Wednesday, December 2, 2009

அலைகள் !!!

அலைகள் சற்று இரைச்சலாக பேசிக்கொண்டிருந்தன. நாலு வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரிகளே வாய் மூடாமல் ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஊரே அவர்கள் முன் ஆயிரம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யும் அவைகளுக்குப் பேசவா விஷயங்கள் இல்லாமல் போய் விடப் போகின்றன..

வத்சலா தலையைக் குனிந்தவாறு உட்காந்திருந்தாள். அவளுக்கு அருகே சற்றுத் தள்ளி வின்சென்ட் அமர்ந்திருந்தான்.

இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் திரையாய் இருந்தது.

வத்சலாதான் மௌனத்தைக் கலைத்தாள்.

வின்சென்ட், நீங்கள் மிகவும் நல்லவர். பொறுமையும் அன்பும் நிறைந்தவர். எந்த ஒரு பெண்ணுமே உங்களைப் போன்ற ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அப்புறம் என்ன வத்சலா, என் காதலை ஏற்றுக் கொள்ள உனக்கு என்ன தயக்கம்?

புரிஞ்சுக்கோங்க வின்சென்ட், எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னுடைய இந்த சுயநலத்திற்கு அவளோட வாழ்க்கை பலியாயிடக் கூடாது. உங்கள் நல்ல மனதிற்கு உங்களை புரிந்து கொண்டு வாழும் ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்...

உனக்காக நான் எத்தனை வருடம் வேண்டுமானால் காத்திருக்கத் தயார்.. உன் தங்கையின் கல்யாணம் முடிந்த பின்னால் வேண்டுமானால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், வின்சென்ட் சொல்லிக் கொண்டே போக..

வேணாம் வின்சென்ட், இதை மறந்திடுங்க
சொல்லிவிட்டு வத்சலா எழுந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

-------------------------x-----------------------------x---------------------x---------------

கொஞ்ச தூரத்திற்கு அப்பால் ஒரு படகு மறைவு..

வாத்சல்யா, கொஞ்சம் யோசி.. என் குடும்பச் சூழ்நிலை அப்படி...
என்ன விஜய் புரிஞ்சுதான் பேசறீங்களா? இப்படி அவசரப்பட்டா எப்படி?

என்ன செய்வது வாத்ஸ், அம்மாவின் உடம்பு ரொம்ப சீரியஸா இருக்கு. அவங்களுக்கு எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை..
அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தானே.

சொல்லலாம் ஆனாலும் அம்மா கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யச் சொல்வாங்க..
உடனே எப்படிச் செய்ய முடியும் விஜய், வீட்ல அக்கா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிறா, இந்த நிலையில எனக்குக் கல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவ வாழ்க்கை வீணாயிடாதா?

அதுக்கு இப்ப என்ன செய்யறது வாத்ஸ், உனக்கு அக்கா வாழ்க்கை, எனக்கு அம்மாவின் ஆசை..
ஆமாம் விஜய், ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவிற்கு வந்திருக்கேன்.. உங்க அம்மாவின் விருப்பப்படி ஒரு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்குங்க. அதுதான் நமக்கு முன்னால இருக்கும் ஒரே வழி..

வாத்ஸ் இதெப்படி முடியும்..
இல்லை விஜய், நம்ம காதலால நாம யாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியலை... அப்படிப்பட்ட காதல் அழிஞ்சே போயிடட்டும்..

வாத்ஸல்யா திட்டமாக சொல்லி விட்டு எழுந்து பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள்.


--------------------x---------------------x----------------------x----------------x--------------
பேருந்து நிறுத்தத்தில்

என்ன அக்கா, இங்க நின்னுகிட்டு இருக்கே...

வாத்ஸல்யா, வத்சலாவின் கைகளைப் பிடிக்க,

சும்மா ஃபிரண்ட்ஸோட வந்தேன்.. வத்சலா சற்றுத் திரும்பி கண்ணில் தூசு விழுந்தாற் போலக் கண்களைத் துடைத்துக் கொள்ள...

வாத்ஸல்யாவும் துடைத்துக் கொண்டாள்.

தூரத்தில் அலைகள் புதியக் கதையை தங்களுக்குள் இரைச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்தன

No comments:

Post a Comment