்த ஒரே ஒரு காரியத்தில் மட்டுமே முழுகாமல் மனதிற்கு, அதிகம் உபயோகிப்படுகிற அந்த ஒரு பகுதி மட்டுமல்லாமல் மற்ற விதமானச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்தல் நல்லது..

அப்படியானால் தியானம் கெடுதலா?

கெடுதலில்லை, தியானத்தின் ஆரம்ப நிலையில் எந்த எண்ணங்களையும் கட்டுப் படுத்த வேண்டாம் என்கிறது பாடமுறை..

இந்த மந்திரத்தை சொல்ல நினைவிருக்கும் வரை மனதில மட்டுமே உச்சரி.. எந்த நினைவையும் கட்டுப் படுத்தாதே..

இது எண்ணங்களை டிஸ்சார்ஜ் செய்யும் முறை.. மனதில் புதிதாய் எண்னங்கள் பாய்வதில்லை.. இருக்கும் எண்ணங்கள் மெதுவாய் டிஸ்சார்ஜ் செய்யப் படுகின்றன. சிலசமயம் மனம் நிரந்தர சர்க்யூட்டிலிருந்து ஃபிளெக்ஸிபிள் சர்க்யூட்டாக இந்தத் தியானமுறை உதவுகிறது..

தியானத்தின் ஆரம்பம் மந்திரம் உருவேற்றுதல்.. உச்சி எந்த எண்ணமும் இல்லாமல் இருத்தல்..

எண்ணங்கள் இன்னும் எத்தனையோ அதிசயங்களை நமது உடலுக்கும் செய்கின்றன, காரணம் எண்ணங்கள் என்பது ஒரு வகை மின்னோட்டம். குவாண்டம் - பருப்பொருள் இயற்பியல் எண்ணங்களின் சக்தியை சிறிது ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்..

No comments:

Post a Comment