Tuesday, December 1, 2009

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கதை.. பெயர்கள், இடங்கள் கொஞசம் மாற்றுகிறேன்.. ஏன்னா...


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!


கம்பெனி கொஞ்சம் மாற்றங்களுக்கு ஆளாகி கிட்டு இருந்தது. ஒரு மிகப் பெரிய டிவிஷனைக மூடிவிட்டார்கள். அதில் இருந்த ஊழியர்கள் மற்ற டிவிஷன்களுக்கு ட்ரெய்னிங்கிற்கு அனுப்பப்பட்டார்கள்.


டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் (தொழில்நுட்ப பரிமாற்றம்) என்பதற்காக அமைக்கப்பட்டிருந்த எங்கள் குழு வளர்ந்து ஆராய்ட்சி மற்றும் விரிவாக்கக் குழுவாக வளர்ந்து வருகின்ற நேரம்..


முக்கிய ஊழியர்கள், விலாஸ், நான், கார்த்தி, ஸ்ரீநாத்.. மற்றும் சில அல்லக்கைகள்..


வருபவர்களுக்கு ட்ரெய்னிங் தரும் வேலை என்னிடம் கொடுக்கப்பட்டது. ஸ்வாதி, நீலிமா, மயாங்க், அர்ஜூலி, மரீனா, முகேஷ், மௌ எனப் பலர் என்னிடம் பயிற்சி பெற்றார்கள். யார் எந்த கிரேடு என்று தெரியாது.


எங்கள் மேலாளர் எங்களிடம் "நல்ல" பெயர் வேறு எடுத்திருந்தார். குறிப்பாக என்னிடம்.


எப்படி அக்னி நட்சத்திரக் காத்தில மழை வாசனை வருமோ அது மாதிரி மாற்றங்களின் வாசனை கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது..


ட்ரெய்னிங் நல்லாதாங்க போச்சு. ஒரு பிரச்சனையுமில்லை. எல்லோருக்கும் நானும் ஸ்ரீநாத்தும் கத்துக் கொடுக்க வேண்டியதெல்லாம் கத்துக் கொடுத்தோம்.


ட்ரெய்னிங் முடிந்த பின்னால்.. ஒரு வாரம் போயிருக்கும்..


எனக்கு ஒரு ஃபோன் வந்தது..


செல்வன், உங்க பயோடேட்டா கிடைச்சது.. நாங்க யூ எஸ்ல இருந்து வர்ர என். ஆர். ஐ. பாம்பேல புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்கப் போறோம். உங்களை மாதிரி துடிப்பான, அறிவுள்ள இளைஞர்கள் தான் தேவை. வெள்ளிக் கிழமை பாம்பே ஜூஹூ பீச்சில இருக்கிற ஹாலிடே இன் ல மீட் பண்ணுவமா என்றார் நீலகண்டன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட  அவர்.


சரி வருகிறேன் என்று சொல்லி விட்டுப் ஃபோனை வைத்தேன்.


மாலை நெருள் போக வேண்டிய ஸ்ரீநாத்தும் எங்களுடன் தாதர் பஸ்ஸில வந்தது ஆச்சர்யமாக இருந்தது. (நாங்க தாணே ல தங்கி இருந்தாலும் தாதர் போய், அப்புறம் ஊர்சுத்திட்டு, இரவு மாதுங்காவில் சாப்பிட்டு விட்டு, தாணே போறதுதானே வழக்கம்)


தாதரில் வழக்கமாக டீ அருந்தும் திறந்த வெளி ஹோட்டலில் டீ அருந்திய போது கார்த்தி தான் ஆரம்பித்தான்..


செல்வன் உனக்கும் ஃபோன் வந்ததா?


தொடரும்.


========================================================================================


ஏற்கனவே, என்னடா என்னுடைய பேர் ஃபோன் நம்பர் பயோடேட்டா என பல விஷயங்கள் எப்படி யார் கைக்கோ கிடைத்தது என்ற குழப்பம். (அப்ப இணையமும் கிடையாது, மின்னஞ்சலும் கிடையாது) இதில எனக்கு ஃபோன் வந்ததா எனச்  சரியாய் வேறக் கேட்கிறானே..


ஆமாம் வந்தது என்ன விஷயம் என்று கேட்டேன்.


உனக்கும் எனக்கும் மட்டுமில்லை, ஸ்ரீநாத், விலாஸ் நாலு பேர்த்துக்கும் வந்திருக்கு. - கார்த்திக் சொல்ல


அப்படியா? எப்படி? ஏன்? - கேட்டேன்..


தெரியலை ஆனா உள்ளுக்குள்ள இருக்கிற யாரோ ஒருத்தர்தான் நம்ம விவரங்கள் குடுத்திருக்காங்க... கார்த்தி சொல்ல


இப்ப என்ன செய்யலாம் யோசனையாய்க் கேட்டேன்.


வெள்ளிக்கிழமை போய்ப்பார்த்துப் பேசுவோம். என்ன விஷயம், யார் என்று பார்ப்போம். அப்புறமா முடிவெடுக்கலாம் - விலாஸ் சொல்ல சரியாகவேப் பட்டது.


வெள்ளிக்கிழமை.  காலை சீக்கிரமே நானும் கார்த்தியும் ரெடியாயிட்டோம். ட்ரெய்ன் பிடிச்சு தாதர் போய் அங்கிருந்து பாந்த்ரா போய், ஜூஹூ பீச்சிற்கு பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம். அங்கே சிறிது நேரம் காத்திருக்க முதலில் விலாஸூம் அப்புறம் ஸ்ரீநாத்தும் வந்து சேர்ந்தனர்.


ஹாலிடே இன்னிற்குப் போய் ரிஷப்ஷனில் நீலகண்டன் என விசாரிக்க அங்கே காத்திருந்த ஒருவர் எழுந்து வந்தார்.


எங்களை எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவர் எங்களை ஒரு அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு இன்னொருவர் இருந்தார். ரவிசங்கர் என்று தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


ரவிசங்கர் மும்பையில் புதிதாய் தான் ஒரு தொலைதொடர்புக் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கு எங்களை மாதிரி அறிவுள்ள இளைஞர்கள் தேவை எனவும் சொல்லி, அவரது திட்டங்களை விவரித்தார்.


எங்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நாங்கள் கேட்க, உங்களை மட்டுமல்ல, இது போல தொலைதொடர்புப் பொறியியல் கம்பெனிகளில் வேலை செய்யும் சிலரைப் பற்றியும் எங்கள் நண்பர்கள் மூலம் அறியப் பெற்றேன். உங்களைப் பற்றி மிக உயர்வான அறிக்கை இருக்கிறது. உங்களைப் போன்றவர்களால்தான் கம்பெனியை தூக்கி நிறுத்த முடியும் என எங்களுக்கு பயங்கரமாக ஐஸ் வைத்தார்.


பேச்சின் முடிவில் எங்கள் நால்வருக்கும் ஆளுக்கொரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுக்கப்பட்டது. நாங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இரண்டரை மடங்குச் சம்பளம்.


எங்கள் பதிலை இரண்டு வாரங்களில் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம்.


என்ன செய்வது என்று புரியவில்லை. சாப்பிட்டு விட்டு ஒரு ஹிந்தி சினிமா பார்த்தோம் நிறைய பேசினோம்.


இரண்டு மூன்று நாட்கள் எங்களுக்குள் பல ரகசியச் சந்திப்புகள் நடந்தன. கார்த்திக்கு டி.வி.எஸ் எலக்ட்ரானிக்ஸில் இன்னொரு வேலையும் இந்தச் சமயத்தில் கிடைத்தது.


அடுத்த வாரம் முடிவு செய்தோம்.. சரி இந்தக் கம்பெனியில் ராஜினாமா செய்து விட்டு புதுக்கம்பெனிக்குச் செல்வதென.


ஆனால் எப்படிச் செய்வது. ஒரே நாளில் வேண்டாம், சிறிது கால இடை வெளி கொடுக்க வேண்டும் என் முடிவு செய்தோம்.


அடுத்த சனிக்கிழமை..


மாலை 4:30 மணிக்கு எங்கள் பஸ் கிளம்பிவிட கார்த்தி மட்டும் அலுவலகத்தில் தங்கினான். மேலாளர் வீடு பக்கத்தில் என்பதால் அவர் ஆறு மணிக்குதான் வீட்டுக்க்குக் கிளம்புவார். எல்லோரும் சென்ற பின்னர், தன் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்து, தான் சென்னை செல்ல வேண்டி இருப்பதாகவும், குடும்பத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை என்றுச் சொல்லி வேலையை ராஜினாமா செய்தான்.


அடுத்த நாள்..


காலையிலிருந்து மாலை வரை விலாஸூடன் மேனேஜர் ஆலோசனையில் ஈடுபட்டார். கார்த்தி போன்ற ஒரு நல்ல பொறியாளரை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதல்ல. எதையும் நேர்த்தியாய் செய்வதில் கார்த்தியைத்தான் அவர் நம்பி இருந்தார். அப்பொழுது எங்கள் அலுவலகத்தில் C மொழி நன்கு தெரிந்தவன் கார்த்தி மட்டுமே. (நாம வல்லுனர் எல்லாம் கிடையாதுங்க.).. எனவே அவன் இழப்பை எப்படி ஈடு கட்டுவது என்பதுதான் ஆலோசனையே.


மறுபடியும் அதே ஐந்து மணி.இன்று விலாஸ் மட்டும் ஆஃபிஸில் இருந்து கொண்டான். ஐந்து மணிக்கு ராஜினாமாக் கடிதம் கொடுக்க..


மேலாளருக்கு ஏற்கனவே ஆஸ்துமா தொல்லை உண்டு. உறிஞ்சு குழலை எடுத்து உறிஞ்சி விட்டு மிகவும் கஷ்டப்பட்டார் போல.. அன்று ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மருத்துவராகிய மனைவியைத் தேடி..


மறுநாள் முழுவதும் விலாஸைச் சமாதானம் செய்ய முயன்றுத் தோற்றுப் போனார். மூன்றாம் நாள் ஸ்ரீநாத்தை அழைத்து ஆலோசனையை ஆரம்பித்தார். கார்த்தி சென்னை செல்கிறான், விலாஸூம் செல்கிறான். இது கம்பெனிக்கே மிகப் பெரிய இழப்பு என்று காலையில் இருந்து மாலை வரை மிகப் பெரிய ஆலோசனைத் தொடரே நடந்தது. என்னவோ நடக்கிறது என்று டிபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு புரிந்து விட்டது. எங்கள் டிபார்ட்மெண்ட் மட்டும் தனிக் கட்டிடத்தில் இருந்ததால் மற்றபடி யாருக்கும் எதுவும் தெரியாது.
மாலை 5 மணி. இன்று ஸ்ரீநாத் தன்னுடைய ராஜினாமாவைக் கொடுத்தான்..


தொடரும்.


========================================================================================


அன்று ஸ்ரீநாத்திடம் மன்றாடி மல்லுகட்டி என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தார் மேலாளர். அத்தனை முயற்சியும் வீணாய்ப் போனது..


அடுத்த நாள் காலையிலேலேயே என்னை அழைத்தார். எனக்கும் அவருக்கும்தான் "மிக நல்ல" உறவாச்சே. ஆகவே முதல் ஒரு மணி நேரம் என்னிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். நிலைமையை விவரித்தார். கார்த்தி உன் ரூம்மேட். அவன் போவது உனக்குத் தெரியும். ஏற்கனவே சந்துரு விட்டுப் போய்விட்டான், இப்பொழுதுதான் நாம மேல வந்துகிட்டு இருக்கோம். கம்பெனியில் நம்ம குரூப்பிற்கு ரொம்ப நல்லப் பேரு.. என பல விஷயங்களைப் பேசினார். அப்புறம் விலாஸ் ராஜினாமா செய்து விட்டான். அவன்தான் இருக்கிறதிலயே சீனியர்.. அவன் பணத்தேவைக்காக அவன் போகணும் என்கிறான். அதனால இத்தனை புராஜக்ட் தேங்கப் போகுது. ஸ்ரீநாத் பெங்களூர் போகணும்கறான்.


இத்தனைப் போனாலும் உன்னால மறுபடியும் இந்த க்ரூப்பை ஒரு லெவலுக்குக் கொண்டு வர முடியும். உனக்கு என் மேல மனவருத்தம் இருக்கலாம். அப்ப அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நாம இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வேலை செய்யணும். உனக்கு என்னென்ன வேணுமோ என்னைத் தயங்காமக் கேளு. எதுவேண்டுமானாலும் செய்து தர்ரேன். உன்னுடைய ஒத்துழைப்பு எனக்கு இப்போ மிக முக்கியமாத் தேவை எனப் பலப்பல விதமாக என்னைக் கெஞ்சியும் ஆசை காட்டியும் பேசினார். அவர் சுத்தமாக பயந்து போயிருந்தார். ஒருவர் இருவர் என்றால் பரவாயில்லை, ஏறத்தாழ பாதி டிபார்ட்மெண்டே இப்போ காலி. வேலை தெரிஞ்ச ஒரே ஆள் நான் தான்.


அன்று முழுவதும் அடுத்த நாள் முழுவதும் என்னிடம் ஒரே டிஸ்கஷன் தான். என்னை முடிந்த வரை ஊக்கப்படுத்தி எல்லாப் புராஜக்ட் டீடெய்லும் வாங்கிக்கோ எனச் சொன்னார்.


அன்று மாலை 5:00 மணிக்கு நான் ராஜினாமாக் கடிதத்துடன் அவர் அறைக்குச் சென்றேன்.


அவர் முகம் வெளிறிவிட்டது. எதோ பெரிய விஷயம் நடந்துவிட்டது.. சிலந்திவலையில் சிக்கிய பூச்சி போல தவித்தார். நானும் ராஜினாமா செய்வதாக முடிவெடுத்து இருக்கிறேன் என்று சொன்னதும் அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்தவர், தன் ஆஸ்துமா உறிஞ்சு குழலின் உதவியால் ஒரு பத்து நிமிடம் கழித்துதான் சற்று நிதானமானார்.


என்ன செய்வது என்று புரியவில்லை அவருக்கு. கடந்த ஒருவாரமாக நடந்த ராஜினாமாப் படலத்தின் உச்சத்தை அடைந்துவிட்டோம் என்று மட்டும் புரிந்து கொண்டார். இப்போது சொல்லிப் புலம்பவோ ஆதரவு தேடவோ வேறு ஆட்கள் பாக்கியில்லை. எங்கள் நாலுபேரையும் வேறு ஆட்களைக் கொண்டு இட்டு நிரப்பவும் முடியாது.


அவருக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அப்பொழுது எங்கள் கம்பெனி விற்ற தொலைதொடர்பு அகத்தில் எங்களின் மென்பொருள் ஆக்கங்கள், வசதிகள் இன்றி ஒரு எந்திரம் கூட விற்பனை ஆகாது. எனவே விற்பனைப் பிரிவு, தயாரிப்புப் பிரிவு என எல்லாப் பிரிவுகளிலும் எங்கள் கொடி பறந்து கொண்டிருந்தது. இப்பொழுது இது போன்ற ஒரு மகாநெருக்கடிக்கு உள்ளாக்கும் நிலைமையை அவரால் எங்கும் மறைக்கவும் முடியாது..


பேச வார்த்தைகள் இன்றித் தடுமாறினார். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்துவிடாதே உனக்கு மிக நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உனக்கு இப்பொழுது இருக்கும் புகழுக்கும், இப்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்புக்கும் உனக்கு வளமான வாய்ப்பு காத்திருக்கிறது எனச் சொல்ல மட்டுமே முடிந்தது..


எல்லாம் யோசித்துதான் முடிவு எடுத்திருக்கிறேன். மாற்றிக் கொள்ள இயலாது என்றுச் சொல்லி விட்டு வந்தேன்..
அலுவலகத்தில் புயல் மையம் கொண்டாகி விட்டது. ஏறக்குறைய எங்கள் குழுவையே மூடவேண்டியச் சூழ்நிலை. வெள்ளிக்கிழமை வந்து விடவே அன்று தலைமை அலுவலகத்தில் பல விஷயங்கள் அரங்கேறி இருக்கக் கூடும்.


சரியானச் செயலைத்தான் செய்கிறோமா இல்லைத் தவறு செய்கிறோமா என்று தெரியவில்லை. மனம் குறுகுறுவெனத் தவித்தது. உறக்கம் போய்விட்டிருந்தது.


அதிபயங்கர சாகசங்கள் நிறைந்த அந்த வாரம் முடிந்தது, அடுத்த வாரம் ஆரம்பித்தது.


தொடரும்.
========================================================================================


சனிக்கிழமை பேருந்தில் எல்லோரும் குசுகுசு வெனப் பேசிக் கொண்டார்கள். எனக்கு ஹிந்தி தெரியாதென்பதால் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மேட்டர் லீக் ஆகி இருக்கிறது என்று நன்றாகவே தெரிந்தது.


அன்று அலுவலகம் சுரத்தில்லாமல்தான் போனது. மாலை மறுபடி அதே ரெஸ்டாரெண்ட். விலாஸ் தான் பேச ஆரம்பித்தான்.


நான் அவர்கள் ஆரம்பிக்க போகும் ஆஃபீஸ் கட்டிடத்தைப் பார்க்கப் போனேன். ஆனால் என்னவோ எனக்கு அந்த கம்பெனி ஏதோ ஒரு பித்தலாட்டமோன்னு சந்தேகமா இருக்கு. அங்க போனா இரண்டு மூணு மாசத்தில இழுத்து மூடிட்டா என்ன செய்யறது..


எங்கள் முகங்கள் வெளிற ஆரம்பித்தன. ஆமாம் என்ன செய்யறது? கேள்விகள் எதிரொலிக்க ஆரம்பித்தது..


நான் எப்படியும் சென்னை போறேன். அதனால எனக்குப் பிரச்சனை இல்லை. என்ன செய்யலாம்?


விலாஸ் தான் சொன்னான். மேனேஜர் எனக்குக் குளோஸ் நான் வேணும்னா பேசி சரி செய்திடறேன். நாம பேசாம வாபஸ் வாங்கிக்கலாம்.


எல்லோரும் ராஜினாமா பண்ணி எல்லோரும் வாபஸ் வாங்கினா அப்புறம் இமேஜ் என்ன ஆகிறது..


கவலைகள் நெஞ்சை அரிக்க அன்று உணவு இறங்கவே இல்லை. வீரதீரமா வேற பேசிபுட்டோம். இப்ப என்ன செய்யறது. எல்லாரும் பின் வாங்கறாங்க. நாம கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ!


மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருளாய் குவிய.. மறுநாள் ஞாயிறு...


தொடரும்


========================================================================================


இறுக்கமான ஞாயிறு. (ஆமாம். புதிய மும்பை எனப்படும் வாசி, துர்பே, பௌனே, மாபே, நெருள், சி.பி.டி பேலாபூர் போன்ற இடங்களில் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை)


முகம் இருண்டு சோகம் கவிந்து அடிவயிற்றுப் பிரட்டலகளுடன் பேருந்தில் போய் துர்பே -வில் உள்ள அலுவலகத்தில் இறங்க அங்கே எங்களுக்காக ஒரு அம்பாஸடர் கார் காத்திருந்தது.


எங்கள் நால்வரையும் கம்பெனி பிரசிடெண்ட் "டைகர்" சந்திக்க இருக்கிறாராம்.


என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விட்டது. ஸ்ரீநாத்தும், விலாஸூம் எப்படியும் ராஜினாமாவை திரும்பப் பெறப்போகின்றனர். நான் என்ன செய்வது வாங்குவதா வேண்டாமா?


அம்பாஸடர் பௌனோவில் உள்ள ஃபேகடரிக்கு அழைத்துச் செல்ல, நாங்கள் ஒரு அறையில் அமர்த்தப்பட்டோம். விலாஸிற்கு முதலில் அழைப்பு வந்தது..


அவன் சென்று ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தான். நான் ராஜினாமவை திரும்பப் பெற்றுவிட்டேன் என்று கிசுகிசுத்தான். அதற்குப் பின் கார்த்தி...அடுத்து ஸ்ரீநாத்.. கடைசியாக நான்..


இதுவரை இவரை நான் பார்த்ததில்லை. டைகர் என்பது இவரது அதட்டல் உருட்டல் மிரட்டல்களால் இவர் பெற்ற பட்டப் பெயர். என்ன பேசப் போகிறார்.. என்ன சொல்வது.. அமைதியாக இருந்தேன்.


செல்வன் உன்னைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சொல் என்னால் உனக்கு உதவ முடியும் என நினைக்கிறாயா?


பாய்ண்ட் பிளாங்க் ரேஞ்சிலிருந்து சுடப்பட்டது போலச் சுரீரென வலித்தது.


அதுவந்து என ஆரம்பித்தேன்.


ஏன் நடந்தது. என்ன நடந்தது என்பது தேவையில்லை, நீ இதே கம்பெனியில் பணிசெய்ய வேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்..அவரது கேள்வி வெகுவும் நேரடியாக இருந்தது. இருவர் பின்வாங்கியது அவரது உறுதியை அதிகமாக்கி இருக்க வேண்டும்,


கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது எதையாவது சொல்லிச் சமாளிக்க வேண்டுமே,


எனக்கு மேலாளர் சரிப்படவில்லை,


சட்டென வாயைத் திறந்து சொன்னேன்..


தொடரும்


========================================================================================
புதியதாக ஒரு வாசகம் கேட்டதும் "டைகர்" சட்டென்று திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். என்ன.. என்ன நடக்குது என்றார்.


நிறைய பார்சியாலிட்டி.. என்னால் முடிந்த அளவு உழைத்திருக்கிறேன். மூன்று மாதம் என்று ஜாலியாக டைம் கொடுக்கப்பட்ட புராஜெக்டுகளை மூன்று நாட்களில் முடித்துக் காட்டி இருக்கிறேன்...


ம்ம் தெரியும் தெரியும்.. மார்கெட்டிங் மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஆனால் எங்களுக்குரிய மரியாதை கிடைப்பதில்லை, சம்பந்தமே இல்லாமல் பி.ஜே,பி அவர்களை எங்கள் மீது அதிகாரம் செலுத்தி எங்களை அடங்கிப் போகச் சொல்கிறார்கள். என்னால் அது இயலாது...


ம்ம். மேலே சொல்லு...


இன்னும் இப்படிச் சில நிகழ்ச்சிகள்.. உழைப்பிற்கேற்ற மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குப் போய் விட்டது..


நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு உரிய மரியாதை கிடைக்கும். கவலைப்படாதே!


இருந்தாலும், என் முடிவில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்த முடியாது, நான் இந்த மேலாளரின் கீழ் பணி செய்ய மாட்டேன்.


அதற்கும் ஏற்பாடு செய்கிறேன் கவலைப்படாதே. இன்னும் இரண்டு வாரங்கள் எனக்கு கொடு. உனக்கு புதிய மேலாளரும் மற்றும் உங்கள் குறைகளை எல்லாம் களைகிறேன்..


இது நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். இதைத் தவிர என் ராஜினாமாவிற்கு மிகப் பெரிய காரணம் வேறொன்றுமில்லை..


நல்லது. முழு மனதுடன் வேலை செய். மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்..


யூ டர்ன் அடித்து வெளியே வந்தேன்.. முகத்தில் செயற்கையான மற்றும் சங்கடமான புன்னகையோடு.


தொடரும்


========================================================================================


அதற்குப் பின் மள மளவென பல மாற்றங்கள் நடைபெறத்துவங்கின.


எங்கள் துறைக்கு டைரக்டராக சங்கர் என்பவர் சக நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டார். இன்னும் இரு மேலாளர்கள் மென்பொருளுக்காக ஒருவர், புராஜக்ட் மேனெஜ்மெண்ட்டுக்க்காக ஒருவர் என இருவர் நியமிக்கப்பட்டனர்.


6 புதுமுகங்கள். அணி பெரிதானது. நான் நேரடியாக இயக்குனரின் கீழ் கொண்டுவரப்பட்டேன்.


இப்பொழுது தெரிந்த பெயர்களைப் பட்டியலிடலாம்..


முகேஷ், ஸ்வாதி, மௌ புது ஊழியர்கள். அர்ஜூலி, மரினா தயாரிப்புத் துறையில் இருந்து இங்கு மாற்றல் பெற்றவர்கள். மயாங்க் மார்க்கெட்டிங் செல்ல நீலிமா புராஜக்ட் மேனேஜராக எனக்கு உதவியாக (அவருக்கு உதவியாக நான்?) அமர்த்தப்பட்டார். முகோபத்யாயா என்பவர் மென்பொருள் மேலாளராக பதவியேற்க...


புது அலை ஒன்றும் புறப்பட்டது.. ஜிம், சமந்தா, மக்ரந்த், தாமஸ் என நான்கு புத்தம் புது இளைஞர்கள் என்வசம் ஒப்படைக்கப் பட்டனர். விபின், அபிஜித், அபிஷேக் எனப் பல புதியவர்கள் சேர ஆரம்பித்தனர்.


எங்கள் மூவருக்கும் பதவி உயர்வு கிடைத்து. சம்பளம் இருமடங்காக்கப்பட்டது. முக்கிய தொழிலாளிகளைக் காத்தல் (கீ பீபிள் ரிடென்ஸன்) எனப் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டு அதற்காக ஒரு பெருந்தொகை போனஸாகவும், முக்கிய பணிகளைக் கையாளுபவர் என அதற்கு தனி போனஸூம் அறிமுகப்படுத்தப்பட்டன.


கதையில படிக்கிற மாதிரி இருக்கில்ல,, ஆனால் அத்தனையும் நடந்தது. இதற்குப் பின் எங்க லெவலே மாறிப்போச்சு.


எல்லாம் சரி இத்தனை விஷயங்களுக்கும் காரணமான அந்தச் சூத்திரக்காரர் யார்?


பல நாட்கள் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அது?


தொடரும்


========================================================================================
ரொம்ப நாளாய் அந்த மர்மம் அவிழ்க்கப்படாமல் இருந்தது, பலச் சின்னச் சின்ன அரசியல்கள் இருந்தாலும் அதன் பின் அதிரடி நடவடிக்கைக்கு அதிகம் (கவனிக்க, அதிகம் தான்,ஆனால் அப்பப்ப தேவை இருந்தது) வேலை இல்லை.


எனக்கென்று ஒரு புதிய டீம். எனக்கென்று ஒரு புராஜக்ட் என பழனியாண்டவர் போல எனக்கென்று ஒரு உலகம் கிரியேட் ஆயிற்று. புராஜக்டுகளின் டெக்னிகல் வேலைகளை நான் கவனித்துக் கொள்ள நிலீமா புராஜக்ட் மேனேஜ்மெண்ட் வேலைகளை எனக்கு உதவியாக கவனித்துக் கொண்டார்.


ஒரு நாள் ஒரு நான் நிலீமாவிடம் டிஸ்கஸ் செய்யப் போகும்பொழுது
அவர் ஃபோனில் நீலகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தார்.


அதன் பிறகு கம்பெனியின் சில பழைய தலைகளிடம் விசாரித்ததில் நீலகண்டன் நிலீமாவின் பழைய மேனேஜர் எனத் தெரிய வந்தது.


சடாரென சிக்கலான ஒரு நூல்கண்டில் ஒரு நுனி கிடைத்து போலாயிற்று, ட்ரெய்னிங்கிற்கு வந்த நிலீமா, எங்கள் டீமின் பலத்தைப் பார்த்து மிரண்டிருக்கிறார். கொஞ்சம் குட்டையைக் குழப்பினால்தான் தனக்கென ஒரு இடம் பிடிக்க முடியும் எனத் திட்டம் போட்டு குட்டையைக் குழப்பி இருக்கிறார்.


அவரின் எண்ணம் நிறைவேறியும் இருக்கிறது, எங்களது மேலாளர் பலமிழந்தார். விளையாட்டில் ஜோக்கர்களாக இருந்த எங்களுக்கும் பலன்.
இல்லைன்னா ஜோக்கர்களாகவே ஆகி இருக்கவும் சான்ஸ் இருக்கு. ஏதோ எடுத்து வைத்திருந்த நல்லபெயரும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் அரசியல் நீரோட்டத்தில் எங்களை இழுத்துச் சென்று விட்டன. இல்லைன்னா எதாவது சுழலில் சிக்கி அமிழ்ந்திருக்க வேண்டியதுதான்.


அதான் சொன்னேன்


அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா!!!


========================================================================================


ஹி ஹி முடிஞ்சிட்டதுன்னு நினைச்சீங்களா?


அது பார்ட் 1.


பார்ட் 2 ஆரம்பிக்கலாமா?


அதுக்கு பின்னாடி எல்லோரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க என்பது கதைக்கு வேணும்னா சரிவரலாம். நிஜ வாழ்க்கையில் பிசிறுகள் எக்கச்சக்கமாவே இருக்கும் இல்லியா!


நிழல் யுத்தம் என்பது என் பழைய மேலாளருக்கும் எனக்கும் அமைதியா நடந்துகிட்டுதான் இருந்தது, ஆனால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. எதாவது பண்ணினா பழிவங்குகிறார்னு அவர் பேருதானே கெடும்.


அப்போ என் கைவசம் மட்டும் நாலு முக்கிய புராஜக்டுகள் இருந்தன. அதை முடிச்சிட்டு எங்கள் இயக்குனரோட கனவு புராஜக்ட் ஆரம்பிக்கிறதா பிளான். அதற்காக புதியவர்களை பயிற்சி கொடுத்துத் தயாராக்குவது என் கையில் இருந்தது. ராஜேஸ், மாதவி என இன்னும் சிலபேர்கள் சேர எங்கள் குழு கொஞ்சம் பெரியதாகவே இருந்தது.


சமந்தா மற்றும் ஜிம் ஆகியோர்கள் என் அறைத்தோழர்களாக மாறிவிட்டிருந்தனர். எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது.


அடுத்த ஆகஸ்ட் மாதம், சேலத்தில மாரியம்மன் பண்டிகை. நான் இரண்டு மாசத்துக்கு முன்னாலேயே விடுமுறை கேட்டு, பயணத்திற்கு முன் பதிவு செய்து தயாரா இருந்தேன்.


நாளை வெள்ளிக்கிழமை. இரவு ரெயிலில் கிளம்ப வேண்டும்.


பழைய மேலாளர் என்னிடம் வந்தார்.


செல்வன், அந்தக் கஸ்டமருக்கு நாளை மென்பொருள் கொடுக்க வேண்டும். இன்னிக்கு முடிச்சு குடுத்திடு.. நாளை வந்து அவங்களுக்கு இன்ஸ்டால் செய்ய உதவணும்.


எந்த பதிலும் எதிர்பார்க்காமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


எனக்கு நல்லாவே தெரியும். ஷெட்யூல் போட்டதே நான் தானே. இன்னும் ரெண்டு வாரம் பாக்கி இருக்கே.


நான்பாட்டுக்கு கிளம்பி போயிட்டேன்.


பண்டிகை முடிந்து அடுத்த வாரம் திரும்ப வந்தேன். பேருந்தில் ஒரே கசகசமுசன்னு பேச்சு. விலாஸ் தான் சொன்னான். என்ன லீவே கொடுக்காமப் சொல்லாம கொள்ளாம போயிட்டியாமே?


டேய் ரெண்டு மாசமா சொல்லிகிட்டு திரியரேன்,லீவு லெட்டர் கொடுத்துட்டுத் தானே டிக்கட்டே ரிசர்வ பண்ணினேன்! உனக்குத் தெரியாதா?


அதென்னவோ தெரியலை.. டைரக்டர் கிட்ட மேனேஜர் கப்ளெயிண்ட் பண்ணிகிட்டு இருந்தார். என்னவோ புராஜக்டை பாதியில விட்டுட்டுப் போயிட்டியாம். ஜாக்கிரதை.


சரி சரி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. நான் கவனிச்சுக்கிறேன்.


சொல்லிவிட்டேன். மண்டைக்குள் எத்தனையோ பாசிபிளிட்டிகள் வந்து போய்க்கொண்டு இருந்தன.


நான் அலுவலகம் சென்ற உடனேயே மேலாளர் அழைத்தார்


செல்வன், உன் புராஜக்ட் எல்லாம் விலாஸ் இனிமேல் பார்த்துக்குவான். இதுவரை என்ன செய்தியோ எல்லாத்தையும் டாக்குமெண்ட் பண்ணிக் கொடுத்திடு,


அதிரடியாகச் சொன்னார்.


நான் அதிர்ந்து .................


போகவில்லை புன்னகைத்தேன். சரிங்க என்று சொல்லி விட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்து ஃபோனை எடுத்தேன்...


தொடரும்.
========================================================================================


மேலாளரின் அறையில் இருந்து வந்தவுடன் தொலைபேசியது சங்கர் அவர்களுக்குத்தான்.


வணக்கம் சார் என ஆரம்பிச்ச உடனே என்னாச்சுப்பா உன் மேல இப்படி கம்ப்ளெயிண்ட் வருதே என்றார்.


அதான் சார் உங்களை நேரில பார்த்து பேசலாம்னு.. நான் அந்தேரி வரவா?


இல்லை இப்ப நான் அங்க வந்துகிட்டு இருக்கேன் பேசலாம் என்றார்.


இரண்டு மணி நேரம் கழித்து அவர் வந்தார்.


என்னாச்சு விளக்கமாச் சொல்லு எனக் கேட்டார்..


நான் அவருக்குக் கொடுத்த விடுமுறைக்கடிதத்தின் நகலை எடுத்துக் கொடுத்தேன். முதல்ல இதை விளக்கிடறேன். இரண்டு மாசம் முன்னாலேயே விடுமுறை கொடுத்தாச்சு.. ஆஃபீஸ்ல எல்லோருக்குமே தெரியும். உங்களுக்கும் தெரியும்...


அப்ப அந்த ரிலீஸ்?


ஒரு நிமிஷம்.. ஒரு ஃபோன் போட்டுக்கலாமா..?


கேட்டுக்கொண்டே டெல்லி மார்க்கெட்டிங் மானேஜர் எண்ணை ஒற்றினேன்.


அவர் தொலைபேசியில் வர, வணக்கம், செல்வன் பேசறேன், நம்ம இன்ஸ்டாலேசென் எப்ப ஷெட்யூல் பண்ணியிருக்கீங்க என சங்கர் கேட்கிறார், அவருக்கு விவரம் தர்ரீங்களா எனக் கேட்க..


அவர் திட்டம் இன்னும் ஒரு வாரம் பாக்கி இருப்பதை சொன்னார்.


அடுத்தது அந்த மென்பொருள் தயாரா என்பதுதானே.. இதைப் பாருங்கள் டெஸ்ட் ரிபோர்ட் என ஸ்வாதி நான் இல்லாத பொழுது டெஸ்ட் செய்து கொடுத்த ரிபோர்ட்டைக் காட்டினேன்..


அப்போ ஏன் இப்படி நடக்குது. எதுக்கு இந்த குற்றச்சாட்டு...


அது எதுக்கு வேணும்னாலும் இருக்கட்டும். இப்போதைய நிலை இதுதாங்க சார். இப்போ என் கையில் வேற எந்த ப்ராஜெக்டும் கிடையாது. டாக்குமெண்டேஷன் மட்டும்தான். உங்க கனவு புராஜக்டை உடனடியா ஆரம்பிக்கலாமே.. நான் புதியவர்களுக்கு சிஸ்டம் ஆர்க்கிடெக்சர் பற்றிப் பாடம் எடுக்கிறேன்.


இதுவும் சரிதான் நீ ஆரம்பி மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்.


தெளிவாக வெளியே வந்தேன்.


அடுத்த நாள் ட்ரெய்னிங் ஆரம்பித்தேன்.. முழு நாள் ட்ரெய்னிங்தான். தப்பிக்க வழி கிடைச்சாச்சே...


பாவம் மக்கள்தான். சடாரென ட்ரெய்னிங் ஆரம்பித்த உடன் முதல்நாள் திணறித்தான் போனார்கள். பலரால் ஹி ஹி தூக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியலை.


அடுத்த நாள் காலை மேலாளர் என்னை மீண்டும் என்னை அழைத்தார்.


செல்வன், விலாஸினாலோ அல்லது ஸ்ரீநாத்தாலோ முடிக்க முடியாது. அதனால் எல்லாப் புராஜக்டையும் நீயேதான் செய்ய வேண்டும்.


சட்டமாக மறுத்தேன். முடியாது. நான் அடுத்த புராஜக்டிற்கு வாக்கு கொடுத்தாயிற்று..


கனத்த அமைதி சிறிது நேரம். நான் எழுந்து வெளியே வந்து விட்டேன்.


தொடரும்
========================================================================================


மறுநாள் மீண்டும் மீட்டிங்.. நான்கு புராஜக்டுகளும் மிக முக்கியமானவை என்பது தெரிந்த ஒன்றுதான். எனவே என்னிடம் திரும்பவும் வந்துதான் ஆகவேண்டும் என்பதும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்தமுறை ஒரு கட்  அண்ட் ரைட்டான (ஹி ஹி.. இந்த வார்த்தை இப்பல்லாம் உபயோகப்படுவதே இல்லை. சரிதானே) முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆசை.


மீட்டிங்கில், இந்த இந்த புராஜக்ட் எப்போது டெலிவரி என முடிவு செய்யப்பட்டு, இந்த நான்கு புராஜக்டைத் தவிர மேலாளருக்கு வேறு புராஜக்டுகள் செய்வதில்லை என முடிவு செய்யப்பட, திட்டப்படி 1994 மார்ச் மாதம் நான் முழுக்க முழுக்க சுதந்திரப் பறவை என முடிவு செய்யப்பட்டது.


எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சரியான எதிர்கொள்வதால் பிரச்சனையை நல் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம் அல்லவா..


இதோடு இவரோடானா அரசியல் முடிந்ததா?
இல்லையே! அவ்வளவு சீக்கிரத்தில் முடியுமா? இன்னும் இருக்கிறது,..


அதையும் செல்கிறேன்.


அந்த தாய் கம்பெனிக்கான மென்பொருள் தயாராகி விட்டது. மிக முக்கியமான புராஜக்ட். இந்த வார இறுதியில் 20 இடங்களில் மென்பொருளை நிறுவி மிகப்பெரிய தொலைபேசி இணைப்பக நெட்வொர்க்கை நிறுவ வேண்டும்.


டெஸ்டிங்கின் போது மென்பொருள் ஒரு இடத்தில் தொங்கிப் போவதை ஸ்வாதியும் முகேஸூம் கண்டுபிடித்தனர். அன்றைய ரிபோர்ட்டில் அதை அவர்கள் கொடுக்க.. பார்த்த உடனேயே என்ன பிரச்சனை என்று புரிந்து விட்டது. உடனே எங்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு மாற்றம் செய்து பிரச்சனையைச் சரி செய்தேன்.


ஸ்வாதியிடம் மாற்றப்பட்ட மென்பொருளைக் கொடுத்தேன். ஆனால் அதற்கொரு பிரச்சனை.


மேலாளர் ஸ்வாதியிடம் சொல்லி விட்டார். பழைய டெஸ்டிங் சுற்றை முடித்து, முழு ரிபோர்ட் செய்த பிறகு, புதிய சுற்றில் அனைத்து பிழைகளையும் சரிசெய்து அதன் பிறகு தான் ரிலீஸ் செய்வேன் என்று சொன்னார்.


நேராக பார்த்தால் அவர் சொன்னது சரியா தெரியும் ஆனால் சந்தர்ப்பங்களையும் பார்க்கணுமே!..


90 சதவிகிதத்திற்கு மேல் டெஸ்டிங் முடிந்து இது வரை குற்றமே கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் பாக்கி இருக்கும் டெஸ்ட்களும் ரிக்ரெஸ்ஸன் எனப்படும் தீவிர டெஸ்டிங் தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு மென்பொருள் நின்றுவிடுகிறது என்னும் பொழுது அதற்கு மேல் அதே மென்பொருளை டெஸ்ட் செய்து பிரயோசனமே இல்லை. அது நாட்களை மட்டுமே விழுங்கக் கூடிய ஒன்று.


20 இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு மென்பொருள் நிறுவ எல்லாம் தயார் செய்தாகி விட்டது.


என்னிடம் பணிசெய்தவர்களைக் கொண்டு அனைத்து டெஸ்டுகளையும் செய்து முடித்து அறிக்கையை ஸ்வாதி மூலமாக கையொப்பத்திற்கு வைத்தேன். நாளை மென்பொருள் நிறுவ வேண்டும்..


பழைய டெஸ்டிங்கை ஏன் பாதியில் நிறுத்தினீர்கள். இது கேள்வி..


அதற்கு மேல் டெஸ்ட் செய்வதில் அர்த்தமே இல்லை. முக்கிய விஷயங்கள் எல்லாம் முடிந்து விட்டன. புது மென்பொருள் எல்லாவகையிலும் டெஸ்ட் செய்தாகி விட்டது - இது நான்..


இல்லை, எனக்குத் திருப்தியில்லை, இதில் நான் கையொப்பமிட மாட்டேன், முறைப்படி எல்லாவற்றையும் செய்யுங்கள்..


சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.


நான் மென்பொருளை, நாற்பது பிரதிகள் தயார் செய்யச் சொல்லி விட்டு ஆறு மணிக்கு வர இருக்கும் டைரக்டருக்காக காத்திருந்தேன்.


டைரக்டர் வந்தார். என்ன எல்லாம் தயாரா எனக் கேட்க பிரச்சனையைச் சொன்னேன். என்ன பிரச்சனையை எதிர்கொண்டோம், என்ன மாறுதல்.. என புதிய மென்பொருளின் ஸ்திரத்தன்மையை விளக்க.. சரி எனச் சொல்லி இரண்டு நிமிடத்தில் அவரால் கையொப்பமிட்டு தயாரானது..


20 இடங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் 2 சர்வீஸ் எஞ்ஜினியர்கள். ஒருவர் எங்கள் அலுவலகம், ஒருவர் வாடிக்கை கம்பெனையைச் சேர்ந்தவர்..


ஒவ்வொரு இணைப்பகத்திற்குமான கான்ஃபிகரேஷன் மற்றும் மென்பொருள் நிறுவுவதில் படிகள்.. கான்ஃபிகரேஷன் முடிந்ததும் செய்ய வேண்டிய சரிபார்த்தல்கள்.. இணைப்பகம் செயலுக்கு வந்த உடனே செய்ய வேண்டிய பரிசோதனைகள் என ஒவ்வொருவருக்கும் பட்டியல் தரப்பட்டது.


அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் அனைத்து இடங்களிலும் மென்பொருள் நிறுவப்பட்ட பின்னர்தான் மேலாளருக்கு விஷயமே தெரிய வந்தது..


இனி என்ன செய்ய வேண்டும்.. எதாவது குறை சொல்லப்பட்டால் இவனை நெருக்கி விட வேண்டியதுதான்..


ஆவலாக காத்திருந்தார்.


தொடரும்


========================================================================================


பாவம் மேலாளருக்கு அதற்குரிய வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது. என்னுடைய புராஜக்டுகளெல்லாம் வேக வேகமாக முடிவிற்கு வந்து கொண்டிருந்தன. ரெயில்வே, போலீஸ், அமைச்சகம் போன்ற இடங்களுக்காக விதவிதமான வசதிகள் கொண்டு மெருகேற்றப்பட்ட மென் பொருட்கள்.. எல்லாம் முடியும் நேரம்...


அப்போதுதான் எங்கள் அலுவலகத்திற்கு முதன் முறையாக வெளிநாட்டு புராஜக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.


கொஞ்சம் கோக்குமாக்கான புராஜக்ட் தான். விலாஸ் தலைமையேற்க வேண்டும். அவர்கள் கேட்ட நேரத்தில் முடியாது என சொல்லிவிட்டார்கள். காரணம் இருக்கிறது. இரண்டு ஹார்டுவேர் செய்யவேண்டும், மூன்றுவித மென்பொருள்.. கஷ்டம்தான்.


ஆனால் கௌரவப் பிரச்சனையாயிற்றே. செல்வன் ஒரு பாதியை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் நான் செய்கிறேன் என்று சொல்லி விட்டான். சரி என நானும் ஒத்துக் கொண்டேன்.


என்னுடைய பகுதியை 5 மாதங்களில் முடித்து விட்டேன், விலாஸின் பகுதி இன்னும் நடந்து கொண்டிருந்தது. இருந்தாலும் ஒரு புதிய எஞ்சினியருக்கு அவனுடைய மென்பொருளுக்கு உதவிக் கொண்டு இருந்தேன்,


அடுத்த மாதம் டெலிவரி.. முழுவீச்சில் டெஸ்டிங் நடந்து கொண்டிருந்தது, அப்பொழுது அந்த புதுப் பொறியாளன் செய்த மென்பொருளில் ஒரு பிழை கண்டுபிடிக்கப்பட்டது. காலையில்.


என்ன பிழை என்பதை உடனுக்குடன் அறிந்து கொண்டு விட்டேன். அவனைச் சரி செய்யச் சொல்லி விட்டு என் வேலையை நான் பார்த்துக் கொண்டு இருந்தேன்.


நாலு மணிக்கு வினய் (மேலாளரின் காரியதரிசி) கையில் ஒரு கடிதத்துடன் வந்தான். இதை அவர் கொடுக்கச் சொன்னார், அவன் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்ததுமே விஷயம் புரிந்து விட்டது.


கடிதம் பார்த்தேன். அது ஒரு மெமோ. நீ ஒப்புக் கொண்டபடி உன் பணிகளை முடிக்கவில்லை. உன்னால் புராஜக்ட் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தப் புராஜக்டை முடிக்காமல் வீட்டிற்குச் செல்லக் கூடாது என மெமோ.


எனக்குக் கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.


இரண்டு நிமிஷம்தான் யோசித்தேன், உடனடியாக நான் ஒரு மெமோவைத் தட்டச்சத் தொடங்கினேன்.
என்னுடைய பணி இந்தப் புராஜக்டில் ஜனவரி மாதமே முடிக்கப் பட்டு விட்டது. இதுவரை நடந்த பரீட்சைகளில் என் பகுதி மீது இதுவரை ஒரு தவறும் கண்டு பிடிக்கப்படவில்லை. இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்ட தவறுக்கும் எனது பகுதிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
ஆகவே சரியாக விவரம் அறியாமல் இது போன்ற மெமோக்களை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.


புராஜக்ட் விவரம், அதில் என்னுடைய பணி, புராஜக்டின் இன்றைய நிலை. அதில் உள்ள பிரச்சனை, அதற்கான காரணம் அதி எப்படித் தீர்ப்பது என்பதையெல்லாம் ஒரு தனி கோப்பாக மாற்றினேன்.


எல்லாவற்றையும் மூன்று பிரிண்டுகள் எடுத்தேன்.


இதைக் கையெழுத்திட்டு ஒரு பிரதியை நான் வைத்துக்கொண்டேன். ஒரு நகல் சங்கரின் மேசை மேல் வைத்தேன்.. அசலை அதே வினய்யை அழைத்து நான் வெளியே சென்ற பிறகு மேலாளருக்கு கொடுத்துவிடும்படிச் சொல்லிவிட்டு 4:30 பேருந்தில் வீட்டிற்குக் கிளம்பினேன்.


தொடரும்.


========================================================================================


மறுநாள் காலையில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. மாலை தான் சங்கர் வந்தார். மெமோ விவரம் ஒன்றும் பெரிதாக வெடிக்கவில்லை, சிறுபிள்ளைத்தனமானது என்றாலும் அந்த மெமோ எனக்குப் பூரணவிடுதலையைப் பெற்றுத் தந்தது.


கனவு புராஜக்ட் ஆரம்பிக்கப்பட்டது, இன்னும் நினைவிருக்கிறது அந்த நாட்கள்..


கொஞ்சம் அரசியலில் இருந்து செண்டிமெண்டுக்குப் போவோமா!


அது 1994 மார்ச் மாதம்.. புது மும்பையின் சாபக்கேடான மலேரிய ஜூரம் என்னை கடந்த இரண்டு வருடங்களாகவே வருடம் தவறாமல் வந்து பார்த்து விட்டுப் போகும். இம்முறையும் வந்தது..


அன்று வெள்ளிக்கிழமை. சமந்தா அலுவலகம் சென்றுவிட்டான். ஜிம் முடிவெட்டிக்கொண்டு வருகிறேன் என்றுச் சொல்லிவிட்டு போய்விட்டான். மாலை நாலுமணி இருக்கும்..


எனக்குக் காய்ச்சல் கொதிக்க ஆரம்பித்தது..


உடனே வழக்கமாக போகும் மருத்துவரிடம் போனேன்..


வரிசையில் உட்கார்ந்திருக்கும் போதே தலை சுற்றியது..


நான் உட்காரமுடியாமல் தவிப்பதைக் கண்டு டக்டர் ஓடிவர..


அலுவலக ஃபோன் நம்பர், ஸ்ரீநாத்துடைய அட்ரஸ் இரண்டையும் கொடுத்து விட்டு என்ன லக்ஷத்தீப் மருத்துவ்மனையில் சேர்க்கச் சொன்னது வரை நினைவிருக்கிறது,....
கண் விழித்தபோது ஸ்ரீநாத் அவன் அறைத்தோழர்கள், ஜிம் சமந்தா எனப் பெரிய படையே என் படுக்கையைச் சுற்றி பதட்டமாகக் கூடி இருந்தது..


நான் எங்கே இருக்கேன் என வழக்கமாகச் சொல்லும் டயலாக்குடன் விழித்தேன்,,,


நான் கண்விழித்த போது மணி 8:00. நான்கு மணி நேரம் மயக்கமாகக் கிடந்திருக்கிறேன்.


அதிகம் அலைந்தது பாவம் ஜிம்தான்..


பாவம் முடிவெட்டிக் கொள்ளப் போனவன் சாவி எடுத்துக் கொண்டு போகவில்லை. திரும்பி வந்துப் பார்க்க கதவு பூட்டி இருக்கிறது. நான் உள்ளே இருக்கிறேனா வெளியே இருக்கிறேனா? தெரியாமல் பலமுறை பலமாய்க் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, சாலைக்கு வந்து சமந்தாவுக்கு அலுவலகத்திற்கு ஃபோன் செய்ய சமந்தா அவசரமாய் கிளம்பிப் போய் விட்டதாகத் தகவல்..


கையில் காசும் இல்லை. முடி வேறு வெட்டி குளிக்க வேண்டும்.. என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்ரீநாத் வீட்டிற்குப் போனால் அங்கும் பூட்டு தொங்கிக் கொண்டிருக்க என்ன செய்வதென்றுப் புரியாமல் மறுபடியும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டிப் பார்த்துவீடுச் சோர்ந்து போய் படிக்கட்டுகளில் உட்கார்ந்து விட்டான். நல்லவேளையாகச் சமந்தா என்னுடைய துணிகளை எடுக்க வரும்போது தான் அவனுக்கு விஷயமே தெரியும்..


நான்கு நாட்கள் "Working from Hospital" தொலைபேசியின் மூலமாகவே வேலை செய்தேன். யார் யார் என்னென்ன செய்யவேண்டும்.. இன்று எந்தக்காரியம் ஆரம்பித்திருக்க வேண்டும்.. எது முடிந்திருக்க வேண்டும்.. எனத் தெளிவாகத் தெரிந்திருப்பது எவ்வளவு வசதி தெரியுமா?


நான்கு நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட ஏப்ரல் முதல் தேதி எங்கள் புராஜக்டில் முழுமூச்சாய் இறங்கினேன்...


இதைச் சொல்ல காரணம் இருக்கிறது.. இந்த ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததில்லை. வெள்ளிக் கிழமை விடுமுறை தினம் கூட அந்தேரி தலைமையகம் சென்று மார்க்கெட்டிங், ப்ரொக்கியூர்மெண்ட் என மற்ற டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை, வெளியிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பிசிபி வேலை எனப் பலவிஷயங்களைக் கவனித்துக் கொண்டு இருந்தேன். 4 பிசிபிக்கள், ஆறு வகையான சாஃப்ட்வேர்கள் கொண்ட மிகப் பெரிய புராஜக்ட் அது.


இதைப் போன்ற ஒரு புராஜக்டை முடிக்க சி டாட் நிறுவனம் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொண்டதாம். உடன் பணிபுரிந்தவர்களின் ஆர்வத்தாலும் சிஸ்டம் ஆர்க்கிடெக்சரில் அத்தனை அக்சரங்களும் அத்துப்படி என்பாலும் டிசம்பரில் எங்கள் சிஸ்டம் டெஸ்டிங் நடந்து கொண்டிருந்தது.


ஃபிப்ரவரி மாதம் டெலிகாம் எவேல்யுவேஷன் செண்டர் - இச் சேர்ந்தவர்கள் சிஸ்டத்தை பரிசோதனை செய்து சான்றிதழ் செய்ய திட்டமிடப் பட்டிருந்தது.


அந்த நேரத்தில் தான் நிலீமாவுடன் எனது முதல் மனமுறிவு தந்த சம்பவம் நடந்தது.


தொடரும்


========================================================================================


ஸ்ரீநாத் டி.இ.சி டெஸ்டுகளைச் செய்ய உதவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் அவனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருந்தார்கள். அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டிருந்தது,


நான் சமந்த ஜிம் ஆகியவர்களிடமிருந்து ஸ்ரீநாத் அறைக்கு மாறிவிட்டிருந்தேன். (ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க. நான் சமைக்க ஆரம்பிச்சது இந்த காலத்திலதான். )


நிச்சயதார்த்த நாள் நாளை. இரவு பேருந்துக்கு ஸ்ரீநாத் முன்பதிவு செய்திருந்தான். அவனுக்குப் பரிசு வாங்க நான் 4:30 மணிக்கே கிளம்பி வந்துவிட்டேன்.


இரவு 7 மணி ஆயிற்று.. 8 மணி ஆயிற்று.. 10 மணிக்குப் பேருந்து. ஸ்ரீநாத் வந்த பாடில்லை. நானும் இன்னொரு நண்பரும் கிளம்பி அலுவலகம் போனோம் என்ன ஆயிற்று எனப் பார்க்க..


அங்கே போனால் அவன் இன்னும் டெஸ்டிங் செய்து கொண்டிருந்தான். என்னடா என்று கேட்டால் இந்த டெஸ்டை மட்டும் முடித்துவிட்டுப் போ என்று சொன்னாள் என்று சொல்ல..


அதை பாதியிலே நிறுத்தி விட்டு .. அவனை இழுத்து வந்து பேருந்தேற்றி அனுப்பினோம்.


அடுத்த நாள் காலை நிலீமாவைச் சந்தித்துப் பேசினேன்.


ஏன் ஸ்ரீநாத்தை இருக்க வைத்தீர்கள் என ஆரம்பித்தேன்.


டெட்லைன் பக்கம் வந்தாச்சே.. என்ன செய்வது.. கொஞ்சம் அதிகம் முயற்சி செய்தால்தானே முடிக்க முடியும் என்றார்.


இல்லை நிலீமா புரிஞ்சுக்குங்க..அவன் 4 மணி நேரம் குறைச்சு வேலை செஞ்சா ஒண்ணும் தப்பாயிடாது.. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நேரத்தை அனுபவிக்க விடணும். நம்ம டீமில ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் எல்லோரும் வேலை செய்யறாங்க. அப்படி இருக்க நீங்க இப்படிச் செய்தது தவறு என்றேன்.


இப்ப என்ன ஆயிடுச்சி அவன் பேருந்தை தவறவிட்டுட்டானா என்று கேட்க..


அந்த அளவிற்கு நான் என்றும் விட மாட்டேன். ஆனால் நீங்கள் ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும்.


உங்களுடைய பங்கு இந்தப் புராஜக்டில என்ன என்று யோசிச்சுப் பாருங்க.. நான் கேட்டதை வாங்கித் தரவேண்டியது.. மற்றபடி ரிபோர்ட் தயார் பண்ணிக் குடுக்கறது. இவ்வளவுதானே. இப்படி இருக்க எதை காட்டிக் கொள்ள முயற்சி பண்ணறீங்க? இந்தப் புராஜக்ட் உங்களாலதான் வேகமா முடிஞ்சது என காட்டிக் கொள்ள முயற்சி செய்யறீங்களா?


ஒண்ணு ஞாபகம் வச்சுக்குங்க நிலிமா.. மனசு வச்சு வேலை செஞ்சா நம்ம மக்கள் எவ்வளவு பெரிய வேலைன்னாலும் செய்வாங்க ஆனால் நம்முடைய ஆதிக்கத்தை அவங்க மேல காட்ட ஆரம்பிச்சா அவங்களுக்கு வேலை செய்ய இருக்கும் இஷ்டமே போயிரும்.


இல்லை உங்களின் இந்த மாதிரி நடவடிக்கைகளினால்தான் இந்தப் புராஜக்டை முடிக்க முடியும் என நம்புவதாய் இருந்தால் நீங்களே செஞ்சுக்குங்க. என்னை எதுவும் கேட்காதீங்க..


நிலீமாவை என்னுடைய அதிரடி பாதித்திருக்க வேண்டும். ஆனால் சொன்னவை எல்லாமே உண்மைதானே.. அமைதியாகி விட்டார்.


சூத்திரக்கயிறு இன்னும் என் கையில் தான் இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்..


இதற்கடுத்து பிப்ரவரி மூன்றாம் வாரம் இன்னொரு நெருக்கடி வந்தது.. ஆனால் அது .. . ரொம்ப நல்ல விஷயம்தான்.


தொடரும்


========================================================================================
பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரே ஒரு விஷயம் தவிர எல்லா வசதிகளும் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு விட்டன்.


செய்யாமல் விட்ட ஒரே விஷயம், இரட்டை முக்கிய கட்டுப்பாடு போர்டுகளில் செயலி மற்றும் உபரி கட்டுப்பாடு செயலிகள் முதலி செயல் இழந்தால் உபரி முதலியாக மாறுவது.


இடையில் ஜிம் தன்னுடைய தகப்பனார்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவன் இதுவரை தான் செய்தவற்றை மகரந்திற்கு கொடுத்து முடிந்தால் செய்து தரச் சொல்லி இருந்தான். ஆனால் அந்த வசதி வேண்டாம் என்று முடிவு செய்ததால் கவலையின்றி டி.இ.சி டெஸ்டிங் ஆரம்பிக்கப் பாட்டு விட்டது. தினம் காலையிலிருந்து மாலை 6 மணி வரை அவர்களின் டெஸ்ட்டும், அதன் பிறகு அவர்கள் கேட்கும் இரவு நேரத்திற்கான கட்டுறுதி டெஸ்டுகளும் நடக்கத் தொடங்கின. தினம் இரவு 11 மணி வரை வேலை. மற்றபடி காலை 9:00 மணிக்குள் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்.


இப்படி இருந்த பொழுது எல்லா டெஸ்டுகளும் தேறிவிட்ட நிலையில்
முதலி - உபரி மாற்றங்கள் மிக முக்கியம் அது இல்லாவிட்டல் இவ்வளவு பெரிய சிஸ்டத்திற்குச் சான்றிதழ் அளிக்க முடியாது. நாளை காலை அது தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அனைவருக்கும் திகில். எப்படிச் செய்வது என்று.


மாலை 6:00 மணிக்கு நானும் மகரந்தும் அமர்ந்தோம்.


சிஸ்டத்தின் சகல பகுதிகளும் அத்துப்படி என்பதால், நிரலியின் வரைபடத்தை (ஃப்ளோ சார்ட்) மகரந்திற்கு அமைத்துக் கொடுத்து அதைக் கொண்டு முதலில் ஒரு கட்டமைப்பை ஆரம்பித்தோம்.


அதன் பிறகு ஸ்விட்ச் ஓவர் செயலிகளை மட்டும் ஒரு மணி நேரத்தில் முடித்து தாமஸ் சமந்தா ஆகியோரை டெஸ்ட் செய்யச் சொன்னோம்.


அதன் பிறகு இனிஷுயலைசேஷன், டேடா சிங்கரனைசேஷன் நிரலிகளை நான் சொல்லிக் கொண்டே வர மகரந்த் எழுதிக் கொண்டே வர 11:00 மணிக்கு அவையும் தயார்.


இதையும் சேர்த்து சிஸ்டம் டெஸ்டிங் செய்து விட்டு ஒருங்கிணைந்த மென்பொருளை மற்படி டெஸ்ட் செய்து முழுதாய் முடித்த போது மணி நான்கு. சங்கர், நிலீமா, மற்றும் டெஸ்டிங் பொறியாளர்கள் அனைவருமே இருந்து ஊக்கம் கொடுக்க, மறுநாள்(இன்றைய?) வேலிடேசனுக்கு சிஸ்டத்தை தயார் செய்து விட்டு சென்றோம்.


மறுநாள் அனைத்துச் சோதனைகளும் வெற்றிகரமாய் செய்யப்பட்டு நிறைவடைந்தன. அன்று இரவு வாசியில் இதில் சம்பந்தப் பட்ட அனைவருக்கும் ஷாம்பெய்ன் பார்ட்டிதான்..


அடுத்த வாரம் தான் ஜிம் திரும்பி வந்தான். ஒரு துக்கச் செய்தியோடு.


தொடரும்


========================================================================================


ஜிம்மின் தந்தை தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜிம்மின் தந்தை ஒரு வடகிழக்கு மாநிலத்து நிதிஅமைச்சகச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேர்மையாய் வாழ்ந்து இரண்டு மகன்களை மட்டுமே செல்வங்களாய்ச் சேர்த்து வைத்திருப்பவர்.


அவருக்கு புகையிலைப் பழக்கங்களோ அல்லது மற்ற கெடுதல் தரும் பழக்கங்களோ இல்லை என்றாலும் தொண்டைப் புற்று நோய் வந்து விட்டிருந்தது.


சரி மும்பைக்கு அழைத்து வந்து எங்களின் தாய் அலுவலகம் நடத்தி வரும் மருத்துவமனை வழியாக சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்தோம்.


அந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு நான், சமந்தா, ஜிம் ஸ்ரீநாத் ஆகியோர் விவரங்கள் சேகரிக்கச் சென்றோம். சிகிச்சை பற்றிய விவரங்கள் சேகரித்த பிறகு மருத்துவக் கட்டணங்கள் பற்றி விசாரித்தோம்.


குறிப்பிட்ட வருமானத்திற்குக் குறைவான வருமானம் பெறுபவருக்கு இலவசச் சிகிச்சையும், மற்றவர்களுக்கு மிக அதிகமானக் கட்டணங்களும் வாங்குவது தெரிந்தது.


சங்கர் மூலமாக மேலிடத்திற்கு தகவல் அனுபினோம், இது மாதிரி ஒரு குடும்பச் சூழ்நிலை. இந்த தொழிலாளருக்கு உதவிட வேண்டுமென.


முதலில் மௌனம் தான் பதில். அதன் பிறகு மீண்டும் சற்று நெருக்க ஆரம்பித்தோம்.


நிலையைப் பாருங்கள்.. வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருந்து விட்டதால் இலவசச் சிகிச்சை இல்லை, வரும் வருமானமோ சிகிச்சைக்குப் போதாது.


அலுவலகத்தில் இருந்து சாதகமான பதில் இல்லை. கடைசியகத் தரப்பட்ட பதில் இப்படிப்பட்ட சலுகை தர இயலாததற்கு வருந்துகிறோம்.


ஆக ஜிம்மிற்கு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். தாய் வீடாய் தெரிந்த அலுவலகம் சடாரென அன்னியமாகிப் போனது..


சங்கரிடம் சென்றேன்..


எனக்கு இந்த அலுவலகத்தில் உழைக்கும் ஆர்வமே போய்விட்டது. இன்றிலிருந்து நான் ஒரு வேலையும் செய்யப் போவதில்லை. உங்களால் முடிந்தால் என்னை வேலையை விட்டு நீக்கிவிடுங்கள். அல்லது நான் இப்பொழுதே இன்னொரு வேலையைத் தேட ஆரம்பிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டேன்.


சமாதானத் தூதுகள், இரட்டைப் பதவி உயர்வு ஆசைகள் என பலப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நானோ இன்னொரு கம்பெனியின் நேர்முகத் தேர்விற்குச் சென்று மாற்று வேலையும் பெற்று விட்டேன்.


ஜூன் 26 ஆம் தேதி 1995, என்னுடைய ராஜினாமா சமர்ப்பிக்கப் பட்டது. ஜிம் அதற்கு இரண்டு நாள் முன்னதாக தன்னுடைய ராஜினாமாவை சமர்ப்பித்து இருந்தான். அவனுக்கு அதிக சம்பளத்தில் பெங்களுரில் வேலை கிடைத்திருந்தது..


தொடரும்
========================================================================================


சென்ற முறைபோல் இந்த முறை என் ராஜினாமா மிகப் பெரிய அலையைத் தோற்றுவிக்கவில்லை. சென்ற முறை இருந்ததே ஆறேழு பேர். இன்றைய ஜனத்தொகை 41. ஓரிரண்டு பேர் போனாலென்ன சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.


எனவே வெறும் பேரம் மட்டுமே நடக்க, நான் கல்போல் உறுதியாய் இருந்தேன்.


ஒரு மாத கால நோடீஸ் பீரியட்.. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருவர் என மெதுவாய் ராஜினாமாக் கலாச்சாரம் ஆரம்பித்தது..


சமந்தா, மகரந்த், தாமஸ், மௌ, மாதவி, அர்ஜூலி என மெல்ல மெல்ல ஒவ்வொருவாராய் வேலை தேடத் தொடங்கினர்.


ஜீலை 26, என்னுடைய கடைசி நாள் வர அனைவரிடமும் பிரியா விடை பெற்று டெல்லிக்குக் கிளம்பினேன், புதிய கம்பெனியில் சேரவேண்டுமே.


கல்லூரிப் பிரிவிற்கு அடுத்த மிகப் பெரிய உணர்ச்சிப் பெருக்கு இந்தப் பிரிவுதான்.


அதன் பிறகு ...


ஏறக்குறைய ஒரு ஆண்டு கழிந்த பொழுது


டெலிகாம் ஆர் அண்ட் டி என்ற குரூப் அந்தக் கம்பெனியில் மூடப்பட்டு..


மிச்சமிருந்தவர்கள் மற்ற டிபார்ட்மெண்டுகளுக்கு அனுப்பப்படவேண்டி..


வேறு சில டிபார்ட்மெண்டுகளில் ட்ரெய்னிங் ஆரம்பமானது..


முற்றும்


========================================================================================
.

2 comments:

 1. சாலைஜெயராமன் :


  திரைப்படங்களில் வேண்டுமானால் பல விதப் போராட்டங்களுக்குப் பிறகு அனைத்துமே சுமுகமான முறையில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்றிணைந்து உலகத்தில் ஏதோ அவர்கள் சாஸ்வதமாக இருக்கப்போவதைப் போல் காட்டுவார்கள். இந்தப் பீடிகையோடுதான் திரு தாமரைத் இத் திரியைத் தொடங்கியுள்ளார். உண்மையின் முகம் வேறு என்பதை தனது அழகான படைக்கும் திறனாற்றலால் வெளியிட்டதற்கு முதலில் பாராட்டுக்கள்


  ஆனால் எதார்த்தம் என்பது போராட்டங்கள்தான். வெற்றி அவ்வளவு எளிதாக யாருக்கும் கிட்டுவதில்லை. வெற்றி என்பது எது என்பதி்லும் மாறுபட்ட கருத்துக்கள், மனதளவில் எடுத்துக் கொள்ளும் பாங்கு போன்றவற்றின் கனத் தன்மையைப் பொறுத்துதான் என்பதை திரு தாமரை மிக அழகான முறையில் ஒரு திரைக்கதைக்கு உண்டான விருவிருப்போடு தந்துள்ளார்.


  ஒரு காலகட்டத்தில் முக்கியமாகக் கருதப்பட்டவர்கள் தேய்பிறைபோல மறக்கப்படுதலும், முக்கியத்துவம் குறைவதும் காலத்தின் கட்டாயம். தேவையின் நிமித்தம் ஒன்றைப் பெறுவதற்காக எதையும் இழக்கவும், ஒழிக்கவும் தயாராக இருப்பதுதான் மனிதமனம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.


  எதிர்பார்ப்புக்கள் எப்போதும் ஏமாற்றத்தைத் தரும். கீதை சொன்னதைப்போல் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. சொல்வது கேட்பது எளிது. பழகுவது ....... அப்பப்பா பெரும்பாடுதான். இதில் மனதை வெற்றி கொள்வதுதான் உண்மையான வெற்றி. வெற்றி என்பது பலன் கருதாது பணி ஆற்றும் பக்குவத்தை அடைவதில்தான் இருக்கிறது என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டுக்களோடு தந்த பாங்கு மிக சிறப்புக்குரியது.


  திரு தாமரையின் பன்முக சாதனையில் இவ்வுண்மைத் தொடருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.

  ReplyDelete
 2. வெற்றி என்பது என்ன என்பதை நிர்ணயிப்பதில் பலர் தோற்றே போகிறார்கள். இதுதான் வெற்றி என்று நின்றுவிடுவதால் பலர் தோற்றுப் போகிறார்கள் அல்லவா?


  ஆனால் காலம் இது போல் நிற்பதே இல்லை. தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது. நேற்றைய வெற்றிகள் இன்றைய வெற்றிகள் ஆவதில்லை. வெற்றிகளும் தோல்விகளும் வித்தியாசமிழந்து போய் அனுபவங்களாய் படிந்து விடுகின்றன.


  தோல்விகளிடமிருந்து விலகி ஓடுவதாலோ, வெற்றியை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதினாலோ ஒரு உபயோகமும் இல்லை. ஒருவகையில் பார்க்கப் போனால் இதுதான் அரசியலின் அடிப்படை. ஒரே ஒரு இடம் வென்றவர்கள் 200 சீட்டுக்கள் கைப்பற்றி ஆட்சி அமைப்பதுபோல் காட்சிகள் மாறிக்கொண்டேதான் இருக்கும்.


  ஆனால் ஒவ்வொரு கடப்பையும் பலர் நெஞ்சில் நிற்குமாறு மாற்றுவதே பயணத்தின் வெற்றி..

  ReplyDelete