Tuesday, December 1, 2009

வேற்றுமையில் ஒற்றுமை.

மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதோ உங்கள் பார்வைக்கு!

==============================================================================================



வேற்றுமையில் ஒற்றுமை என்பது இன்றைய உலகிற்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். உலகம் பல இனங்களும் பண்பாடுகளும் கொண்ட மக்களைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இப்படிப்பட்ட பல்வகை வேறுபாடுகள் கொண்ட சமுதாயங்களை இணைத்து அனைவரும் புரிந்துணர்வுடனும் சாந்தியுடனும் வாழ வழி வகுக்கிறது. பலமொழிகள், பல இனங்கள், பலமதங்கள், பலநிறங்கள் எல்லாம் கலந்துதான் அழகான உலகம் படைக்கப் பட்டிருக்கிறது.

இயற்கையைப் பாருங்கள். எத்தனை விதமான மலர்கள். எத்தனை நிறங்கள்.. எத்தனையெத்தனை விதமான நறுமணங்கள். இப்படியெல்லாம் இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் சலிப்பை மட்டுமே தருமல்லவா?

மரங்கள், கொடிகள், சிறுசெடிகள், புற்கள் என வகை வகையான தாவரங்கள். மேடுகள் பள்ளங்கள், குன்றுகள், காடுகள் மலைத் தொடர்கள், பாலைவனங்கள் என விதவிதமான நிலப்பரப்புகள். ஏரிகள், கடல்கள், ஆறுகள் என பலவிதமான நீர்பரப்புகள், பகல், இரவு, அந்தி, அமாவசை பௌர்ணமி என வான வித்தைகள். வித விதமான விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், இப்படிப் பலவித வேற்பாடுகள் ஒருங்கிணைந்திருப்பதாலேயே உலகம் என்பது சலிப்பூட்டுவதாக இல்லாமல் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஒவ்வொரு ரோஜாமலருக்கும் இடையே கூட வித்தியாசங்கள் உண்டு. இந்த வித்தியாசங்கள் தான் ஒவ்வொருவருக்கும் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அளிக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவரே. நாம் அனைவரும் கடவுளின் சிறப்புக் குழந்தைகள்.

இந்தச் சிறப்புகள் நாம் ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் அன்பும் கொள்வதற்கு காரணமாய் அமைகிறது. எனவே வேறு வேறு இனத்தவர், மொழியினர் ஆகியோரைக் காணும் பொழுது அன்பு, மரியாதை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தத் தயங்குதல் கூடாது.

கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள், இன, மத, மொழி, நிற வேறுபாடுகள் நம்மை மற்ற மனிதர்களிடம் இருந்து பிரித்து வைக்க அல்ல. அதைவிட அத்தனை வேறுபாடுகளையும் மனதால் களைந்தால் மட்டுமே உண்மை என்பது தன்னை வெளிப்படுத்தும்.


ஒவ்வொரு கட்டிடமும் பல்வேறு வகையான கற்களால் கட்டப்பட்டவை. ஒவ்வொரு கல்லும் மற்றக் கற்களைச் சார்ந்திருக்கின்றன. ஒவ்வொரு கல்லிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு கல் உடைந்தால் கூட கட்டிடம் சிறிதளவாவது பலமிழக்கும். அதைப் போல நாட்டிற்கு ஒவ்வொரு குடிமகனும் முக்கியம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் இந்தியத் திருநாடாகும். இங்குதான் எத்தனை விதமான மனிதர்கள் மொழிகள், கலாச்சாரங்கள், நிறங்கள், மொழிகள்… நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து உலகிற்கே வழிகாட்டியாக வாழ்கிறோம்.

சமுதாய வளர்ச்சியின் உச்ச கட்டம் வேற்றுமையில் ஒற்றுமை. இதுவே மனித குலப் பண்பாட்டின் சிகரமும் ஆகும். உண்மை அன்போடு, வேற்றுமைகளை மதித்துப் போற்றி நன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வதின் மூலம் மனித இனம் மகோன்னத நிலையை எட்டும்

1 comment: